Published : 06 Oct 2015 10:59 AM
Last Updated : 06 Oct 2015 10:59 AM

உலக மசாலா: அணுகுண்டு பூ ஜாடி!

பிரிட்டனில் வசிக்கும் 45 வயது கேத்ரின் ராலின்ஸ், தன் வீட்டில் வித்தியாசமான பூ ஜாடியை வைத்திருக்கிறார். அணுகுண்டு வடிவில் இருக்கும் அந்த ஜாடி முதல் உலகப் போரில் ஜெர்மானியர்கள் வீசிய நிஜ அணுகுண்டு. 15 வயதில் கேத்ரின் விளையாடிக்கொண்டிருந்தபோது, தற்செயலாக அவர் கண்ணில் பட்டது இந்த அணுகுண்டு. அது ஏதோ ஒரு விளையாட்டுப் பொருள் என்று எண்ணி, வீட்டுக்கு எடுத்து வந்தார். தொலைக்காட்சியில் ஓர் ஆவணப்படம் பார்த்தபோதுதான் அது ஓர் அணுகுண்டு என்பதை அறிந்துகொண்டார். காவல்துறைக்குத் தகவல் அளிக்கப்பட்டது.

அவர்கள் அணுகுண்டை ஆராய்ந்து, உள்ளே இருந்த வெடிப் பொருட் களை எடுத்துவிட்டு, கேத்ரினிடமே கொடுத்துவிட்டனர். வரலாற்றுச் சின்னமான அணுகுண்டை காகிதப் பூக்கள் வைக்கும் பூ ஜாடியாக மாற்றிவிட்டார் கேத்ரின். 30 ஆண்டுகளுக்குப் பிறகும் கேத்ரின் வீட்டில் அணுகுண்டு பூ ஜாடி பத்திரமாக இருந்து வருகிறது.

’’இது மட்டும் வெடித்தால் 20 மீட்டர் தூரத்துக்குள் இருக்கும் வீடுகள் அனைத்தும் தரைமட்டமாகிவிடும் என்று சொன்னார்கள். சில ஆண்டுகளுக்குப் பிறகு அரசாங்கம் இந்த அணுகுண்டை எடுத்துச் சென்றது. சில நாட்களுக்குப் பிறகு, மீண்டும் என்னிடமே ஒப்படைத்து விட்டனர். பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் அணுகுண்டு ஜாடியை எடுத்துச் சென்று காட்டுவது உண்டு’’ என்கிறார் கேத்ரின்.

அணுகுண்டுகள் அனைத்தும் பூ ஜாடியாக மாறினால் உலகம் எவ்வளவு நல்லா இருக்கும்!

ரஷ்யாவில் நிரந்தரமாக உறைந்திருக்கும் சைபீரியப் பனிப் பிரதேசத்தில் விஞ்ஞானிகள் குழு ஒன்று பணியாற்றி வருகிறது. அந்தப் பகுதியில் 3.5 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே வாழ்ந்து வரும் பாக்டீரியாவைக் கண்டுபிடித்திருக்கிறார்கள். அனடோலி ப்ரோச்கோவ் என்ற விஞ்ஞானி 2009ம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்ட அந்த பாக்டீரியாவை வைத்து சில பரிசோதனைகளை மேற்கொண்டார். கினி எலிகளுக்கு அந்த பாக்டீரியாவைச் செலுத்தினார். பிறகு தன் உடலிலும் ஊசி மூலம் பாக்டீரியாவை ஏற்றிக்கொண்டார்.

’’என்னையே நான் பரிசோதனையில் ஈடுபடுத்திக்கொண்டதை எல்லோரும் எதிர்த்தனர். ஆனால் பாக்டீரியா உடலுக்குள் செலுத்தப்பட்டதிலிருந்து நான் மிக ஆரோக்கியமாக உணர்கிறேன். நீண்ட நேரம் என்னால் தொடர்ந்து வேலை செய்ய முடிகிறது. கடந்த 2 ஆண்டுகளாக எனக்கு ஜுரம் வந்ததில்லை. இதை நான் அதிகாரப்பூர்வமாக அறிவிக்க முடியாது. என்னுடைய பரிசோதனையின் முடிவாக இதைச் சொல்கிறேன். இன்னும் ஏராளமான பரிசோதனைகளைச் செய்ய வேண்டியிருக்கிறது’’ என்கிறார் ப்ரோச்கோவ். பாக்டீரியா செலுத்திய எலிகளைப் பரிசோதித்தபோது அவற்றுக்கு முதுமை நெருங்கவில்லை என்பது தெரிய வந்திருக்கிறது. எதிர்காலத்தில் பாக்டீரியா பரிசோதனைகள் வெற்றி பெற்றால் முதுமை தொடர்பான பாதிப்புகளில் இருந்து மனிதன் தப்பிக்கலாம் என்கிறார் ப்ரோச்கோவ்.

முதுமையைத் தடுப்பதாகச் சொல்லும் க்ரீம்களுக்கு எதிர்காலத்தில் வேலை இருக்காது!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x