Published : 02 Sep 2016 09:04 AM
Last Updated : 02 Sep 2016 09:04 AM

உலக மசாலா: அடுக்கு மாடி கல்லறைகள்

இதுவரை பல ஆயிரம் கோடி மக்கள் இறந்து, மண்ணோடு மண்ணாகக் கலந்திருக்கிறார்கள். சமீபகாலங்களில் அன்புக்குரியவர்கள் இறந்து போனால், உரிய மரியாதையோடு வைத்திருப்பதற்காகவே அடுக்கு மாடி கல்லறைகள் உலகின் பல பகுதிகளிலும் கட்டப்பட்டிருக்கின்றன. பிரேசிலின் சான்டோஸ் பகுதியில் உள்ள நெக்ரோபோலே இகுமேனிகா, உலகின் மிக உயரமான கல்லறை என்ற சிறப்பைப் பெற்றிருக்கிறது. 108 மீட்டர் உயரத்தில் 32 மாடிகளைக் கொண்ட கட்டிடமாக உயர்ந்து நிற்கிறது.

இந்த அடுக்கு மாடியில் 25 ஆயிரம் உடல்களைப் பாதுகாக்க முடியும். கல்லறை போன்றே இருக்காது என்பதுதான் இதன் சிறப்பு. கல்லறையில் இளைப்பாறுவதற்கு அறைகள், சிறிய நீர்வீழ்ச்சி, அழகான தோட்டம், கட்டிடத்தின் உச்சியில் ஆலயம், சிற்றுண்டி கூடம் என்று அனைத்து வசதிகளும் செய்யப்பட்டிருக்கின்றன. கீழ்தளங்களுக்கு கட்டணம் குறைவாகவும் மேலே செல்லச் செல்ல அதிகமாகவும் இருக்கிறது. “ஒவ்வொரு அறையும் நல்ல காற்றோட்ட வசதியுடன் அமைத்திருக்கிறோம். ஒரு அறையில் 6 உடல்கள் வைக்கப்பட்டிருக்கின்றன. ஒரு உடல் மட்கிப் போவதற்கு 3 ஆண்டுகள் ஆகும். அதற்குப் பிறகு மட்கிய உடல் குடும்பத் தினரிடம் ஒப்படைக்கப்பட்டு, வேறு இடங்களில் புதைக்கப்படும்.

சிலர் இறந்தவர்களின் உடல் இங்கேயே இருக்க வேண்டும் என்று விரும்புவார்கள். அவர்கள் அதிகக் கட்டணம் செலுத்தி, இங்கேயே வைத்துக்கொள்ளலாம். குடும்பத்தினர் அடிக்கடி வந்து, பிரார்த்தனை செய்துவிட்டு செல்வார்கள். 3 ஆண்டுகளுக்கு ஒரு உடலைப் பாதுகாக்க ரூ.4 லட்சம் முதல் ரூ.14 லட்சம் வரை கட்டணம். ஒரு குடும்பம் தனி அறை தேவை என்று விரும்பினால் ரூ.34 லட்சம் கொடுக்க வேண்டும். இறந்த பிறகும் வாழ்க்கை இருக்கிறது. அது நன்றாக அமைவதற்கு நம்மால் முடிந்ததைச் செய்ய வேண்டும். சிறிய கல்லறையாகத்தான் ஆரம்பித்தோம். தேவை அதிகம் இருப்பதால் உலகின் உயரமான கல்லறையாக மாறிவிட்டது!” என்கிறார் அதன் நிறுவனர் பெப்பி அல்ஸ்டட்.

ஐயோ… இறந்த உடலுக்கு இவ்வளவு செலவா?



பிரிட்டனைச் சேர்ந்த பென் சுமடிநிரியா (22) சமையல் கலைஞராக இருக்கிறார். இந்தோனேஷியாவில் ‘டெத் நூடுல்ஸ்’ என்ற சவாலை ஏற்றார். மிளகாய் சாஸை விட 4 ஆயிரம் மடங்கு அதிகக் காரம் கொண்ட நூடுல்ஸ் இது. பென், சாப்பிட ஆரம்பித்ததும் வியர்த்துக் கொட்டியது. நாவில் இருந்து நீர் வடிந்தது. கண்ணீர் பெருகியது. கதறினார். “இது உண்மையிலேயே டெத் நூடுல்ஸ்தான். உலகிலேயே காரம் அதிகமான உணவு என்பதை ஏற்றுக்கொள்கிறேன். ஐஸ்க்ரீம், ஜூஸ், ஸ்வீட் என்று எது சாப்பிட்டும் வாய் எரிச்சல் நிற்கவே இல்லை.

உடல் முழுவதும் எரிந்தது போலிருந்தது. சில நிமிடங்கள் காது கேட்கும் சக்தியை இழந்துவிட்டது. நான் எத்தனையோ உணவு சவால்களில் கலந்துகொண்டிருக்கிறேன். இது மாதிரியான கடினமான சவால் எதுவும் இல்லை. இங்குள்ள சிலர், முழு நூடுல்ஸையும் சாப்பிட்டு, சவாலில் வெற்றியடைந்திருப்பதாக சொல்கிறார்கள். என்னால் நம்பவே முடியவில்லை!” என்கிறார் பென்.

டெத் நூடுல்ஸ் என்று சரியான பெயர்தான் வைத்திருக்கிறார்கள்!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x