Published : 31 Mar 2017 11:12 AM
Last Updated : 31 Mar 2017 11:12 AM

உலக மசாலா: அட! இப்படிக் கூட வரைய முடியுமா!

நைஜீரியாவைச் சேர்ந்த அரின்ஸ் ஸ்டான்லி, புகைப்படத்தைப் போல மனித உருவங்களை வரைவதில் மிகச் சிறந்தவராகத் திகழ் கிறார். பென்சில் மூலம் இவர் வரையக்கூடிய மனிதத் தலை களைக் கண்டு ஆச்சரியத்தில் உறைந்து போகாதவர்களே இல்லை! அரின்ஸின் குடும்பம் காகித நிறுவனம் ஒன்றை நடத்தி வந்தது. சின்ன வயதிலிருந்து காகிதங்களுடன் பழகியவர், ஒருகட்டத்தில் பொழுது போக்குவதற்காக வரைய ஆரம்பித்தார். 2012-ம் ஆண்டுதான் இவருடைய ஓவியங்கள் தத்ரூப ஓவியங்களாக மாற்றமடைந்தன. அன்றுமுதல் கூடுதல் உழைப்பைச் செலவிட்டார். தன்னுடைய ஓவியத் திறமையை மேலும் மேலும் வளர்த்துக்கொண்டார். கடந்த ஆண்டு தொழில்முறை ஓவியராக மாறினார். இதுவரை முறையாக ஓவியங்களை யாரிடமும் இவர் கற்றுக்கொண்டதில்லை! “பயிற்சி, பொறுமை, விடாமுயற்சி இந்த மூன்றைத்தான் என்னுடைய மந்திரமாக வைத்திருக்கிறேன். இவற்றால்தான் என்னால் மேலும் மேலும் சிறந்த படைப்புகளை உருவாக்க முடிகிறது. ஓவியத்தை முடிப்பதற்கு 200 மணி நேரங்களை எடுத்துக் கொள்கிறேன். பகலில் நான் வேலைக்குச் சென்றுவிடுவதால் இரவில் மட்டுமே வரைய முடியும். எவ்வளவு நேரம் ஆகிறது என்பதைப் பற்றி எனக்குக் கவலை இல்லை. எவ்வளவு நன்றாக வரைய முடியும் என்பதில்தான் கவனமாக இருப்பேன். என்னைச் சுற்றியிருக்கும் அத்தனை விஷயங்களையும் உன்னிப்பாகக் கவனிப்பேன். நான் வரையக்கூடிய முகங்களை விதவிதமாகப் புகைப்படங்கள் எடுத்துக்கொள்வேன். எல்லாவற்றையும் ஆராய்ந்து, அறிந்துகொண்ட பிறகே ஓவியம் தீட்ட ஆரம்பிப்பேன்” என்கிறார் அரின்ஸ். புகைப்படத்தைப் பார்த்து வரையும்போது ஒருவரின் தலைமுடி எவ்வளவு அடர்த்தியாக இருக்கிறது, எவ்வளவு நீளமாக இருக்கிறது, எந்த வகையான முடி என்றெல்லாம் ஆராய்கிறார் அரின்ஸ்!

அட! இப்படிக் கூட வரைய முடியுமா!

இங்கிலாந்தில் வசிக்கும் பாட்ரிசியா டேவிஸ், 90 வயதில் திருநங்கையாக மாறியிருக்கிறார். “3 வயதில் நான் பெண்ணாக உணர ஆரம்பித்தேன். பெண்களைப் போல அலங்காரம் செய்துகொள்ளவும் உடை அணியவும் ஆசையாக இருக்கும். ஆனால் வெளியே சொல்வதற்குப் பயமாக இருந்தது. படித்து முடித்தவுடன் ராணுவத்தில் சேர்ந்தேன். என்னை வெளிப்படுத்திக்கொள்ள முயன்றபோது, திருமணம் செய்து வைத்துவிட்டனர். சில மாதங்களில் இரண்டாம் உலகப் போரில் பங்கேற்கச் சென்றுவிட்டேன். 63 ஆண்டு கால மண வாழ்க்கை ஓடிவிட்டது. 6 ஆண்டுகளுக்கு முன்பு என் மனைவி இறந்து போனார். தனிமையில் இருந்தபோது பெண்ணாக மாற வேண்டும் என்ற எண்ணம் அதிகமானது. இனியும் என்னால் இந்தச் சுமையை மனத்தில் சுமக்க இயலாது. என்னுடைய 90 வருட வாழ்க்கையைப் போலியாக வாழ்ந்தது போதும். எங்கள் பரம்பரையில் 104 வயது வரை கூட வாழ்ந்திருக்கிறார்கள். அதனால் இன்னும் 10 ஆண்டுகளாவது நான் உயிரோடு இருப்பேன். மீதியிருக்கும் வாழ்நாளை உண்மையாகவும் மகிழ்ச்சியாகவும் கழிக்க விரும்புகிறேன். இந்த வயதான காலத்தில் நான் அறுவை சிகிச்சை செய்துகொள்ளப் போவதில்லை. பெண் தன்மையை அதிகரிப்பதற்காக ஈஸ்ட்ரோஜன் எடுத்துக்கொண்டிருக்கிறேன். பெண்களுக்கான உடை, நீளமான முடி, ஆபரணங்கள், அலங்காரம் என்று முற்றிலுமாக மாறிவிட்டேன். இப்பொழுதுதான் என் வாழ்க்கையில் மிக மகிழ்ச்சியாக இருக்கிறேன்” என்கிறார் பாட்ரிசியா டேவிஸ்.

நம் வாழ்க்கை, நம் உரிமை! கலக்குங்க பாட்ரிசியா!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x