Published : 28 Mar 2017 10:41 AM
Last Updated : 28 Mar 2017 10:41 AM

உலக மசாலா: அடடா! அசத்துகிறாரே இந்த ஹிப் ஹாப் கணித ஆசிரியர்!

தென்னாப்பிரிக்காவின் கேப் டவுன் நகரில் உள்ள இபன் டாங்கஸ் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் கணித வகுப்புகள் என்றால் ஆவலுடன் காத்திருக்கிறார்கள்! குர்த் மின்னார் என்ற 33 வயது ஆசிரியர் ஹிப் ஹாப் இசையில் நடனத்தோடு கணிதப் பாடங்களைச் சொல்லித் தருகிறார்! கணிதம் என்றாலே பயந்து ஓடியவர்கள் இன்று கணித வகுப்புகளுக்காகவே விடுமுறை எடுக்காமல் பள்ளிக்கு வருகிறார்கள்! “நான் ஆரம்பத்தில் நடனக் கலைஞராக இருந்தவன். பிறகுதான் ஆசிரியர் பணிக்கு வந்தேன். எல்லாக் குழந்தைகளுக்கும் ஒரே மாதிரி கற்கும் திறன் இருக்காது. சிலருக்கு எளிதில் புரியும். சிலருக்கு அதிகக் காலம் தேவைப்படும். ஆனால் எல்லா மாணவர்களும் நடனத்தையும் இசையையும் ஒரே மாதிரி விரும்புகிறார்கள். அதனால் கணிதத்தை இசையும் நடனமும் கலந்து சொல்லிக் கொடுக்க முடிவெடுத்தேன். நான் நினைத்ததை விட மிக அதிகமாகவே மாணவர்கள் ஆர்வம் காட்டுகிறார்கள். நான் இந்தப் பள்ளிக்கு வந்தபோது எட்டாம் வகுப்பு மாணவர்கள், நான்காம் வகுப்பு மாணவர்களின் கணிதத்தைக் கூடப் போட முடியாதவர்களாக இருந்தனர். அவர்களுக்காகவே நான் பிரத்யேகமாக யோசித்து, பாடம் நடத்தும் முறையை வடிவமைத்தேன். மேஜையில் ஏறி நின்று, பாடிக்கொண்டும் ஆடிக்கொண்டும் கணிதத்தைக் கற்றுக் கொடுத்துவருகிறேன். சாதாரணமாகச் சொல்லிக் கொடுப்பதை விட இந்த முறையில் சொல்லிக் கொடுக்கும்போது அவர்கள் கவனம் இதிலேயே குவிக்கப்படுகிறது. வகுப்பை விட்டுச் சென்றாலும் மீண்டும் மீண்டும் இசை மூலம் கணிதம் நினைவுக்கு வந்துகொண்டே இருக்கிறது. வீட்டில் அவர்களும் பாடி, ஆடியபடியே கணிதத்தைச் செய்து பார்க்கும்போது மறந்து போவதற்கான வாய்ப்பே இல்லாமல் போய்விடுகிறது. மாணவர்களின் கற்கும் திறன் மிக நல்ல முறையில் அதிகரித்திருக்கிறது என்பதை அவர்களின் தேர்வு முடிவுகள் காட்டிவிட்டன. கற்பிப்பதில் இன்னும் பல புதுமைகளைப் புகுத்த இருக்கிறேன்” என்கிறார் குர்த் மின்னார்.

அடடா! அசத்துகிறாரே இந்த ஹிப் ஹாப் கணித ஆசிரியர்!

இங்கிலாந்தில் பிளாட்டினம் பிராப்பர்ட்டீஸ் நிறுவனம் ஆன்லைன் மூலம் ரியல் எஸ்டேட் தொழிலைச் செய்துவருகிறது. மூன்று படுக்கையறைகள் கொண்ட ஒரு வீடு விற்பனைக்கு வந்தது. ஆனால் அந்த வீட்டை வாங்குவதற்கு யாரும் முன்வரவில்லை. வீட்டின் உரிமையாளர் விரைவாக விற்பனை செய்து தரும்படிக் கேட்டார். பிளாட்டினம் நிறுவனத்தைச் சேர்ந்த ஸ்டீவ் லேகாக், விற்பனை செய்யும் பொறுப்பை ஏற்றுக்கொண்டார். கிளி போன்று மாறுவேடமிட்டார். வீட்டின் ஒவ்வொரு பகுதியிலும் உட்கார்ந்து, படுத்து, வேலை செய்வது போன்றெல்லாம் புகைப்படங்கள் எடுத்தார். பிறகு ஆன்லைனில் வீட்டு விற்பனை குறித்த தகவல்களுடன் புகைப்படங்களையும் வெளியிட்டார். ஒரே வாரத்தில் 1 லட்சம் பேர் பார்வையிட்டனர். ஸ்டீவ் லேகாக்கின் சக ஊழியர்கள் மட்டுமின்றி நிர்வாகத்தினரும் ஆச்சரியப்பட்டனர். இதுவரை இவ்வளவு பார்வையாளர்கள் தங்களுக்குக் கிடைத்ததில்லை என்கிறார்கள். 2 கோடியே 83 லட்சம் ரூபாய் மதிப்புள்ள வீட்டை வாங்குவதற்குப் பலரும் போட்டி போட்டுக்கொண்டிருக்கிறார்கள்.

வீடு விற்பனையில் புதிய முயற்சி!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x