Published : 05 Nov 2015 09:44 AM
Last Updated : 05 Nov 2015 09:44 AM

உலக மசாலா: அடடா! அற்புதமான அப்பா!

ஷாங்காயைச் சேர்ந்தவர் ஸு சுன்ஸியாவோ. தொழில திபர். தன் இரண்டு வயது மகளுக்காக வீட்டையும் சொத்துகளையும் 2 கோடி ரூபாய்க்கு விற்று விட்டார்.

‘‘என் மகள் தான் என் உலகம். அவளுக்கு என்னால் முடிந்த அனைத்து விஷ யங்களையும் கொடுத் துவிட வேண்டும் என்று முடிவு செய்தேன். பள்ளிக் கல்வி மூலம் கிடைக்கும் அறிவுக்கு முன்பாக அவளுக்கு உலக அறிவு கிடைக்க வேண்டும். அதற்காக 5 ஆண்டுகள் என் மகளுடன் உலகம் சுற்றி வரப் போகிறேன். இதில் ஓராண்டு சீனாவைச் சுற்றி வருவோம். மீதி நான்கு ஆண்டுகள் உலகப் பயணம். தொழிலதிபரான நான், தவறான முடிவு எடுத்துவிட்டதாகச் சொல்கிறார்கள். எனக்கு தொழில் தெரியும்.

எப்பொழுது வேண்டுமானாலும் சம்பாதித்து விட முடியும். ஆனால் என் மகளுக்கு இந்த வயதில் கொடுக்க வேண்டிய அறிவையும் அனுபவத்தையும் கொடுக்காமல் விட்டால், இன்னொரு வாய்ப்பு கிடைக்காது. 3 மாதங்கள் திட்டமிட்டு, சொத்துகளை விற்று, பயணத் திட்டத்தை உருவாக்கியிருக்கிறேன். இதோ நாங்கள் பயணம் கிளம்பி 9 ஆயிரம் மைல்களைக் கடந்துவிட்டோம். இதுவரை ஒவ்வொரு நொடியையும் அனுபவித்து, மகிழ்ச்சியாக இருக்கிறோம். குழந்தை பெரியவளாகும்போது இந்தத் தருணங்களின் முக்கியத்துவத்தை உணர்ந்துகொள்வாள். என்னை ஒரு சிறந்த அப்பாவாக அவள் நினைத்தால், அதை விட எனக்கு என்ன சந்தோஷம் கிடைத்துவிட முடியும்?’’ என்கிறார் ஸு.

அடடா! அற்புதமான அப்பா!

அமெரிக்காவின் ப்ரூக்ளினைச் சேர்ந்தவர் நீனா கெனியலி. 63 வயதாகும் நீனா ஒரு தாய்க்கு உரிய அத்தனை விஷயங்களையும் திறம்படச் செய்து வருகிறார். அம்மாவின் அன்புக்காக ஏங்குபவர்களுக்கு, ஓர் அம்மாவாக இருந்து அரவணைக்கிறார், அன்பு காட்டுகிறார், ஆறுதல் அளிக்கிறார். ‘நீட் எ மாம்’ என்ற நிறுவனத்தையும் நடத்தி வருகிறார். ஒரு மணி நேரத்துக்கு 2,400 ரூபாய் கட்டணம் செலுத்தினால், அம்மாவின் பூரண அன்பைப் பெற முடியும். இந்த ஒரு மணி நேரத்தில் உங்கள் பிரச்சினைகளைக் காது கொடுத்துக் கேட்பார், ஆலோசனைகள் வழங்குவார், பொருட்கள் வாங்குவதற்கும், பார்ட்டிக்கும் கூட உதவி செய்வார். உங்களுக்கு விருப்பமான ஒரு பொருளை அன்போடு பரிசளிக்கவும் செய்வார்.

‘‘இரண்டு மகன்களுக்குத் தாய் நான். அருகில் இருந்த யோகா மையத்திலும் காபி ஷாப்களிலும் நிறைய இளைஞர்கள் கவலையோடு இருப்பதைப் பார்த்தேன். எனக்கும் குழந்தைகள் அன்பு வேண்டும். அவர்களுக்கும் சாய்ந்துகொள்ள ஒரு தோள் வேண்டும். உடனே

‘நீட் எ மாம்’ நிறுவனத்தை ஆரம்பித்தேன். ஒரு கப் காபியிலேயே உங்கள் கவலைகளை மறக்கச் செய்யக் கூடிய ஆற்றல் என்னிடம் இருக்கிறது. ஒரு நாளைக்கு 6 பேர்களுக்கு அம்மாவாக இருந்து ஆதரவு அளிக்கிறேன். நான் இங்கே வருபவர்களின் வாழ்க்கை முறைகளை விமர்சிக்க மாட்டேன். அவர்களின் சகோதர, சகோதரிகளை ஒப்பிட மாட்டேன். மிக மோசமான பாதிப்பில் இருப்பவர்களுக்கு நல்ல மருத்துவரைப் பரிந்துரை செய்துவிடுவேன். மிக முக்கியமாக அவர்கள் விருப்பப்படி இருப்பதற்கு அனுமதிப்பேன். படம் பார்க்கும்போது சூப் கேட்டால் செய்து கொடுப்பேன். ஆனால் அவர்கள் துணிகளைத் துவைத்து தருவதோ, வேறு எந்த வேலையோ செய்ய மாட்டேன். ஏனென்றால் நான் அவர்களின் வேலைக்காரி அல்ல, அம்மா’’ என்கிறார் நீனா.

காசிருந்தால் அம்மாவையும் வாங்க முடியும் இங்கே…

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x