Published : 14 Jun 2017 10:10 AM
Last Updated : 14 Jun 2017 10:10 AM

உலக மசாலா: அப்படியே குடிக்கலாம்!

பஸ் டி க்ரூட், பால் மீது அளவற்ற ஆர்வம் கொண்டவர். காய்ச்சாத பாலை சுவைத்த பின்னர், ஒரு நாளைக்கு 3 முதல் 4 லிட்டர் பாலைக் குடிக்க ஆரம்பித்துவிட்டார். காய்ச்சாத பாலைக் குடிக்கும்போதுதான் பாலின் உண்மையான சுவை தெரிகிறது. ஒவ்வொரு மாட்டுக்கும் பாலின் சுவை வேறுபடுகிறது. நெதர்லாந்தின் பல பகுதிகளுக்கும் சென்று பாலைச் சுவைத்து, ஆராய்ச்சி செய்துவிட்டார். தற்போது உலகம் முழுவதும் சென்று, காய்ச்சாத பாலைச் சுவைக்கும் முயற்சியிலும் பாலைப் பற்றிய பயனுள்ள தகவல்களைப் பகிர்ந்துகொள்ளும் முயற்சியிலும் இறங்கியிருக்கிறார். “நான் பாலின் சுவைக்கு அடிமை. மூன்றுவேளையும் காய்ச்சாத பாலைக் குடித்துவிட்டு உயிர் வாழ்ந்துவிடுவேன். ஒவ்வொரு மாடும் பிரத்யேக சுவை கொண்ட பாலைத் தருகிறது. நிலம், அதில் விளையும் புற்கள், தீவனம் போன்றவையும் பாலுக்கு சுவையளிப்பதில் முக்கியப் பங்காற்றுகின்றன. புல் சாப்பிடும் மாட்டின் பாலுக்கும் சோளம் சாப்பிடும் மாட்டின் பாலுக்கும் கொழுப்பிலும் சத்துகளிலும் நிறைய வித்தியாசம் இருக்கிறது. கடைகளில் கிடைக்கும் பாலை நான் வெறுக்கிறேன். பாலைப் பதப்படுத்துவதற்காக கொழுப்பையும் சத்துகளையும் அதிகரிக்கிறார்கள், குறைக்கிறார்கள். இதனால் பாலுக்கு சுவையே கிடைப்பதில்லை. பதப்படுத்தப்பட்ட பாலை, பால் என்று கூட சொல்ல முடியாது. அது ஒரு பானம். பால் அதிக அளவில் சுரப்பதற்கு ஊசி போடாத மாடுகளின் பாலை, காய்ச்சாமல் குடிக்கலாம். நோயாளிகள், கர்ப்பமாக இருப்பவர்களைத் தவிர்த்து மற்றவர்கள் அனைவரும் காய்ச்சாத பாலைக் குடிப்பது பாதுகாப்பானது” என்கிறார் க்ரூட்.

காய்ச்ச வேண்டாம்; அப்படியே குடிக்கலாம்!

பிரேசிலைச் சேர்ந்த டாட்டூ கலைஞர் மேகான் வெஸ்லி கைது செய்யப்பட்டுள்ளார். 17 வயது இளைஞர் ஒருவரை சித்திரவதை செய்து, நெற்றியில் ‘நான் ஒரு திருடன்’ என்று டாட்டூ போட்டிருக்கிறார். இந்த விஷயம் வீடியோ எடுக்கப்பட்டு, சமூக வலைதளங்களில் பரவி, உலகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்திவிட்டது. “இருவர் என்னிடம் வந்து, 17 வயது இளைஞருக்கு நெற்றில் டாட்டூ போடச் சொன்னார்கள். அந்த இளைஞர் மிகவும் பரிதாபமாக இருந்தார். அவர் சைக்கிளைத் திருடி விட்டதால், ‘நான் ஒரு திருடன்’ என்று நெற்றியில் எழுதும்படி கேட்டுக்கொண்டனர். நான் மறுத்தேன். ஆனால் அவர்கள் என்னை விடவில்லை. வற்புறுத்தி செய்ய வைத்தனர்” என்கிறார் மேகான் வெஸ்லி. வீடியோவைப் பார்த்த இளைஞரின் குடும்பம் அதிர்ந்து போனது. காவல் துறையில் புகார் செய்தது. மே 31 அன்று காணாமல் போன இந்த இளைஞருக்கு போதைப் பழக்கம் இருந்தது என்றும் மனிதாபிமானம் இன்றி டாட்டூ வரைந்த கலைஞர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டது. மேகான் வெஸ்லியும் டாட்டூ வரையச் சொன்ன இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். சைக்கிள் திருடியவனுக்கு பாடம் புகட்டவே இந்தச் செயலை மேற்கொண்டதாகத் தெரிவித்தனர். பாதிக்கப்பட்ட இளைஞர், தான் சைக்கிள் திருடவில்லை என்று சொல்லிவிட்டார். அவரின் டாட்டூவை அழிப்பதற்கும் அவரது உடல், மன நிலையைத் தேற்றுவதற்கும் பொதுமக்களே நன்கொடை வசூலித்து வருகின்றனர்.

மனிதாபிமானமில்லாத செயல்…

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x