Published : 13 Sep 2015 11:03 AM
Last Updated : 13 Sep 2015 11:03 AM

உலக மசாலா: அடடா! அட்டகாசம்!

ஜப்பானியர்களின் பழங்கால ஓவியங்களில் ஒன்று ஜியோடகு. மீன்களில் வண்ணங்களைத் தீட்டி, தாளில் பதிக்கும் கலை இது. மீனை எடுத்து, நன்றாகச் சுத்தம் செய்கிறார்கள். பிறகு தண்ணீரைத் துடைத்துவிட்டு, மீனின் மீது வண்ணங்களைத் தீட்டுகிறார்கள். ஆங்காங்கே பஞ்சு மூலம் மீனின் உடலில் புள்ளிகளையும் கோடுகளையும் வரைகிறார்கள். வண்ணம் காய்வதற்குள் தாளில் மீனைப் பதிக்கிறார்கள். அழகான மீன் ஓவியம் உருவாகிவிடுகிறது. மீன் ஓவியங்கள் ஜப்பானின் ஈடோ ஆட்சிக் காலத்தில் புகழ்பெற்று விளங்கின. மன்னரின் அரண்மனை முழுவதும் மீன் ஓவியங்களே இடம்பெற்று இருந்தன. இன்று இரண்டு விதமாக மீன் ஓவியங்கள் உருவாக்கப்படுகின்றன. நேரடியாக மீனின் உடலில் வண்ணங்களைத் தீட்டி, தாளில் பதிப்பிக்கும் முறை ஒன்று. மீன் மீது தாளைச் சுற்றி, பஞ்சு மூலம் வண்ணத்தைத் தீட்டும் முறை இன்னொன்று. ஆபத்து இல்லாத வண்ணங்களைத் தீட்டுவதால், ஓவியங்கள் வரைந்து முடிந்த பிறகு மீன்களைச் சுத்தம் செய்து விற்பனைக்கு அனுப்பிவிடுகிறார்கள்.

அடடா! அட்டகாசம்!

ஹவாயைச் சேர்ந்த தம்பதியர் டோரினா ரோசின் - மைகா சனீகல். டால்பின்களுடன் நெருக்கமாக இருப்பதால் டால்பின் மனிதர்கள் என்று அழைக்கப்படுகிறார்கள். டோரினாவின் பிரசவத்தைக் கூட டால்பின்களின் உதவியோடு கடலில் பிரசவிக்க வேண்டும் என்று திட்டமிட்டிருக்கிறார்கள். தண்ணீரில் பிரசவம் நடைபெறுவது உலகம் முழுவதும் இருக்கக்கூடிய விஷயம். ஆனால் டால்பின்களுக்கு நடுவே பிரசவிப்பது வித்தியாசமானது என்கிறார்கள் டோரினாவும் மைகாவும். ’’ஆன்மிகத்தில் அதிக நம்பிக்கை எங்களுக்கு உண்டு. டால்பின்களுக்கு எதையும் குணப்படுத்தும் சக்தி இருக்கிறது. அதனால் என்னுடைய பிரசவம் டால்பின்களுடன் நடைபெற வேண்டும் என்று விரும்புகிறேன். குழந்தை பிறந்த உடனே டால்பின்களிடம் பேசும்’’ என்கிறார் டோரினா. டால்பின்கள் மனிதர்களிடம் அன்பாகப் பழகக்கூடியவை என்று ஒரு கருத்து இருக்கிறது. மனிதர்கள் வளர்க்கக்கூடிய இடங்களில் இருக்கும் டால்பின்கள் வேறு மாதிரியானவை; கடலுக்குள் இருக்கும் டால்பின்கள் வேறு மாதிரியானவை. ஒரு சில நிமிடங்கள் அன்பாக இருக்கும் டால்பின், எந்த நேரம் வேண்டுமானாலும் மூர்க்கமாக மாறலாம். அதனால் டோரினாவின் இந்தச் செயல் கண்டிக்கத்தக்கது. ஆண் டால்பின்கள் பெண் டால்பின்களைக் கடத்திச் செல்லக்கூடியவை. சிறிய பார்பாய்ஸ், சுறா போன்றவற்றைக் கொல்லும் சக்தியும் இவற்றுக்கு உண்டு என்கிறார்கள் சமூக ஆர்வலர்கள்

புதுமை செய்யும் ஆர்வத்தில் ஆபத்தைத் தேடிக்கொள்ளக்கூடாது…

சீனாவின் குவாங்டோங் மாகாணத்தில் இருக்கிறது ஷிஷன் ஷுபென் ஆரம்பப் பள்ளி. கடந்த சில நாட்களாக செய்திகளில் அடிபட்டுக்கொண்டிருக்கிறது. பள்ளியில் தியானம் செய்யும் திட்டத்தை அறிமுகப்படுத்தியிருக்கிறார் பிரின்சிபல் உ. இதைப் பல பெற்றோர்கள் எதிர்த்து வருகிறார்கள். சிலர் ஆதரித்து வருகிறார்கள். எதையும் கண்டுகொள்ளாமல் தன் திட்டத்தை வெற்றிகரமாக்குவதில் கவனமாக இருக்கிறார் உ. குழந்தைகள் தினமும் ஒரு பழைய செய்தித்தாளுடன் வர வேண்டும். மதியம் அரை மணி நேரம் தாளை கீழே விரித்து, அதன் மீது அமர்ந்து தியானம் செய்ய வேண்டும். ஆனால் தியானம் செய்வதற்குப் பதில் குழந்தைகள் தூக்கத்துக்குச் சென்றுவிடுகிறார்கள். ‘’குழந்தைகளுக்கு சிறிய வயதிலேயே தியானம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்கே இதைக் கொண்டு வந்தேன். ஆனால் குழந்தைகள் தூங்கி விடுகின்றனர். அதனால் என்ன? குழந்தைகளுக்கு வேண்டியது ஓய்வு தானே? அது எப்படிக் கிடைத்தால் என்ன? தியானத்தை நான் கட்டாயப்படுத்தவும் இல்லை’’ என்கிறார் உ. பள்ளியில் தியானம் செய்யக்கூடிய அளவுக்கு தாராளமான இடமோ, காற்றோட்டமோ இல்லை. அதை முதலில் கொண்டு வரவேண்டும் என்கிறார்கள் பெற்றோர்கள். தியான வகுப்பை குழந்தைகள் விரும்ப ஆரம்பித்துவிட்டனர் என்பதுதான் முக்கியமான விஷயம்.

எதிர்ப்புத் தெரிவிப்பதற்கு முன் குழந்தைகளின் விருப்பத்தைக் கேட்டிருக்கலாமே...

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x