Published : 02 Mar 2016 10:10 AM
Last Updated : 02 Mar 2016 10:10 AM

உலக மசாலா: அமேசான் மழைக்காட்டு மர்ம நதி!

பெரு நாட்டுப் பகுதி அமேசான் மழைக்காடுகளில் மர்மமான நதி ஒன்று ஓடிக்கொண்டிருக்கிறது. 6.4 கி.மீ. நீளத்துக்கு இந்த நதியின் நீர் வெப்ப நீராக மாறி இருக்கிறது. 50 டிகிரியிலிருந்து 90 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் நிலவுகிறது. சில இடங்களில் அதிகபட்சமாக 100 டிகிரி செல்சியஸ் வெப்பம் காணப்படுகிறது. இந்த நதிக்குள் தவறி விழும் விலங்குகள் சில நிமிடங்களில் உயிரிழந்து, மிதக்கின்றன. வெப்ப நதிக்குப் பல காரணங்களைக் கதைகளாகச் சொல்கிறார்கள்.

1930-ம் ஆண்டு முதலே வெப்ப நீர் நதி பற்றிய குறிப்புகள் இருக்கின்றன. ஆனால் இந்த நீர் ஏன் வெப்பமாக மாறுகிறது என்பதற்குச் சரியான அறிவியல் விளக்கம் இன்றுவரை கிடைக்கவில்லை. அமேசானிலிருந்து 400 மைல்கள் தூரத்தில் ஓர் எரிமலை இருக்கிறது. அதனால் எரிமலையில் இருந்தும் இந்த நீர் வருவதற்கான வாய்ப்பில்லை என்கிறார்கள். ரூஸோ என்ற இளம் விஞ்ஞானி இந்தப் பகுதிக்கு வந்து, ஆராய்ச்சி செய்த பிறகு தன்னுடைய அனுபவங்களைப் புத்தகமாக எழுதியிருக்கிறார்.

‘‘தண்ணீருக்குள் கை வைத்தபோது, மிகவும் சூடாக இருந்தது. சட்டென்று கையை எடுத்துவிட்டேன். தவறி விழுந்தால் உயிர் பிழைக்க முடியாது. ஆற்றில் இருந்து ஆவி வந்துகொண்டே இருக்கிறது. இந்தத் தண்ணீருக்கு மருத்துவ குணங்கள் இருப்பதாகச் சொல்கிறார்கள். இந்தப் பகுதிக்கு வருவது அத்தனை எளிதல்ல. அதிக வெப்பமாக இருக்கிறது. விஷப் பூச்சிகள் கடிக்கும். இங்கே வருவதே ஆபத்தான விஷயம்’’ என்கிறார் ரூஸோ.

மனிதன் இன்னும் கண்டுபிடிக்க வேண்டிய விஷயங்கள் ஏராளம் உள்ளன…

அமெரிக்காவைச் சேர்ந்த டிசைனர் சூசன் மெக்லெரி புதிய ஆபரணங்களை உருவாக்கி வருகிறார். தாவரங்களில் இருந்து உருவாக்கப்படும் நெக்லஸ், தோடு, மோதிரம், பிரேஸ்லெட் போன்றவற்றுக்கு ஏராளமான வரவேற்பு இருக்கிறது. 2 முதல் 4 வாரங்களில் வளரும் தாவரங்களின் பகுதிகளை வைத்து இந்த நகைகளை உருவாக்குகிறார் சூசன். ‘’எனக்குத் தாவரங்கள் மீதும் ஆபரணங்கள் மீது ஆர்வம் அதிகம். பூங்கொத்துகளை உருவாக்கிக் கொடுக்கும் பணியைச் செய்து வந்தேன். என்னுடைய தோழிகள் நகைகள் டிசைன் செய்து கொடுக்கச் சொன்னார்கள். தாவரங்களையும் நகைகளையும் இணைத்து புது ஃபேஷனை உருவாக்கி விட்டேன். என்னுடைய தாவர நகைகள் பிரத்யேகமானவை.

திருமணம், பிறந்தநாள் போன்ற விசேஷங்களுக்குப் பயன்படுத்தக் கூடியவை. நானே ஒவ்வொரு நகையையும் என் கைகளால் உருவாக்குகிறேன். இங்கே என்ன தாவரங்கள் வளர்கின்றனவோ, அவற்றை வைத்தே நகைகளை உருவாக்குகிறேன். இந்த நகைகளை மென்மையாகக் கையாண்டால் சில வாரங்கள் வரை பயன்படுத்த முடியும். அமெரிக்காவில் மணப்பெண்கள் இந்த நகைகளை விரும்பி அணிய ஆரம்பித்துவிட்டனர். எளிமையும் அழகும் இந்த நகைகளில் மிளிர்கின்றன. 1,400 ரூபாயிலிருந்து 20 அயிரம் ரூபாய் வரை தாவர ஆபரணங்களை விற்பனை செய்து வருகிறேன்’’ என்கிறார் சூசன்.

எளிய பொருளில் செய்தாலும் விலை எளிமையாக இல்லையே சூசன்?



FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x