Published : 30 Jun 2017 09:50 AM
Last Updated : 30 Jun 2017 09:50 AM

உலக மசாலா: அஜாக்கிரதையின் விலை 17 லட்சம்!

சீனாவின் யுன்னான் மாகாணத்தில் இயங்கி வருகிறது மிகப் பெரிய ருய்லி ஜிகாவோ நகைக் கடை. விலையுயர்ந்த கற்களால் செய்யப்பட்ட ஆபரணங்களுக்குப் புகழ்பெற்ற கடை இது. ’நகைகளை உடைத்தால், அதை நீங்களே வாங்கிக் கொள்ள வேண்டும்’ என்று ஆங்காங்கே எச்சரிக்கையும் எழுதி வைத்திருக்கிறார்கள். பெண் சுற்றுலாப் பயணி ஒருவர் நகைக் கடைக்கு வந்தார். விதவிதமான நகைகளை எடுத்துப் போட்டுப் பார்த்தார். பச்சை மாணிக்கக் கற்களால் செய்யப்பட்ட வளையல் அவரை மிகவும் ஈர்த்தது. வழவழப்பான அந்த வளையலை எடுத்துப் போடும்போது, கைதவறி கீழே விழுந்து, இரண்டாக உடைந்துவிட்டது. பொதுவாக வாடிக்கையாளர் உடைத்த பொருட்களை, அவர்களே வாங்கிக்கொள்ள வேண்டும் என்று சொன்னாலும் உரிமையாளர்கள் அதைப் பெரிதுபடுத்துவதில்லை. ஆனால் இது மிகப் பெரிய இழப்பு. ஒரு வளையலின் விலை 28 லட்சம் ரூபாய். விலையைப் பார்த்தவுடன் சுற்றுலாப் பயணி மயங்கி விழுந்துவிட்டார். அவருக்கு முதலுதவி அளிக்கப்பட்டது. “நல்லவேளை, அவருக்குப் பெரிய பிரச்சினைகள் ஏதும் இல்லை. பத்து நிமிடங்களில் எழுந்துவிட்டார். அவரிடம் வளையலுக்குரிய 28 லட்சத்தையும் நாங்கள் நஷ்ட ஈடாகக் கேட்கவில்லை. உடைந்த வளையலுக்கு உரிய 17 லட்சத்தை மட்டும் கொடுத்தால் போதும் என்று சொல்லிவிட்டோம். இது அவருக்கும் ஏற்புடையதாக இருக்கும் என்று நினைக்கிறோம்” என்கிறார் கடையின் உரிமையாளர் லின் வெய். விஷயம் சமூக வலைதளங்களில் பரவியது. இவ்வளவு பெரிய தொகையை அந்தப் பெண்ணால் கொடுக்க இயலுமா, கடையின் உரிமையாளர் செய்தது அநியாயம் என்று சிலர் கருத்து தெரிவித்து வருகிறார்கள். இன்னும் சிலர், அந்தப் பெண் கூடுதல் கவனத்துடன் இருந்திருக்க வேண்டும். இவ்வளவு விலையுயர்ந்த வளையலைப் போட்டுப் பார்க்க நினைத்தார் என்றால், அவரால் இந்த இழப்பீட்டைக் கொடுக்க முடியும் என்கிறார்கள்.

அஜாக்கிரதையின் விலை 17 லட்சம்!

நீங்கள் தூங்கிக்கொண்டிருந்தால் சாப்பிட வேண்டியதில்லை என்ற கருத்தை வைத்து உருவாகியிருக்கிறது ஸ்லீபிங் பியூட்டி டயட். உலகம் முழுவதும் எடை குறைப்புக்காகப் பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அவற்றில் ஒன்று, ஒரு நாளைக்கு 20 மணி நேரம் தூங்கினால் சாப்பிடுவதைத் தவிர்த்துவிடலாம் என்பது. விழித்திருக்கும் சிறிது நேரத்துக்கு மட்டும் வெகு குறைவாகச் சாப்பிட்டுக்கொள்ளலாம் என்பதால் உடல் எடை குறையும் என்கிறார்கள். ஆனால் இந்த ஸ்லீபிங் டயட்டை மருத்துவ உலகம் நிராகரிக்கிறது. இதில் நன்மைகளைவிட தீமைகளே அதிகம் இருப்பதாகச் சொல்கிறது. ஒரு நாளைக்கு 20 மணி நேரம் தூங்குவதே ஆரோக்கியமான விஷயம் இல்லை. தூக்க மாத்திரைகள் இல்லாமல் இவ்வளவு நேரம் தூங்கவே முடியாது. இப்படி மாத்திரைகளுடன் தூங்கும்போது நாளடைவில் மாத்திரை போட்டால்தான் தூக்கம் வரும் என்ற நிலைமைக்குச் சென்றுவிடுவார்கள். இயல்பு வாழ்க்கை பாதிப்பதோடு, மனநலத்தையும் கெடுத்துவிடும். குறைந்த உணவு வளர்சிதை மாற்றத்தையும் பாதிக்கும் என்று எச்சரிக்கிறார்கள் மருத்துவர்கள்.

இவ்வளவு நேரம் தூங்கி உடல் இளைத்து, எதைச் சாதிக்கப் போகிறார்கள்?

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x