Published : 24 Mar 2015 10:33 AM
Last Updated : 24 Mar 2015 10:33 AM

உலக மசாலா: அம்மாவான சகோதரன்!

பிரிட்டனில் வசிக்கிறார்கள் இரட்டைக் குழந்தைகளான ஆரோன் க்ளார்க் ஜேசன் க்ளார்க். ஆரோன் டவுன் சிண்ட்ரோமால் பாதிக்கப்பட்ட குழந்தை. காது கேட்காது. சரியாகப் பேச வராது. அரோனின் பள்ளிப் படிப்புக்காக ஜேசன் தன்னுடைய விளையாட்டுப் பொருட்களை எல்லாம் விற்று, 37 ஆயிரம் ரூபாய் கொடுத்திருக்கிறான்.

சிறப்புக் குழந்தைகளுக்கான பள்ளியில் ஆரோன் படித்து வருகிறான். மாலை நேரங்களில் பள்ளிப் பூங்காவில் ஜேசனும் அவனது நண்பர்களும் சேர்ந்து தோட்ட வேலை செய்கிறார்கள். இதில் இருந்து கிடைக்கும் வருமானம் முழுவதும் ஆரோனைப் போன்ற சிறப்புக் குழந்தைகளின் நலனுக்குச் செலவிடுகிறார்கள். இதற்காக ஓர் அறக்கட்டளையும் ஆரம்பிக்கப்பட்டிருக்கிறது.

பெற்றோரும் பள்ளியின் நிர்வாகிகளும் 11 வயது ஜேசனின் முயற்சியைப் பெரிதும் பாராட்டுகிறார்கள். ஆரோனுடன் கூடவே இருந்து ஒவ்வொன்றையும் மிகப் பொறுமையாகக் கற்றுக்கொடுக்கிறான் ஜேசன். ஓர் அம்மாவைப் போல அத்தனைக் கவனமாகப் பார்த்துக்கொள்கிறான் என்று எல்லோரும் பெருமைகொள்கிறார்கள்.

அடடா! எத்தனை அழகான மனம் ஜேசனுக்கு!

ஆஸ்திரேலியாவின் தென் பகுதியில் கங்காருகள் அதிகம் வசிக்கின்றன. தாகம் கொண்ட கங்காரு ஒன்று, தண்ணீர் வாளிக்குள் தலையை விட்டுவிட்டது. ஆனால் வாளியில் இருந்து மீண்டும் தலையை எடுக்க இயலவில்லை. மூச்சு விட முடியாமல் பார்க்கவும் இயலாமல் மிகவும் அவஸ்தைப்பட்டது. அந்த வழியே வந்த இருவர் கங்காருவைப் பார்த்து அதிர்ச்சியடைந்தனர்.

நீண்ட கயிற்றை எடுத்து வாளியில் கட்டி இழுத்தனர். அப்படியும் தலை வெளியே வரவில்லை. வாளியை ஒருவரும், கங்காருவை இன்னொருவரும் பிடித்து இழுக்க, நீண்ட போராட்டத்துக்குப் பிறகு வாளி தனியே வந்தது. மிரட்சியுடன் இருந்த கங்காரு, தப்பித்த மகிழ்ச்சியில் அங்கிருந்து நிமிடத்தில் ஓடி மறைந்துவிட்டது.

உதவியவர்களுக்கு நன்றி!

லாவோஸ் நாட்டில் சீனச் சுற்றுலாப் பயணிகளைக் கவர்வதற்காக தடை செய்யப்பட்டுள்ள விலங்குகளின் இறைச்சி விற்கப்படுவதாக லண்டனில் உள்ள சுற்றுச்சூழல் அமைப்பு அறிக்கை வெளியிட்டிருக்கிறது. சாதாரணமாகக் கடைகளில் கிடைக்காத புலி, கரடி, எறும்பு தின்னி போன்றவற்றின் இறைச்சிகளை விற்பனை செய்து வருகின்றன சில உணவு விடுதிகள்.

லாவோஸ் மட்டுமில்லை, மியான்மர், தாய்லாந்து போன்ற நாடுகளிலும் இவை விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. புகைப்படங்களுடன் கூடிய ஆதாரத்துடன் இந்தச் செய்தி வெளியிடப்பட்டிருக்கிறது. இந்த இறைச்சிகள் மனித உடலுக்கு நல்லது என்றும் சில வகை நோய்களைச் சரி செய்யும் என்றும் நம்புவதால், சுற்றுலா வரும் சீனர்கள் விரும்பிச் சாப்பிடுவதாகச் சொல்கிறார்கள்.

அடக் கொடுமையே…

சுமார் 10 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் பூமியை ஆட்சி செய்துகொண்டிருந்தன கம்பளி யானைகள் (Wooly mammoth). இன்றைய யானைகளின் மூதாதையரான கம்பளி யானைகள் 4 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு முற்றிலும் அழிந்துவிட்டதாகச் சொல்கிறார்கள். ஆர்டிக் பிரதேசத்தில் புதைந்திருக்கும் கம்பளி யானைகளின் உடலிலிருந்து டிஎன்ஏ எடுத்து, மீண்டும் மறு உருவாக்கம் செய்யும் முயற்சியில் விஞ்ஞானிகள் ஈடுபட்டுள்ளனர்.

இன்றைய ஆப்பிரிக்க யானைகளின் உருவத்தை ஒத்திருந்த கம்பளி யானையின் உடலில், குளிரைத் தாங்கும் விதத்தில் ரோமங்கள் வளர்ந்திருந்தன. ரஷ்யா, தென் கொரியா, ஆர்டிக் பகுதிகளில் கிடைத்த புதைப்படிமங்களை வைத்து மூன்று குழுக்களாகப் பிரிந்து விஞ்ஞானிகள் மறுஉருவாக்கத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த முயற்சி விரைவில் வெற்றி பெறும் என்று நம்பிக்கைத் தெரிவிக்கிறார்கள்.

போற போக்கைப் பார்த்தால் ஜுராஸிக் பார்க் எல்லாம் கூட நிஜமாகிடும் போல!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x