Published : 11 Oct 2015 11:54 AM
Last Updated : 11 Oct 2015 11:54 AM

உலக மசாலா: அடடா! அசத்துகிறாளே ஃபியலா!

தென்னாப்பிரிக்காவில் வசிக்கிறார் ரியானா வான். 53 வயதில் மார்பகப் புற்றுநோயிலிருந்து மீண்டிருக்கிறார். ‘‘மார்பகப் புற்றுநோயில் ஆபத்து குறைவு என்று சொன்னாலும் வலியும் வேதனையும் வார்த்தைகளால் சொல்ல முடியாது. ஆனால் எனக்கு வலி தெரியாமல் பார்த்துக்கொண்டதோடு, என்னை புற்றுநோயின் பிடியில் இருந்தும் காப்பாற்றியிருக்கிறது என் ஃபியலா சிறுத்தை. 2013-ம் ஆண்டு மார்பகப் புற்றுநோய் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. நான் மனம் உடைந்து போனேன். எப்படியோ சிறுத்தைக்கு என் வலி புரிந்துவிட்டது. என்னை அன்பாகக் கவனித்துக்கொண்டது. மார்பகம் நீக்கப்பட்டு, கீமோ தெரபி அளிக்கப்பட்டு, மொட்டைத் தலையுடன் வீடு வந்தேன். காரில் இருந்து இறங்கியதுமே சிறுத்தை தாவி அணைத்துக்கொண்டது. என்னை மார்போடு சேர்த்து அணைக்கும் சிறுத்தை, அறுவை சிகிச்சைக்குப் பிறகு பின்புறமாக அணைத்ததுதான் ஆச்சரியமாக இருந்தது. பேசும் சக்திதான் இல்லையே தவிர, அன்பு செலுத்துபவர்களின் அத்தனை உணர்வு களையும் ஒரு சிறுத்தையால் புரிந்துகொள்ள முடிகிறது. மருந்து களைவிட என் அன்புக் குழந்தை ஃபியலாவால்தான் நோயிலிருந்தும் வலியிலிருந்தும் மீண்டிருக்கிறேன்’’ என்கிறார் ரியானா.

அடடா! அசத்துகிறாளே ஃபியலா!

ஜெர்மனைச் சேர்ந்த 22 வயது ஜோயல் மிக்லெர் வித்தியாசமான பழக்கத்துக்கு அடிமையாகியிருக்கிறார். தன் உடலில் உள்ள சதைகளைக் கிழித்துக்கொண்டு சுரங்கப் பாதைகளை அமைத்து வருகிறார். முகத்தில் மட்டும் மூக்கு, உதடு உட்பட 11 இடங்களில் துளைகளைப் போட்டிருக்கிறார். கன்னங்களில் இருக்கும் 2 துளைகள்தான் மிகப் பெரியவை. ஒவ்வொன்றும் 34 மி.மீ. அகலம் கொண்டவை. இந்தத் துளைகளை 40 மி.மீ. அளவுக்குப் பெரிதாக்கும் முயற்சியில் இறங்கியிருக்கிறார் மிக்லெர். கன்னத்தில் இருக்கும் துளை வழியே அவருடைய பற்கள் தெரிகின்றன. சமீபத்தில் கின்னஸ் சாதனையில் இடம்பெற்றிருக்கும் மிக்லெர்,

‘‘13 வயதில் இருந்தே என் சதைகளைத் துளையிடும் ஆர்வம் வந்துவிட்டது. காதுகளில்தான் முதல் துளை இட்டேன். பிறகு கொஞ்சம் கொஞ்சமாக ஆர்வம் அதிகரித்து முகம் முழுவதும் துளைகளுடன் காட்சியளிக்கிறேன். 11 பெரிய துளைகள் தவிர, 27 துளைகள் போட்டு அணிகலன்களைக் குத்தியிருக்கிறேன். 6 டாட்டூகளை வரைந்திருக்கிறேன். நாக்கை இரண்டாக வெட்டியிருக்கிறேன். கன்னங்களில் உள்ள துளைகள் வழியே இரண்டு நாக்குகளையும் என்னால் வெளியே நீட்ட முடியும். உடல் உறுப்புகளை இப்படி மாற்றி அமைப்பது மிகவும் வலி மிகுந்த வேலை. ஒவ்வொரு துளைக்கும் ஒருவாரம் வலியுடன் போராடுவேன். என் மன உறுதியால் விரைவில் காயங்கள் ஆறிவிடும். இன்னும் சிறிது மெனக்கெட்டால் உலகிலேயே விநோதமான மனிதன் என்ற சாதனையைப் படைத்துவிடுவேன்’’ என்கிறார் மிக்லெர்.

என்ன விநோதமோ… குழந்தைகள் பார்த்தால் அலறப் போகிறார்கள்…

டெக்ஸாசில் பல மில்லியன் டாலர் மதிப்புள்ள பங்களா வாசலில் ஷரஃபத் கான் என்ற 69 முதியவர் வசித்து வருகிறார். மருத்துவராக இருக்கும் அவரது மனைவி, அவரை வெளியேற்றிவிட்டார். 6 மாதங்களாகப் பனியிலும் மழையிலும் குளிர் தாங்க முடியாமல் தவிக்கிறார். நாளுக்கு நாள் அவரது உடல் நிலை மோசமாகி வருகிறது. அழுக்கான ஒரே ஆடையைத்தான் அணிந்துகொண்டிருக்கிறார். கால்களுக்கு ஷுக்கள் இல்லை என்று அக்கம்பக்கத்தினர் வருந்துகிறார்கள். பாதி பங்களாவின் சொந்தக்காரரான ஷரஃபத் கானை விடுதியில் தங்கும்படி அவரது நண்பர்கள் கேட்டுக்கொண்டார்கள்.

‘‘என்னுடைய உணர்வுகள் இந்த வீட்டில்தான் பிணைக்கப்பட்டிருக்கின்றன. என்னால் எங்கும் வந்து தங்க இயலாது’’ என்று கூறிவிட்டார் ஷரஃபத் கான். புதுத் துணிகள், கம்பளிப் போர்வைகள், ஷுக்களை தெரிந்தவர்கள் கொடுத்தால் கூட, அவரது மனைவி அவற்றை அப்புறப்படுத்தி விடுகிறார். யாராவது உதவ நினைத்தால், அவர்கள் வீட்டுக்கு அழைத்துச் செல்லலாம், ஆனால் இந்தச் சொத்தில் இருந்து ஒரு டாலர் கூட கொடுக்க முடியாது என்று எழுதி வைத்திருக்கிறார். பிடிக்காவிட்டால் விவாகரத்து செய்துவிடும்படி மனைவியிடம் உறவினர்கள் சொல்கிறார்கள். மதத்தைக் காரணம் காட்டி அதற்கும் மறுத்துவிட்டார் மனைவி. சட்டப்படி விவாகரத்து செய்தால் பாதி சொத்து போய்விடும் என்பதால் விவாகரத்தும் செய்யாமல், வீட்டுக்குள்ளும் சேர்க்காமல் வைத்திருக்கிறார் மனைவி.

‘‘என்றாவது ஒருநாள் தான் செய்தது தவறு என்று என் மனைவி உணர்வார்’’ என்று காத்திருக்கிறார் ஷரஃபத் கான்.

மருத்துவர் ஒரு மனிதனை இப்படித் துன்புறுத்தலாமா?

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x