Published : 11 Mar 2017 09:59 AM
Last Updated : 11 Mar 2017 09:59 AM

உலக மசாலா: அம்மாவுக்காகப் பெண் உடைகளை அணியும் லி யிங்லாய்!

சீனாவைச் சேர்ந்த 74 வயது லி யிங்லாய், கடந்த 14 ஆண்டுகளாக வார இறுதி நாட்களில் பெண்கள் உடைகளை அணிந்துகொள்கிறார். குன்மிங் பகுதியிலுள்ள க்ரீன் லேக் பூங்காவில் நடனமாடி சுற்றுலாப் பயணிகளை மகிழ்விக்கிறார். இது இவரது தொழில் அல்ல. தன்னுடைய 96 வயது அம்மாவை மகிழ்விப்பதற்கே பெண் உடைகளை அணிவதாகச் சொல்கிறார். “என் அம்மாவுக்கு இரண்டுமே ஆண் குழந்தைகள். ஒரு பெண் குழந்தை வேண்டும் என்று மிகவும் விரும்பினார். சின்ன வயதில் எனக்குப் பெண் குழந்தைகளுக்கான உடைகளைப் போட்டு அழகு பார்ப்பார். விவரம் அறிந்தபிறகு, நான் பெண்களின் உடைகளைப் போட்டுக்கொள்ள மறுத்துவிட்டேன். அவர் மிகவும் கவலையடைந்தார். ஆனால் நான் உறுதியாக மறுத்துவிட்டேன். அம்மா மீது அளவற்ற அன்பும் மரியாதையும் எனக்கு இருந்தது. அதனால் திருமணம் செய்துகொள்ளாமல் அம்மாவுடனே இருந்துவிட்டேன். எனக்கு வயதானபோதுதான் அம்மாவின் விருப்பத்தை இப்படி உதாசீனப்படுத்திவிட்டோமே என்ற எண்ணம் வந்தது. அம்மாவை மகிழ்விக்கவே பெண் உடைகளை அணிய ஆரம்பித்தேன். உடைகளுக்கு ஏற்ப கண்ணாடி, காதணிகள், மோதிரம், விரல்களுக்கு நகப்பூச்சு, சடை எல்லாம் போட்டுக்கொண்டேன். என் அம்மாவின் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. இவ்வளவு அலங்காரம் செய்து வீட்டிலேயே ஏன் இருக்கணும் என்று தோன்றியது. அதனால் அருகில் இருக்கும் பூங்காவுக்குச் சென்று நடனமாட ஆரம்பித்தேன். எல்லோரும் என்னைப் பாராட்டினார்கள். புகைப்படங்கள் எடுத்துக்கொண்டனர்” என்கிறார் லி யிங்லாய்.

அம்மாவுக்காகப் பெண் உடைகளை அணியும் லி யிங்லாய்!

நெதர்லாந்தில் கடந்த 22 ஆண்டுகளாக இயங்கிவருகிறது பன்றிகள் சரணாலயம். இங்கே கசாப்புக் கடைகளில் இருந்து மீட்கப்பட்ட பன்றிகள், நோய்வாய்ப்பட்ட பன்றிகள், ஆதரவற்ற பன்றிகளுக்கு நல்ல சூழ்நிலை, நல்ல உணவு, மசாஜ் போன்றவை அளிக்கப்பட்டு வளர்க்கப் படுகின்றன. இந்தத் தன்னார்வத் தொண்டு நிறுவனத்தை டேஃபின் வெஸ்டர்ஹோஃப் என்ற விலங்குகள் நல ஆர்வலர் நடத்தி வருகிறார். கடந்த 20 ஆண்டுகளில் ஆயிரக்கணக்கான பன்றிகளைக் காப்பாற்றி, நல்ல சூழலை ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறார். “நான் முழு நேரமாக இங்கே பணியாற்றி வருகிறேன். பன்றிகளைக் கவனித்துக் கொள்ள தன்னார்வலர்கள் இருக்கிறார்கள். பன்றிகளுக்கான உணவை நானே தயார் செய்துவிடுவேன். இடத்தைச் சுத்தம் செய்வது, பன்றி களுக்கு மசாஜ் செய்வது, குளிப்பாட்டுவது, விளையாடுவது என்று நாள் முழுவதும் வேலை இருந்துகொண்டே இருக்கும். உடல் நலம் குன்றிய பன்றிகளை அழைத்துச் செல்ல ஆம்புலன்ஸ் வைத்திருக்கி றோம். எங்கள் சரணாலயத்துக்குப் பார்வையாளர்கள் அதிகம் வருகிறார் கள். வார இறுதி நாட்களில் பட்டறைகள் நடத்தி வருகிறோம். பன்றிகள் குறித்த புரிதல்களையும் விழிப்புணர்வையும் ஏற்படுத்துகிறோம். பார்வையாளர்கள் பன்றிகளுடன் பழகலாம். மசாஜ் செய்துவிடலாம். விளையாடலாம். உணவளிக்கலாம். சில பன்றிகள் வாடிக்கையாளர்களை நினைவில் வைத்துக்கொண்டு, அவர்களைக் கண்டதும் மசாஜ் செய்து விடச் சொல்கின்றன, கட்டிப் பிடிக்கச் சொல்கின்றன. பன்றிகளும் செல்லப் பிராணியாக வளர்க்க ஏற்ற விலங்குகள்தான். மறதி நோய், மூட்டு வலியால் பாதிக்கப்பட்ட பன்றிகளைத் தனியே வைத்திருக்கிறோம். அவற்றை யாரும் தொந்தரவு செய்ய அனுமதிப்பதில்லை. எங்களின் சேவையைப் பார்த்து ஏராளமானவர்கள் ஆர்வத்துடன் நன்கொடை அளிக்கிறார்கள்” என்கிறார் டேஃபின் வெஸ்டர்ஹோஃப்.

பன்றிகளுக்காக ஒரு சரணாலயம்!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x