Published : 01 Feb 2017 09:54 AM
Last Updated : 01 Feb 2017 09:54 AM

உலக மசாலா: அம்மாடி! எவ்வளவு உயரம்!

அமெரிக்காவில் வசித்துவரும் 16 வயது ராபர்ட் பாப்ரோஸ்கி, 7 அடி 7 அங்குல உயரம் இருக்கிறார்! கூடைப் பந்து வீரரான இவர், தேசிய கூடைப்பந்து அசோசியேஷன் வரலாற்றில் இடம்பெற்ற மிக உயரமான மனிதர் என்ற சிறப்பைப் பெற்றிருக்கிறார். ருமேனியாவைச் சேர்ந்த ராபர்ட், 12 வயதிலேயே 7 அடி உயரத்தை எட்டிவிட்டார். 4 ஆண்டுகளில் வளர்ச்சி விகிதம் குறைந்திருக்கிறது. ஆனாலும் 8 அடி உயரத்தை எட்டக்கூடிய வாய்ப்பு இருக்கிறது. மருத்துவ வரலாற்றில் 18-வது உயரமான மனிதர் என்ற முத்திரையைப் பதித்துவிட்டார். ராபர்ட்டுக்கு எடைதான் மிகவும் பிரச்சினைக்குரியதாக இருக்கிறது. 86 கிலோ எடையுடன் தேசிய கூடைப்பந்து அசோசியேஷனில் விளையாடுவது கடினம். விரைவில் எடையை அதிகரிக்க வேண்டும். 2 ஆண்டுகளுக்கு முன்பு ராபர்ட் குறித்த செய்தி ஃபேஸ்புக்கில் வெளிவந்து, உலகம் முழுவதும் பிரபலமானார். ராபர்ட்டின் அப்பா தொழில்முறை கூடைப்பந்து வீரர். ருமேனியா தேசிய அணிக்காக விளையாடியவர். மகனின் எதிர்காலம் சிறப்பாக அமைய வேண்டும் என்பதற்காக அமெரிக்கா வந்துவிட்டனர். “நாங்கள் ராபர்ட்டின் தசைகளை வலுப்படுத்தும் முயற்சிகளில் இறங்கியிருக்கிறோம். வாரத்துக்கு 3 நாட்கள் பயிற்சியளிக்கிறோம். உணவு முறையிலும் மாற்றத்தைக் கொண்டு வந்திருக்கிறோம். அளவுக்கு அதிகமான உயரம் மைதானத்தில் வேகமாக ஓடுவதற்குச் சிரமத்தைத் தருகிறது. ஆனால் ராபர்ட்டின் கைக்குப் பந்து வந்துவிட்டால் எளிதாக கோல் போட்டு விட முடிகிறது” என்கிறார் பயிற்சியாளர் பாபி போஸ்மன். 16 வயதில் மிக உயரமான கூடைப்பந்து வீரராக இருக்கும் ராபர்ட் பாப்ரோஸ்கி, உலக அளவில் கூடைப்பந்து விளையாடும் இரண்டாவது உயரமான மனிதர். இங்கிலாந்தைச் சேர்ந்த 29 வயது பால் ஸ்டர்கெஸ் 7 அடி 8 அங்குல உயரத்தில் கூடைப்பந்து வீரராக இருந்திருக்கிறார்.

அம்மாடி! எவ்வளவு உயரம்!

சீனாவின் நான்ஜிங் பகுதியில் உள்ள ஒரு பள்ளியில், மாணவர்களுக்காக ‘மதிப்பெண் வங்கி’ ஆரம்பிக்கப்பட்டிருக்கிறது. இந்த வங்கியில் மாணவர்கள் மதிப்பெண்களைக் கடனாகப் பெற்றுக்கொள்ளலாம். அடுத்து வரக்கூடிய தேர்வுகளில் அதிகமான மதிப்பெண்களைப் பெற்று, கடனைத் திருப்பியடைத்துவிட வேண்டும். “இந்த மதிப்பெண் வங்கி மாணவர்களிடம் அதிக வரவேற்பைப் பெற்றிருக்கிறது. ஒரு மதிப்பெண்ணில் தோல்வியடைபவரும் 10 மதிப்பெண்களில் தோல்வியடைபவரும் இந்த வங்கியில் மதிப்பெண்களைக் கடன் பெற்று, தேறிவிட முடியும். ஆனால் அடுத்து வரக்கூடிய தேர்வுகளில் அதிக மதிப்பெண்களைப் பெற்று, வட்டியுடன் சேர்த்து வங்கிக்குத் திருப்பியளித்துவிட வேண்டும். சில ஆசிரியர்கள் பரிசோதனைக் கூடம், பேச்சுப் போட்டி போன்றவற்றைச் சிறப்பாகச் செய்யும் மாணவர்களுக்கு மதிப்பெண்களை வழங்கி, கடனை அடைக்க உதவுகிறார்கள். பத்தாம் வகுப்பில் 49 மாணவர்களில் 13 மாணவர்கள் வங்கியிலிருந்து மதிப்பெண்களைக் கடனாகப் பெற்றிருக்கிறார்கள். இது பரிசோதனை முயற்சிதான். ஆனாலும் நல்ல பலனைத் தருகிறது” என்கிறார் பள்ளியின் இயக்குநர் கான் ஹுவாங். மதிப்பெண் வங்கிக்கு மாணவர்கள் மத்தியில் ஆதரவு இருந்தாலும் பலரும் எதிர்க்கின்றனர். இது அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்படாத நடைமுறை.

மதிப்பெண்கள் கடன் கொடுக்கும் வங்கி!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x