Published : 11 Mar 2015 10:41 AM
Last Updated : 11 Mar 2015 10:41 AM

உலக மசாலா: அபூர்வ காகங்கள்!

வாஷிங்டனில் வசிக்கும் கபிமனுக்கு வித்தியாசமான நண்பர்கள். தினமும் கபிக்கு நண்பர்களிடமிருந்து பரிசுப் பொருட்கள் வந்துகொண்டே இருக்கின்றன. கரையும் காகங்கள்தான் கபியின் நண்பர்கள். பக்கத்து வீட்டுச் சுவர்களில் வந்து அமரும் காகங்களுக்கு 4 ஆண்டுகளுக்கு முன்பு உணவு கொடுக்க ஆரம்பித்தாள் கபி.

விரைவில் காகங்களுக்கும் கபிக்கும் நல்ல புரிதல் ஏற்பட்டது. உணவு கொடுப்பது, தண்ணீர் வைப்பது, குளிப்பாட்டுவது என்று கபியின் சேவைகள் விரிவடைந்தன. காகங்கள் தங்கள் பங்குக்குத் தினமும் ஏதாவது ஒரு பொருளைக் கொண்டு வந்து கபியிடம் கொடுக்க ஆரம்பித்தன. நகைகள், பளிங்குக் கற்கள், பட்டன்கள், ஜெம் க்ளிப், ஸ்க்ரூ என்று என்ன கிடைக்கிறதோ அவற்றை எல்லாம் கொண்டு வந்து கொடுக்கின்றன.

காகங்கள் கொடுத்த பரிசுப் பொருட்களைப் பத்திரமாகக் காட்சிக்கு வைத்திருக்கிறாள் கபி. `வேர்க்கடலையும் நாய் உணவுகளையும் காகங்கள் விரும்பிச் சாப்பிடுகின்றன. நான் கொஞ்சம் தாமதமானாலும் சரியான நேரத்துக்கு வந்து, டெலிபோன் கம்பிகளில் அமர்ந்தபடி காத்திருக்கின்றன’ என்கிறாள் கபி. காகங்களால் மனித சமிக்ஞைகளைப் புரிந்துகொள்ள முடியும்.

தங்கள் எண்ணங்களையும் வெளிப்படுத்த முடியும்… நம்பிக்கை வந்துவிட்டால் காகங்கள் மனிதர்களுக்கு வெகு அருகில் வசிக்க விரும்புகின்றன. ஆனாலும் காகங்கள் பரிசு கொடுக்கும் சம்பவத்தை முதல் முறையாக கேள்விப்படுவதாகத் தெரிவித்திருக்கிறார்கள் வாஷிங்டன் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள்.

அபூர்வ காகங்கள்!

அமெரிக்காவில் ஓரிகன் மாகாணத்தில் வசிக்கிறார் நடாலி ஃப்ளெட்சர். மனித உடலில் வரையும் கலைஞர்களில் இவர் வித்தியாசமானவராக இருக்கிறார். இல்லாத ஒன்றை இருப்பது போலக் காட்டும் ஆப்டிகல் இல்யூஷன் என்ற மாயத் தோற்றத்தை வரைவதில் சிறந்தவராக இருக்கிறார். மஞ்சள், பச்சை, வெளிர் நீலம் போன்ற வண்ணங்களில் கறுப்பு வண்ணத்தைக் கோடுகளாக வரைகிறார்.

அத்தனை அட்டகாசமாகப் பார்ப்பவர்களை ஏமாற்றி விடுகின்றன இந்த ஓவியங்கள். கல்லூரிப் படிப்பை முடித்து வேலை தேடிக்கொண்டிருந்த நடாலியின் பார்வையில் `பாடி பெயிண்டர்’ வேலை தென்பட்டது. குழந்தையிலிருந்தே ஓவியத்தின் மீது ஆர்வம் கொண்ட நடாலி, பயிற்சி எடுத்துக்கொண்டு இந்த வேலையில் இறங்கிவிட்டார்.

அடடா! பிரமாதம் நடாலி!

முட்டையின் வடிவத்தைக் கொஞ்சம் மாற்றினால் எப்படி இருக்கும்! முட்டையின் வடிவத்தை மாற்றக்கூடிய மோல்ட்கள் லண்டனில் விற்பனைக்கு வந்துள்ளன. முட்டைகளை வேக வைத்து, ஓடுகளை நீக்க வேண்டும். மோல்டில் முட்டையை வைத்து, மூட வேண்டும். குளிர்ந்த நீரில் சில நிமிடங்கள் வைத்துவிட வேண்டும்.

பிறகு எடுத்து, மோல்டைத் திறந்தால் அழகான கோல்ஃப் பந்து போல உருண்டையாகவும் புள்ளிகளுடனும் முட்டை காணப்படும். விளையாட்டில் ஆர்வமுள்ளவர்களும் குழந்தைகளும் இந்த வடிவ முட்டையை விரும்பிச் சாப்பிடுகிறார்கள். கேரட்களின் தோல்களை நீக்கும் ஷார்ப்னர்களும் இப்பொழுது விற்பனைக்கு வந்திருக்கின்றன.

எப்படியெல்லாம் யோசிக்கிறாங்க…

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x