Published : 25 Mar 2017 09:45 AM
Last Updated : 25 Mar 2017 09:45 AM

உலக மசாலா: அன்னாவின் துயர் துடைக்க யாராவது வரமாட்டார்களா?

சீனாவின் ஜுன்யி நகரின் மலைக் கிராமம் ஒன்றில் வசிக்கிறாள் 5 வயது அன்னா வாங். பிறந்த 3 மாதங்களில் இவளது அப்பா ஜெயிலுக்குச் சென்றுவிட்டார். அம்மா வேறு திருமணம் செய்துகொண்டார். அன்னாவை அவரது பாட்டியும் பாட்டியின் அம்மாவும்தான் வளர்த்தார்கள். பெரிய பாட்டிக்கு 92 வயது. சின்னப் பாட்டிக்கு 75 வயது. இருவராலும் தற்போது எந்த வேலையும் செய்ய முடிவதில்லை. உடல் நலம் குன்றியதால் வீட்டுக்குள் எப்போதாவது நடமாடுகிறார்கள். அன்னா குடும்பத்துக்கென்று உறவினர்களோ, நண்பர்களோ இல்லை. அதனால் தன்னையும் தன்னுடைய பாட்டிகளையும் கவனித்துக்கொள்ளும் பொறுப்பு அன்னாவுக்கு வந்துவிட்டது. அதிகாலை எழுந்து தேநீர் போடுகிறாள். பாட்டிகளைக் கழிவறைக்கு அழைத்துச் செல்கிறாள். பாத்திரங்களைச் சுத்தம் செய்கிறாள். காலை உணவு தயாரிக்கிறாள். வெந்நீர் வைத்து பாட்டிகளைக் குளிக்க வைக்கிறாள். உணவை ஊட்டிவிடுகிறாள். பிறகு பக்கத்து தோட்டங்களுக்குச் சென்று அன்றைய உணவுக்குத் தேவையான கீரைகள், காய்கறிகளைப் பறித்து வருகிறாள். அன்னாவின் கஷ்டத்தை அறிந்தவர்கள், இலவசமாகக் கீரைகளையும் காய்கறிகளையும் எடுத்துச் செல்ல அனுமதித்திருக்கிறார்கள். பாட்டிகளின் மேற்பார்வையில் அன்றைய சமையலைச் செய்து முடிக்கிறாள் அன்னா. வீட்டைச் சுத்தம் செய்தல், துணி துவைத்தல், கணப்பு அடுப்பை மூட்டுதல் என்று நாள் முழுவதும் வேலைகள் இருந்துகொண்டே இருக்கின்றன. மற்ற குழந்தைகளைப் போல அன்னா பள்ளிக்குச் செல்ல முடியவில்லை. விஷயம் வெளியில் தெரிந்து மீடியாக்காரர்கள் அன்னாவின் வீட்டுக்குச் சென்றனர். ஒரு முக்காலியின் மீது ஏறி நின்று, பெரிய பாத்திரங்களை வைத்து அடுப்பில் அன்னா சமைப்பதையும் வெந்நீரைத் தூக்க முடியாமல் தூக்கிச் செல்வதையும் கண்டு அதிர்ந்து போனார்கள்.

ஐயோ… அன்னாவின் துயர் துடைக்க யாராவது வரமாட்டார்களா?

சிலருக்கு ஃபேஸ்புக்கில் அதிகமான நண்பர்கள் இல்லை என்று குறை. பிரிந்த காதலர்களுக்குத் தங்கள் முன்னாள் காதலி, காதலனை விடப் பிரமாதமான புதிய காதலன், காதலியை உலகத்துக்குக் காட்ட விருப்பம். இவர்களுக்காகவே ஃபேமிலி ரொமான்ஸ் என்ற ஜப்பானிய நிறுவனம் போலியான நண்பர்களையும் காதலன், காதலிகளையும் ஏற்பாடு செய்து போட்டோ எடுத்துக் கொடுக்கிறது. “அழகான மாடல்களை வரவழைத்து, அவர்களோடு பேசுவது, சாப்பிடுவது, நடந்து செல்வது போன்று விதவிதமான உடைகளில், விதவிதமான இடங்களில் புகைப்படங்கள் எடுப்போம். இந்தப் புகைப்படங்களைச் சம்பந்தப்பட்டவர் தன்னுடைய ஃபேஸ்புக்கில் பகிர்ந்துகொள்வார். சக ஊழியர்கள், நண்பர்கள் இவர் மீது பொறாமைப்படுவார்கள். இவரது மதிப்பு உயரும். 2 மணி நேரம் புகைப்படங்கள் எடுப்பதற்கு 4,700 ரூபாய் கட்டணம். சுற்றுலாத் தலங்களில் படம் எடுக்க வேண்டும் என்றால் பயணச் செலவு, அறை வாடகை, சாப்பாடு போன்றவற்றுக்கும் செலவு செய்ய வேண்டி யிருக்கும். குடும்பம் இல்லாதவர்களுக்கு அம்மா, அப்பா, அண்ணன், தங்கை போன்றவர்களை ஏற்பாடு செய்து புகைப்படங்கள் எடுத்துக் கொடுக்கிறோம்” என்கிறார் ஃபேமிலி ரொமான்ஸ் நிறுவனர்.

இல்லாத ஒன்றை இருப்பது போல காட்டுவதெல்லாம் அநியாயம்...

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x