Published : 15 Mar 2015 12:10 PM
Last Updated : 15 Mar 2015 12:10 PM

உலக மசாலா: அதிசய குழந்தை ஜாமி வாழ்க!

சீனாவின் ஷான்ஸி மாகாணத்தைச் சேர்ந்தவர் 51 வயது லி யான்ஸி. ஆக்ஸ்ஃபோர்ட் வெளியீடான ஆங்கிலம் சீனம் அகராதியை முன் அடையிலிருந்து பின் அட்டை வரை மனப்பாடமாகச் சொல்கிறார். 2,458 பக்கங்கள் கொண்ட அகராதியிலிருந்து என்ன வார்த்தைக் கேட்டாலும் மிகச் சரியாக விளக்கம் சொல்லிவிடுகிறார். விரிவுரையாளராக இருக்கும் லி யான்ஸிக்கு ஆட்டிஸத்தால் பாதிக்கப்பட்ட 21 வயது மகனின் மருத்துவச் செலவுக்காக அதிகப் பணம் தேவைப்பட்டது. அதற்காக நிறைய மொழிபெயர்ப்புப் பணிகளில் ஈடுபட விரும்பினார். அதற்கு முன் தன்னைத் தயார் செய்துகொள்ள முடிவெடுத்தார். 2013ம் ஆண்டில் இருந்து தினமும் காலை 3 மணியில் இருந்து 6 மணி வரை அகராதியைப் படித்தார். 465 ஆங்கில இதழ்களை நூலகத்திலிருந்து எடுத்து, 19 நாட்களில் படித்து முடித்தார். இன்று மொழியிலும் நினைவாற்றலிலும் அபாரமான பெண்மணியாகத் திகழ்கிறார். ஆங்கிலம் தவிர, ஜெர்மன், ரஷ்யன், போலிஷ் உட்பட 10 மொழிகளைச் சரளமாகப் பேசுகிறார். பிரெயின் பவர் என்பது சீனத் தொலைக்காட்சியில் பிரபலமாக இருக்கும் நிகழ்ச்சி. அதில் பங்கேற்க வேண்டும் என்பது லி யான்ஸியின் கனவு. மற்றவர்களை வெல்ல வேண்டும் என்பது என் எண்ணமல்ல, என்னுடைய திறமையை நான் உணர்ந்துகொள்ளவே இதில் பங்கேற்க விரும்புகிறேன் என்கிறார்.

லி யான்ஸி தி கிரேட்!

சேலம் சாஃப்ட்வேர் என்ற நிறுவனத்தை நடத்தி வருகிறார் ட்ரெவோர் மெக்கெண்ட்ரிக். மூன்று ஆண்டுகளுக்கு முன்பு ஒரு விபத்தில் பாதிக்கப்பட்டார் ட்ரெவோர். ஐபோன் அப்ளிகேஷன்களை விற்று தேவையான வருமானத்தை ஈட்டும்படி நண்பர்கள் ஆலோசனை தந்தார்கள். ஆனால் அதிலும் போதுமான வருமானம் கிடைக்கவில்லை. என்ன செய்யலாம் என்று யோசித்தார். அப்பொழுது ஸ்பானிய மொழியில் பைபிள் தரமானதாக இல்லை என்பது தெரியவந்தது. பைபிளை ஆடியோவோக மாற்றி, அப்ளிகேஷன்களை உருவாக்கினார். எதிர்பார்த்ததை விட பைபிள் அப்ளிகேஷன்கள் வேகமாக விற்பனையாயின. முதல் ஆண்டு வருமானம் 47 லட்சம் ரூபாய். அடுத்த ஆண்டு அது 63 லட்சம் ரூபாயாகப் பெருகியது. இரண்டே ஆண்டுகளில் பொருளாதாரத்தில் நல்ல நிலையை எட்டிவிட்டார் ட்ரெவோர். ’கடின உழைப்பைச் செலவிட்டு நான் இந்தப் பணத்தை ஈட்டவில்லை. தினமும் சில மணிநேரங்கள்தான் செலவிடுகிறேன். இந்த வருமானத்தால் சந்தோஷம் என்று சொல்ல மாட்டேன். ஏனென்றால் நான் கடவுள் நம்பிக்கை அற்றவன். எனக்கு நம்பிக்கை இல்லாத விஷயத்தில் இருந்து கிடைக்கும் பணம் எப்படித் திருப்தி தரும்? அந்த நேரத்தில் குடும்பத்தைக் காப்பாற்ற வேறு வழியில்லாமல் இதில் இறங்கினேன். என்னைப் பொருத்தவரை ஹாரி பாட்டர் புத்தகத்தைப் போல பைபிளும் ஒரு நாவல்தான். நான் மத குரு என்று நினைத்து, பலரும் என்னைத் தொடர்புகொள்ளும்போது மிகவும் வருத்தமாக இருக்கிறது’ என்கிறார் ட்ரெவோர்.

நீங்க ரொம்ப வித்தியாசமானவர் ட்ரெவோர்!

ஸ்திரேலியாவில் வசிக்கும் கேட், 5 ஆண்டுகளுக்கு முன்பு இரட்டைக் குழந்தைகளைப் பெற்றெடுத்தார். பெண் குழந்தை நலமாக இருந்தது. ஆனால் ஆண் குழந்தையின் நாடித் துடிப்புக் குறைந்துகொண்டே வந்து, நின்றுவிட்டது. மருத்துவர்கள் குழந்தை இறந்துவிட்டது என்றனர். கேட் அதிர்ந்து போனார். அறையைவிட்டு எல்லோரையும் வெளியேறச் சொன்னார். கணவர் டேவிட்டிடம் குழந்தையை எடுத்து, தன் மார்பு மேல் வைக்கச் சொன்னார். கண்ணீர் பெருகியபடி குழந்தையைக் கட்டிப் பிடித்து, உடலைச் சூடேற்றினார். நீண்ட முயற்சிக்குப் பிறகு குழந்தை லேசாக அசைந்தது. மருத்துவர்களை அழைத்தார் டேவிட். குழந்தைக்குத் தேவையான மருத்துவ உதவி அளிக்கப்பட்டது. ஜாமி பிழைத்துக்கொண்டான். 5 ஆண்டுகளுக்குப் பிறகு ஜாமி பிறந்த கதையைச் சொல்லியிருக்கிறார்கள். கடந்த 5 ஆண்டுகளில் ஒரு தடவை கூட உடல் நலக்குறைபாடு ஜாமிக்கு ஏற்பட்டதில்லை. ஆரோக்கியமாக இருக்கிறான் என்று கேட்டும் டேவிட்டும் ஆனந்தமடைகிறார்கள்.

அதிசய குழந்தை ஜாமி வாழ்க!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x