Published : 04 May 2017 09:45 AM
Last Updated : 04 May 2017 09:45 AM

உலக மசாலா: அதீத நினைவுத் திறனால் அல்லல்படும் ரெபேக்கா!

ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பேன் நகரில் வசிக்கும் 27 வயது ரெபேக்கா ஷார்ரோக், Highly Superior Authobiographical Memory என்ற அரிய குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளார். இதனால் இவருக்கு தனது வாழ்க்கையில் நடந்த அத்தனை நிகழ்வுகளும் நினைவில் இருக்கின்றன. ஒவ்வொரு நாளும் சாப்பிட்ட உணவுகளிலிருந்து பேசிய பேச்சுகள் வரை நினைவில் உள்ளன. “மூன்று ஆண்டுகளுக்கு முன்பு ஒரு செய்தித்தாளில் இந்தக் குறைபாடு பற்றி படித்தேன். குழந்தையாக இருந்தபோது நடந்தவை கூட நினைவில் இருக்கும் என்பதை நான் நம்பவில்லை. ஆனால் நானே அந்தக் குறைபாட்டால் பாதிக்கப்பட்டபோது, பிறந்த பன்னிரண்டாவது நாளில் நடந்த நிகழ்ச்சிகூட நினைவுக்கு வந்ததைக் கண்டு பிரமித்தேன். மருத்துவமனையிலிருந்து கிளம்பும்போது, என்னை காரில் வைத்து புகைப்படம் எடுத்தார் அப்பா. அந்த கார், காரில் தொங்கிய பொம்மை, அம்மாவின் ஆடை, அப்பாவின் தலை அலங்காரம் என்று அத்தனையும் என் நினைவுக்கு வந்தது! உலகில் இந்தக் குறைபாட்டால் இதுவரை 80 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் பெரும்பாலானவர்களுக்கு முக்கியமான நிகழ்வுகள்தான் நினைவில் இருக்கின்றன. ஆனால் எனக்கு சின்னச் சின்ன விஷயங்கள் கூட நினைவுக்கு வந்துகொண்டிருக்கின்றன. என் முதல் பிறந்தநாளில் எனக்குக் கிடைத்த பரிசை என்னைத் தள்ளிவிட்டு அக்கா எடுத்துக்கொண்டாள். இதைச் சொன்னபோது அம்மாவும் அக்காவும் பயந்து போனார்கள். தொலைக்காட்சிக்காக என்னைப் பேட்டி எடுக்க வந்த அலிசன் லாங்டன், எனக்குப் பிடித்த ஹாரிபாட்டரிலிருந்து ஒரு வரி சொன்னார். அது எந்தப் புத்தகம், எந்த அத்தியாயம், எத்தனையாவது பாரா என்பதைச் சொல்லிவிட்டேன். இவ்வளவு நினைவுத்திறன் இருப்பது வரம் அல்ல, சாபம். மனிதர்கள் என்றால் எல்லா நினைவுகளும் இருக்க வேண்டிய அவசியம் இல்லை. துக்கத்தை மறந்தால்தான் இயல்பாக வாழ முடியும். என்னால் அப்படி எந்தத் துன்பமான நிகழ்வையும் மறக்க முடியவில்லை. யாரைப் பார்த்தாலும் அவருடன் ஏற்பட்ட கசப்பான அனுபவங்கள் நினைவில் வருகின்றன. அதேநேரம் படிப்பில் புலி என்று நினைக்காதீர்கள். இதனால் என்னால் படிக்கவே முடியவில்லை. என்னுடைய மூளையின் உதவியால் அல்ஸைமர் என்ற மறதி நோய்க்கு தீர்வு கண்டுபிடிக்க இயலுமா என்று விஞ்ஞானிகள் ஆராய்ச்சி செய்துவருகிறார்கள்” என்கிறார் ரெபேக்கா.

அதீத நினைவுத் திறனால் அல்லல்படும் ரெபேக்கா!

மக்கள் அதிகம் புழங்கக்கூடிய இடத்தில் வசிக்கும் கடல்வாழ் உயிரினங்கள், அளவுக்கு அதிகமான இரைச்சலால் கேட்கும் திறனை இழக்கின்றன என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள். அதிலும் இங்கிலாந்தில் கப்பல்கள் செல்லும் பரபரப்பான பகுதிகளில் வசிக்கும் உயிரினங்கள் அளவுக்கு அதிகமாக பாதிக்கப்படுகின்றன. சூழலியல் விஞ்ஞானி எஸ்தர் ஜோன்ஸ் குழுவினர் மேற்கொண்ட ஆய்வில் சீல்களை வைத்து பரிசோதனை செய்யப்பட்டது. அதில் 28 சீல்களில் 20 சீல்கள் தற்காலிகமாக கேட்கும் திறனை இழந்திருக்கின்றன. கடந்த 30 ஆண்டுகளில் ஆழ்கடலில் ஒலி மாசு அதிகரித்து வருவது ஆபத்தானது என்கிறார்கள்.

மனிதனால் கேட்கும் திறனை இழக்கும் கடல்வாழ் உயிரினங்கள்…

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x