Published : 20 Jul 2017 09:25 AM
Last Updated : 20 Jul 2017 09:25 AM

உலக மசாலா: அண்டார்டிகாவில் ஒரு திருமணம்!

ண்டார்டிகாவில் உறைய வைக்கும் குளிர் காலத்தில் ஜூலி பாமும் டாம் சில்வெஸ்டரும் திருமணம் செய்து கொண்டனர். அண்டார்டிகாவில் பிரிட்டிஷ் ஆய்வுக்கு உட்பட்ட பகுதியில் நடைபெறும் அதிகாரப்பூர்வமான முதல் திருமணம் இது. ஜூலியும் டாமும் பிரிட்டனைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள். கடந்த 10 ஆண்டுகளாக இருவரும் ஒன்றாக பல திட்டங்களில் வேலை செய்து வருகிறார்கள். சக ஆராய்ச்சியாளர்கள் 18 பேர் முன்னிலையில் இவர்கள் திருமணம் செய்து கொண்டனர். இரண்டு நாட்கள் திருமணக் கொண்டாட்டங்கள் நடைபெற்றன. கூடாரம் அமைக்கும் பழைய ஆரஞ்சு வண்ணத்துணியில் தன்னுடைய திருமண ஆடையைத் தைத்திருந்தார் ஜூலி. “நாங்கள் இருவரும் இந்தியா, நேபாளம், பெரு, ஈக்வடார், மங்கோலியா, உஸ்பெகிஸ்தான், கம்போடியா, வியட்நாம் உள்ளிட்ட பல நாடுகளில் ஒன்றாக வேலை செய்திருக்கிறோம். அண்டார்டிகாவில் திருமணம் செய்துகொண்டது அற்புதமானது! பனி சூழ்ந்துள்ள மலைகள், நல்ல மனம் படைத்த மனிதர்கள் முன்னிலையில் எங்கள் திருமணம் நடந்துள்ளது. இதைவிடச் சிறந்த இடம் இந்தப் பூமியில் இருக்க முடியாது” என்கிறார் ஜூலி. “நீண்ட கால நட்பு காதலாக மாறி, திருமணத்தில் முடிந்திருக்கிறது. நாங்கள் எளிமையான முறையில் திருமணம் செய்துகொள்ளவே விரும்பினோம். ஆனால் அண்டார்டிகாவில் திருமணம் செய்வோம் என்று நினைத்ததில்லை. அண்டார்டிகாவில் திருமணம் செய்துகொண்டதால் உலகம் முழுவதும் பேசுபொருளாக மாறிவிட்டோம்” என்கிறார் டாம்.

அண்டார்டிகாவில் ஒரு திருமணம்!

சிலியின் மத்தியப் பகுதியில் கடந்த ஜனவரி மாதம் மிகப் பெரிய தீ விபத்து நிகழ்ந்தது. இதில் 4,57,000 ஹெக்டேர் காடுகள் கருகின. தற்போது காட்டை மீண்டும் உருவாக்குவதற்காக டாஸ், ஒலிவியா, சம்மர் என்ற 3 நாய்கள் கடுமையாக உழைத்து வருகின்றன. “மார்ச் மாதம் முதல் காட்டுக்குள் புதிய விதைகளை விதைக்கும் பணியை ஆரம்பித்தேன். தினமும் விதைகளையும் நாய்களையும் ஏற்றிக்கொண்டு காட்டின் ஒவ்வொரு பகுதிக்கும் செல்வேன். நாய்களின் முதுகில் 8 கிலோ விதைகளைக் கட்டி வைத்துவிடுவேன். நாய்கள் ஓடும்போது முதுகுப் பையிலுள்ள விதைகள் கீழே விழும். ஒரு நாளைக்கு 30 கி.மீ. தூரம் சென்று விதைத்துவிட்டு, நாய்கள் திரும்பி வருகின்றன. ஒரு மனிதரால் ஒரு நாளைக்கு 3 கி.மீ. தூரமே சென்று விதைக்க முடியும். வேலைகளை முடித்துவிட்டு, களைப்புடன் திரும்பும் நாய்களுக்கு நான் உற்சாகமான வரவேற்பு கொடுப்பேன். அவற்றுக்குப் பிடித்த உணவுகளை அளிப்பேன். பார்டர் கோலி என்ற இந்த நாய் வகைகள் விதைக்கும் வேலைகளைக் கச்சிதமாக செய்யக்கூடியவை. இவற்றின் ஆற்றலும் புத்திசாலித்தனமும் வேகமும் அபாரமானவை. இவை மற்ற காட்டு விலங்குகளைத் தாக்குவதில்லை. இன்னும் விதைக்கும் பணி தொடர்ந்து கொண்டிருக்கிறது. ஏற்கெனவே விதைத்த 15 காடுகளில் தாவரங்கள் முளைக்க ஆரம்பித்துவிட்டன. கருகிய காடு, தற்போது பசுமைக் காடாக மாறிக்கொண்டிருக்கிறது. விரைவில் தாவரங்கள் வளர்ந்தால், காட்டை விட்டுச் சென்ற உயிரினங்கள் மீண்டும் திரும்பி வரலாம்” என்கிறார் 32 வயது பிரான்சிஸ்கா டார்ரஸ்.

புதிய காடுகளை உருவாக்கும் பணியில் பலே நாய்கள்!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x