Published : 01 Jun 2016 11:01 AM
Last Updated : 01 Jun 2016 11:01 AM

உலக மசாலா: அன்புக்கு எல்லை இல்லை!

பாட்டிகள் அனைவருக்கும் தங்கள் பேரக் குழந்தைகள் மீது அளவற்ற அன்பு இருக்கும். வட கரோலினாவைச் சேர்ந்த 66 வயது கார்மென் பாக், பேரக்குழந்தைகள் மீது அன்பு செலுத்துவதில் அடுத்த கட்டத்துக்குச் சென்றுவிட்டார்! அவரது வீடு முழுவதையும் பேரக் குழந்தைகளின் வண்ணப் புகைப்படங்களால் நிறைத்திருக்கிறார். வீட்டின் சுவர்கள், திரைச் சீலைகள், சோஃபா உறைகள், குஷன் உறைகள், துண்டுகள், சட்டைகள், காபி கோப்பைகள் என்று அனைத்து இடங்களிலும் அழகான குழந்தைகளின் விதவிதமான அணிவகுப்பு கண்களைக் கவர்கின்றன.

’’என் பேரக்குழந்தைகள் என்னை விட்டு வெகு தூரத்துக்குச் சென்றுவிட்டனர். அவர்களின் முகம் என் கண் முன்னே வந்துகொண்டே இருந்தது. அவர்களைப் பார்த்துக்கொண்டே இருக்க வேண்டும் என்ற ஆர்வம் அதிகமானது. அப்போதுதான் இந்த யோசனை உதித்தது. இதுவரை சேமித்து வைத்த படங்களை எடுத்து, வீட்டின் சகல இடங்களிலும் பிரிண்ட் செய்து வைத்துவிட்டேன். அவர்கள் எல்லாம் என்னுடனேயே இருக்கிறது போல அத்தனை சந்தோஷமாக இருக்கிறது. இந்தச் சுவர் வால்பேப்பர்களும் திரைச்சீலைகளும் குஷன் கவர்களும் என் கற்பனையில் உருவானவை என்பது கூடுதல் திருப்தியை அளிக்கிறது. என் கணவரும் என் விருப்பத்துக்கு மிகவும் மதிப்பளித்து, அமைதி காக்கிறார். அக்கம்பக்கத்தினர், நண்பர்கள், உறவினர்கள் அனைவரும் என்னை வெகுவாகப் பாராட்டுகிறார்கள்.

என் மகளுக்கும் மருமகனுக்கும் இது அவ்வளவாகப் பிடிக்கவில்லை. ஆனால் என் பேரக் குழந்தைகளின் சந்தோஷத்தை வார்த்தைகளால் சொல்லவே முடியாது. எனக்கும் என் பேரக்குழந்தைகளுக்கும் சந்தோஷமாக இருக்கும்போது மற்றவர்களைப் பற்றி நான் கவலைப்பட வேண்டியதில்லை. சிலர் என்னைப் பைத்தியம் என்று நேரிலேயே சொல்கிறார்கள். அவர்களைப் பற்றி எனக்குக் கவலை இல்லை. உலகிலேயே மிகவும் பெருமைக்குரிய பாட்டி நான்தான் என்பதில் எனக்கு அளவற்ற பெருமிதம் இருக்கிறது’’ என்கிறார் கார்மென் பாக்.

அன்புக்கு எல்லை ஏது?

ஜப்பானியர்களின் அதிக நேரம் வேலை செய்யும் கலாசாரத்தால் அவர்களுக்குத் தூக்கம் வருவதில்லை. இந்தப் பிரச்சினையைத் தீர்ப்பதற்காக கோகோ கோலா நிறுவனம் சமீபத்தில் ‘ஸ்லீப் வாட்டர்’ என்ற பானத்தை வெளியிட்டிருக்கிறது. இரவில் தூக்கம் வராதவர்கள், தூக்கத்தில் அடிக்கடி விழிப்பவர்களுக்கு இந்த ஸ்லீப் வாட்டர் மிகவும் உதவியாக இருக்கும் என்கிறார்கள். எல்-தியானின், அமினோ ஆசிட் கலந்துள்ள இந்தப் பானத்தைக் குடித்தால், மன அழுத்தம் குறைகிறது. பதற்றம் குறைகிறது. இதனால் இரவில் நிம்மதியான, 8 மணி நேரத் தூக்கம் சாத்தியமாகிறது. ’’ஸ்லீப் வாட்டரில் கஃபின் கலக்கப்படவில்லை. இரவில் குளித்துவிட்டு, ஸ்லீப் வாட்டரைக் குடித்துவிட்டுப் படுக்க வேண்டியதுதான். நல்ல தலையணை, பிடித்த இசை கேட்டபடி படுத்தால் ஒரு சில நிமிடங்களில் தூக்கம் வந்துவிடும். அதிகாலை எழும்போது மிகவும் புத்துணர்ச்சியை உணர்வீர்கள். இதில் எந்தவிதமான ரசாயனமும் கலக்கப்படவில்லை. நிம்மதியான தூக்கம் வருவதற்குத் தாராளமாகப் பயன்படுத்திக்கொள்ளலாம்’’ என்கிறார் ஜப்பானுக்கான கோகோ கோலா அதிகாரி.

இனி தூக்கத்தையும் காசு கொடுத்துதான் வாங்கணுமா?

அமெரிக்காவின் புளோரிடாவில் உள்ள கோல்ஃப் மைதானத்தில் மிகப் பிரம்மாண்டமான முதலை ஒன்று நடந்து சென்றதைப் பார்த்து அனைவரும் அதிர்ச்சியடைந்துவிட்டனர். தண்ணீருக்கு அருகில்தான் பொதுவாக முதலைகள் ஓய்வெடுத்துக்கொண்டிருக்கும். ஆனால் பெரிய மைதானத்தில் மனிதர்களைப் பார்த்தும் கொஞ்சம் கூடப் பதற்றம் இல்லாமல் நடந்து சென்றது முதலை. ’’ஞாயிற்றுக் கிழமை என்பதால் விளையாடுவதற்காக வந்தோம். திடீரென்று ஒரு டைனோசர் மைதானத்துக்குள் நுழைந்துவிட்டதோ என்று தான் நினைத்தேன். பிறகுதான் அது 16 அடி நீளம் கொண்ட மிகப் பெரிய முதலை என்று தெரிந்தது. என்னுடைய கேமராவில் பதிவு செய்துகொண்டேன். ஒரு விளையாட்டு மைதானத்தில் முதலையின் வருகை அச்சத்தை ஏற்படுத்தியிருக்கிறது’’ என்கிறார் வெண்டி ஸ்கோஃபீல்ட்.

பெரிய முதலையைப் பார்த்தால் பயம் வராதா என்ன?



FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x