Published : 02 Aug 2015 11:48 AM
Last Updated : 02 Aug 2015 11:48 AM

உலக மசாலா: அதிசய ஆந்தை

ஆந்தைகள் பொதுவாக இரவு நேரங்களில்தான் உணவு தேடிக் கிளம்பக்கூடியவை. லித்துவேனியா காட்டில் புகைப் படங்கள் எடுக்கச் சென்றார் யுஜெனிஜுஸ் கவாலியாஸ் காஸ். அவருக்கு 15 அடி தூரத்தில் ஒரு பெரிய ஆந்தை உணவை வேட்டையாடுவதற்காகக் காத்திருந்தது. மஞ்சள் நிறக் கண்களை அசைக்காமல் காரியத்தில் குறியாக இருந்தது. உடனே புகைப்படங்கள் எடுக்க ஆரம்பித்தார் யுஜெனிஜுஸ். ஒரே ஒரு முறை மட்டும் திரும்பி அவரைப் பார்த்துவிட்டு, மீண்டும் இரையைப் பார்த்தபடி இருந்தது.

‘‘என்னுடைய 40 ஆண்டு கால வாழ்க்கையில் இப்படி ஒரு ஆந்தையை நான் பார்த்ததே இல்லை. சாதாரணமாக மனிதர்களைக் கண்டதும் வேறு இடத்துக்குப் பறந்து சென்றுவிடும். 10 நிமிடங்கள் வரை விதவிதமாகப் புகைப்படங்கள் எடுத்துக்கொண்டு கிளம்பினேன். தூரத்தில் ஒருமுறை திரும்பிப் பார்த்தேன். அதே இடத்தில் அசையாமல் வேட்டைக்குக் காத்திருந்தது. என்னைத் திரும்பிக் கூடப் பார்க்கவில்லை’’ என்று வியக்கிறார் யுஜெனியுஸ்.

அட! ஆச்சரியமா இருக்கே!

பெல்ஜியத்தில் வசிக்கும் 31 வயது ஆங்கிலோ வல்கென்போர்க், ஸ்லோவேனியாவில் உள்ள காடுகளில் வசித்து வருகிறார். நல்ல வேலை, மனைவி, குடும்பம் என்று வாழ்க்கை நடத்தி வந்தாலும் மனம் திருப்தியடையவில்லை. 3 வாரப் பயணமாகக் காட்டுக்குச் சென்றார். திரும்பி வந்தபோது, அவரது மனைவி விவாகரத்துக் கேட்டு விண்ணப்பித்திருந்தார். வல்கென்போர்க்குக்கு அதிர்ச்சியாக இருந்தது. மன அழுத்தத்துக்கு ஆளானார். நகர வாழ்க்கைப் பிடிக்காமல் போய்விட்டது.

ஓராண்டுக்குப் பிறகு, காடுகளிலேயே நிரந்தரமாக வசித்துவிடலாம் என்ற முடிவுக்கு வந்தார். வீட்டை விற்றார். தேவையான பொருட்களை வாங்கிக்கொண்டார். காட்டில் குடியேறினார். சவால் நிறைந்த காட்டு வாழ்க்கை கடினமாக இருந்தாலும் நிம்மதியாக இருந்தது. கொஞ்சம் கொஞ்சமாக இயல்பு நிலைக்குத் திரும்பிவிட்டார். கடந்த 4 ஆண்டுகளாக காட்டில் வசித்து வருவதால், காட்டில் வாழ்வதற்குரிய அத்தனை நுணுக்கங்களையும் அறிந்திருக்கிறார். பழங்கள், பருப்புகள், தவளை போன்றவற்றை உணவாக எடுத்துக்கொள்கிறார். சூரிய ஒளியில் இயங்கும் செல்போனைப் பயன்படுத்துகிறார். காட்டின் எல்லையில் ஒரு காரை வாங்கி வைத்திருக்கிறார். அவசரம் என்றால் காரை எடுத்துக்கொண்டு நகருக்குள் சென்று திரும்புகிறார்.

‘‘இங்கே ஏமாற்றம், வஞ்சகம் எதுவும் இல்லை. இருக்கும் இடத்தையும் உணவையும் எல்லா உயிர்களும் சமமாகப் பகிர்ந்துகொள்கிறோம்’’ என்கிறார் வல்கென்போர்க்.

ம்… மனித மனம் விநோதமானது…

சீனாவின் ஸிஜியாங் பகுதியில் வசித்து வருகிறார் ஸாங். சொந்த ஊரில் வீடு கட்டுவதற்காக 11 லட்சம் ரூபாயை எடுத்துக்கொண்டு, குடும்பத்தோடு காரில் கிளம்பினார். பணத்தைப் பத்திரமாகக் கொண்டு செல்ல வேண்டும் என்பதற்காக ஒரு சாதாரண கறுப்பு பிளாஸ்டிக் பையில் போட்டு, பின் இருக்கைக்குப் பின்புறம் வைத்துவிட்டார். குப்பையுள்ள பை போலத் தோற்றத்தை உருவாக்கிவிட்டார்.

சில மணி நேரங்களுக்குப் பிறகு சர்வீஸ் ஸ்டேஷனில் வண்டி நின்றது. பேரனுக்காக ஏராளமான தின்பண்டங்களை வாங்கிக் கொடுத்தார். அடுத்த சர்வீஸ் ஸ்டேஷன் வருவதற்குள் பேரன் அனைத்தையும் சாப்பிட்டுவிட்டு, குப்பைகளை ஒரு கறுப்பு கவரில் போட்டு பின்பக்கம் வைத்திருந்தான். வண்டி நின்றதும் குப்பையைத் தொட்டியில் போட்டுவிட்டான். கார் கிளம்பிவிட்டது. திடீரென்று ஸாங் வண்டியை நிறுத்தி, பணம் பத்திரமாக இருக்கிறதா என்று பார்த்தார். ஆனால் பணத்துக்குப் பதில் குப்பைதான் இருந்தது. உடனே சர்வீஸ் ஸ்டேஷனில் புகார் கொடுத்து, ஒவ்வோர் இடமாகத் தேடச் சொன்னார். நீண்ட தேடுதலுக்குப் பிறகு, ஒரு சர்வீஸ் ஸ்டேஷனில் பணம் இருப்பதாகச் சொன்னார்கள். அங்கே சென்று பணத்தைப் பெற்றுக்கொண்டு, திரும்பினார்.

பத்திரமா திருப்பிக் கொடுத்த நல்ல மனிதர்கள் வாழ்க…

பிரான்ஸில் நடைபெற்ற தொல்பொருள் ஆராய்ச்சியில் மனிதனின் வெட்டுப் பல் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது. இந்தப் பல் சுமார் 5,50,000 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த மனிதனுடையது என்று கண்டறிந்திருக்கிறார்கள். இதுவரை ஐரோப்பாவில் கண்டுபிடிக்கப்பட்ட மிகப் பழமையான மனிதப் பல் இதுதான். 1907ம் ஆண்டு 6 லட்சம் ஆண்டுகளுக்கு முந்தைய மனிதனின் தாடை எலும்பு கிடைத்தது. தற்போது கிடைத்திருக்கும் பல் ஆணுடையதா, பெண்ணுடையதா என்று இன்னும் கண்டறியப்படவில்லை. இந்தப் பல் மூலம் மனிதனைப் பற்றிய இன்னும் பல விஷயங்கள் உலகத்துக்குத் தெரியவரலாம் என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்.

அடேங்கப்பா! எவ்வளவு பழைய பல்!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x