Published : 18 Nov 2016 11:06 AM
Last Updated : 18 Nov 2016 11:06 AM

உலக மசாலா: அதிக லாபம் தரும் பலூன் மீன் பிடிப்பு!

கியூபாவில் மீன்களைப் பிடிப்பதற்கு ஆணுறைகளைப் பயன்படுத்தி வருகிறார்கள். பொதுமக்கள் சட்டவிரோதமாக அமெரிக்காவில் இருந்து வருவதையோ, கியூபாவில் இருந்து செல்வதையோ தடுப்பதற்காக ஹவானா கடல் பகுதியில் மீன் பிடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால் தடை செய்யப்பட்ட கடல் பகுதியில்தான் விலை மதிப்புமிக்க, மிகப் பெரிய மீன்கள் காணப்படுகின்றன. 900 அடி தூரத்தில் இருக்கும் மீன்களைப் பிடிக்க கடலுக்குள் இறங்க முடியாது. அவற்றைப் பிடிப்பதற்காக மக்களே ‘பலூன் மீன் பிடிப்பு’ என்ற புதிய வழியைக் கண்டுபிடித்திருக்கிறார்கள். ஆணுறைகளை வாங்கி, பலூன் போல பெரிதாக ஊதுகிறார்கள்.

5 பலூன்களை ஒரு மெல்லிய கம்பியில் கட்டுகிறார்கள். கொக்கியில் மீனுக்கான உணவையும் வைக்கிறார்கள். மிகப் பெரிய தூண்டில் கம்பியில் பலூன்கள் கட்டிய மெல்லிய கம்பியை இணைக்கிறார்கள். கரையில் அமர்ந்து தூண்டில் போடுகிறார்கள். மெல்லிய கம்பியை, பலூன்கள்தான் 900 அடி தூரத்துக்கு காற்று மூலம் இழுத்துச் செல்கின்றன. உணவைப் பார்த்து வரும் மீன்கள் தூண்டிலில் மாட்டிக்கொள்கின்றன. மெதுவாகத் தூண்டிலைக் கரைக்கு இழுத்து, மீன்களை எடுத்துக்கொள்கிறார்கள்.

“தொடக்கத்தில் தக்கைகளை வைத்துதான் மீன் பிடித்துக்கொண்டிருந்தோம். அது தண்ணீரில் ஊறி விடுவதால், மீன்கள் அகப்படுவதில் சிக்கல் இருந்தது. அதனால் ஆணுறைகளைப் பயன்படுத்த ஆரம்பித்தோம். இதை யார் கண்டுபிடித்தது என்று தெரியாது. மிகக் குறைந்த செலவில் அதிக வருமானம் தரக்கூடிய மீன் பிடிப்பாக இருக்கிறது. கரைகளில் அமர்ந்து பலூன் மூலம் மீன் பிடிப்பது சட்டப்படி குற்றமும் இல்லை” என்கிறார் மீனவர் மைக்கேல் பெரெஸ். கியூபாவில் பலூன் மீன் பிடிப்பு மிகப் பிரபலமாக மாறிவிட்டது. மீன்கள் பெருகும் காலங்களில் அதிக அளவில் ஆணுறைகள் விற்பனை செய்யப்படுகின்றன.

குறைந்த செலவில் அதிக லாபம் தரும் பலூன் மீன் பிடிப்பு!

அமெரிக்காவின் ஜான்சன் பகுதியில் இருக்கிறது புகழ்பெற்ற ஸ்டெல்லா உணவகம். இதன் மீது சமீபகாலமாக எதிர்மறையான விமர்சனங்கள் கிளம்பியுள்ளன. சமீபத்தில் நடைபெற்ற அமெரிக்க அதிபர் தேர்தலில் ட்ரம்ப் வெற்றி பெற்ற பிறகு, உணவகத்தின் நடவடிக்கையிலும் மாற்றம் ஏற்பட்டுவிட்டது. இங்கே சாப்பிட வருகிறவர்களிடம் யாருக்கு வாக்கு அளித்தீர்கள் என்று கேட்கிறார்கள். ட்ரம்புக்கு வாக்களித்திருந்தால், 650 ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும். ஹிலாரிக்கு வாக்களித்திருந்தால் 325 ரூபாய் கட்டணம் செலுத்தினால் போதும்.

உணவகத்தின் இந்தப் பாரபட்சம் இணையதளங்களில் மிக மோசமாக விமர்சனம் செய்யப்பட்டு வருகிறது. “என் மனைவியுடன் உணவகத்துக்குச் சென்றேன். வாயிலில் ‘நீங்கள் வாக்கு செலுத்தியதற்காக இங்கே பாரபட்சம் காட்டப்படுகிறது’ என்ற அறிவிப்பைப் பார்த்ததும் விளையாட்டுக்கு வைத்திருக்கிறார்கள் என்றுதான் நினைத்தேன். ஆனால் நுழைவுக் கட்டணம் செலுத்தும் இடத்தில், நீங்கள் யாருக்கு வாக்கு செலுத்தினீர்கள் என்று கேட்டு, கட்டணத்தையும் சொன்னபோது நான் அதிர்ந்து போனேன். நாங்கள் சாப்பிடாமல் திரும்பி விட்டோம்” என்கிறார் எரிக் ஸ்டெல்டர்.

ட்ரம்ப் எஃபக்ட்!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x