Published : 09 Dec 2016 09:16 AM
Last Updated : 09 Dec 2016 09:16 AM

உலக மசாலா: அணில் பெண்

அமெரிக்காவின் பென் ஸ்டேட் பல்கலைக்கழகத் தில் படித்து வருகிறார் 22 வயது மேரி க்ருபா. சாம்பல் அணில்களுக்குச் சின்னத் தொப்பிகளையும் ஆடைகளை யும் அணிவித்து, விதவித மாகப் புகைப்படங்கள் எடுத்து, இணையத்தில் வெளியிட்டு மிகப் பிரபலமாகி விட்டார். ‘அணில் பெண்’, ‘அணில் பாதுகாவலர்’ என்றே மேரியை எல்லோரும் அன்புடன் அழைக்கிறார்கள்.

“நான்கு ஆண்டுகளுக்கு முன் கல்லூரிக்குள் நுழைந்தபோது, நிறைய அணில்களைப் பார்த்தேன். அவற்றுக்குத் தொப்பி போட்டுப் பார்க்க வேண்டும் என்று ஏனோ தோன்றியது. அதற்காகத் தினமும் பருப்புகள், கொட்டைகள், பழங்கள் போன்றவற்றைக் கொடுப்பேன். ஆரம்பத்தில் தயக்கத்துடன் மரத்தில் இருந்து கீழே இறங்கி வந்து, உணவை எடுத்துக்கொண்டு வேகமாக மரத்தில் ஏறிக்கொண்டன. நாட்கள் செல்லச் செல்ல என் மீது அவற்றுக்கு நம்பிக்கை வந்தது. நானும் அணில்களும் மிகவும் நெருக்கமாகிவிட்டோம். பிறகு என் வருகைக்காக ஆவலுடன் காத்திருக்க ஆரம்பித்தன. நான் சின்னச் சின்னத் தொப்பிகளைப் போட்டு, விதவிதமான ஆடைகளை அணிவித்து, புகைப்படங்கள் எடுக்கும் வரை ஒத்துழைத்தன.

நான் காட்டும் அன்புக்கும் உணவுக்கும் அதீதமான அன்பைத் திருப்பிச் செலுத்துகின்றன. எனக்குச் சின்ன வயதில் இருந்தே விலங்குகள் பறவைகள் மீது ஆர்வம் அதிகம். லேசான ஆட்டிசம் குறைபாட்டால் பாதிக்கப்பட்டிருந்தேன். அதனால் பள்ளியில் யாரும் என்னிடம் பேச மாட்டார்கள். தனிமையில் தள்ளப்பட்ட நான், விலங்குகளிடம்தான் பேசிக்கொண்டிருப்பேன். பல்கலைக்கழகத்தில் அணில்களால்தான் எல்லோரும் நேசிக்கும் பெண்ணாக மாறியிருக்கிறேன். என் குறைபாட்டைத் தகர்த்தெறிந்த பெருமை அணில்களைத்தான் சேரும். நானும் அணில்களும் பேசிக்கொண்டிருப்பதைப் பார்ப்பதற்கே நிறைய மாணவர்கள் வருவார்கள். இந்த ஆண்டோடு என் படிப்பு முடிகிறது. அறிவியல் எழுத்தாளராகவும் மக்களிடம் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு ஏற்படுத்தவும் திட்டமிட்டிருக்கிறேன்” என்கிறார் மேரி க்ருபா.

அணில்களின் நண்பன்!

ஆர்மினியாவைச் சேர்ந்த பால் பொருட்கள் நிறுவனம், தங்கள் ஊழியர்களுக்குச் சம்பளத்துக்குப் பதிலாகப் பாலாடைக் கட்டி களை வழங்க முடிவு செய்திருக்கிறது. கடந்த ஆண்டு பாலாடைக் கட்டிகளுக்கு ஏராளமான தேவை இருந்தது. அதனால் பாலாடைக் கட்டி தயாரிப்பில் இறங்கியது அஷ்ட்ரக் காட் நிறுவனம். ஆனால் எதிர்பார்த்தது போல விற்பனை இந்த ஆண்டு நடைபெறவில்லை. 60 ஆயிரம் கிலோ பாலாடைக்கட்டிகள் தேங்கிவிட்டன. விற்பனை இல்லாததால், வருமானம் இல்லை. ஊழியர்களுக்குப் பல மாதங் களாகச் சம்பளம் கொடுக்கவில்லை. பால் உற்பத்தியாளர்களுக்கும் பணம் கொடுக்கவில்லை. ஊழியர்களும் பால் உற்பத்தியாளர்களும் கோபம் அடைந்தனர்.

நிறுவனம் திவால் ஆகிவிட்டதால், பணத்துக்குப் பதிலாக, பாலாடைக்கட்டிகளைக் கொடுப்பதாகக் கூறியது நிறுவனம். இதைப் பலரும் ஏற்றுக்கொள்ளவில்லை. ஆனால் நிறுவனத்துக்கும் வேறு வழியில்லை என்பதால், சிலர் பாலாடைக்கட்டிகளாவது கிடைக் கிறதே என்று சம்மதித்தனர். வீட்டுக்குத் தேவையான பாலாடைக் கட்டிகளை வைத்துக்கொண்டு, சந்தை விலையைவிடக் குறைவாக விற்பனை செய்து வருகிறார்கள் ஊழியர்கள். பாலாடைக்கட்டிகள் காலியானால், பதப்படுத்தும் இயந்திரங்களையும் கட்டிடத்தையும் இடத்தையும் விற்று, கடனை அடைத்துவிடலாம் என்று எண்ணியிருக்கிறது அஷ்ட்ரக் காட் நிறுவனம்.

ஊழியர்களும் பாவம், நிறுவனமும் பாவம்!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x