Published : 30 Mar 2017 09:17 AM
Last Updated : 30 Mar 2017 09:17 AM

உலக மசாலா: அட, ரொம்ப ஜாலியான வேலை!

ரஷ்யாவைச் சேர்ந்த 26 வயது அன்னா செர்டன்ட்சேவா, முழுநேர சோஃபா பரிசோதகராக வேலைக்கு சேர்ந்திருக்கிறார். தினமும் 10 மணி நேரம் விதவிதமான சோஃபாக்களில் அமர்ந்து, படுத்து, வசதியையும் பாதுகாப்பையும் உறுதி செய்து கொடுக்கிறார். கடந்த மாதம் ரஷ்யாவின் மிகப் பெரிய வீட்டு உபயோகப் பொருட்கள் நிறுவனம் MZ5 சோஃபா பரிசோதகர் வேலைக்கு ஆட்கள் தேவை என்று விளம்பரம் செய்திருந்தது. 5 ஆயிரம் விண்ணப்பங்கள் குவிந்தன. பல கட்டங்களாகத் தேர்வு நடத்தப்பட்டு, 7 பேர் நேர்முகத் தேர்வுக்குத் அழைக்கப்பட்டனர். இதில் அன்னாவுக்கு வேலை கிடைத்துவிட்டது. “கடுமையான போட்டிக்கு நடுவே எனக்கு வேலை கிடைத்ததில் ரொம்ப சந்தோஷம். என் கனவு வேலை இது. சோஃபாக்களை இன்னும் முன்னேற்ற பல யோசனைகள் வைத்திருக்கிறேன். வாடிக்கையாளர்களின் சந்தேகங்களைப் போக்குவதும் சோஃபா அவர்கள் விருப்பத்துக்கு ஏற்ற மாதிரி இருக்கிறதா என்று பரிசோதித்து சொல்வதும்தான் என் வேலை. நேரடியாக வாடிக்கையாளர்களைச் சந்திக்கும்போது அவர்களின் தேவை, எதிர்பார்ப்புகளை என்னால் புரிந்துகொள்ள முடிகிறது. என் நிறுவனத்தையும் வாடிக்கையாளர்களையும் இணைக்கும் பாலமாகச் செயல்படுகிறேன். தினமும் விதவிதமான சோஃபாக்களில் அமர்வதும் படுப்பதும் பரிசோதிப்பதுமாக வேலை சுவாரசியமாகப் போய்க்கொண்டிருக்கிறது” என்கிறார் அன்னா. மூன்று மாதங்களுக்குப் பிறகே அன்னாவின் வேலை நிரந்தரமாக்கப்படும். 65 ஆயிரம் ரூபாய் சம்பளம் பெறுகிறார் அன்னா.

அட, ரொம்ப ஜாலியான வேலை!

இங்கிலாந்தில் வசிக்கும் கேட் ஸ்நூக் வளர்க்கும் செல்ல நாய் ஜாக் ரஸ்ஸலுக்கு இனிப்பு என்றால் மிகவும் விருப்பம். 20 வயது ஜாக் தினமும் கோலாவைக் குடித்து வருகிறது. இந்நிலையில் பல் வலியால் துடித்த ஜாக்கை மருத்துவரிடம் அழைத்துச் சென்றார் கேட் ஸ்நூக். 16 பற்களில் 12 பற்களை அறுவை சிகிச்சை மூலம் மருத்துவர்கள் எடுத்துவிட்டனர். “நான் ஒரு ஆசிரியராக இருந்தும் நாய்க்குக் கோலாவைப் பழக்கப்படுத்தி இருக்கிறேன் என்று என்னை மோசமான மனிதராகச் சித்தரிக்கிறார்கள். ஆனால் ஜாக் சாதாரணமான நாய் இல்லை. பிடிவாதம், கோபம், விளையாட்டு எல்லாமே அதிகமாக இருக்கும். ஒருநாள் இரவு கோலா டின்னைப் பக்கத்தில் வைத்துவிட்டு படித்துக்கொண்டிருந்தேன். சிறிது நேரத்தில் பார்த்தால் டின் காலி. ஜாக்தான் குடித்திருந்தாள். அன்றுமுதல் தினமும் இரவானால் கோலா கேட்டு தொந்தரவு செய்கிறாள். கொடுக்காவிட்டால் மூர்க்கமாகி விடுகிறாள். வயதாகிவிட்டதால் அவளுக்கு விருப்பமானதை சாப்பிடட்டும் என்று விட்டுவிட்டேன். கோலாவால் பற்கள் விழுந்தன என்பதை நான் ஏற்றுக்கொள்ள மாட்டேன். வயதாகிவிட்டதால் தான் ஜாக் பற்களை இழந்திருக்கிறாள். அவளுக்குப் பிடித்த வான்கோழி இறைச்சியைச் சாப்பிடத்தான் இப்போது பற்கள் இல்லை. இன்றும் கோலாவையும் சாக்லேட்களையும் ஒரு பிடி பிடிக்கிறாள். வயதானதோடு மறதி நோயும் இவளைத் தாக்கியிருக்கிறது. இன்னும் எவ்வளவு நாள் என்னுடன் இருப்பாள் என்று தெரியவில்லை. அதுவரை அவள் விருப்பப்படி வாழ்ந்துவிட்டுப் போகட்டும்” என்கிறார் கேட் ஸ்நூக்.

நாய்க்கு இப்படிப் பழக்கப்படுத்தியது என்ன நியாயம்?

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x