Published : 29 Nov 2014 09:52 AM
Last Updated : 29 Nov 2014 09:52 AM

உலகின் மிகப்பெரிய கால்நடை பலி திருவிழா: 5 லட்சம் எருமை, ஆடு, மாடுகள் வெட்டப்படுகின்றன

உலகின் மிகப்பெரிய கால்நடை பலி திருவிழா நேபாளத்தில் நேற்று தொடங்கியது. 2 நாள்கள் நடைபெறும் இந்த திருவிழாவில் 5 லட்சம் எருமை, ஆடு, மாடுகள் வெட்டப்படுகின்றன.

நேபாளத்தின் பாரா மாவட்டம், பரியபூர் கிராமத்தில் கதிமாய் அம்மன் கோயில் உள்ளது. இந்த கோயிலில் 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை மிகப்பெரிய கால்நடை பலி திருவிழா நடைபெறுகிறது. இரண்டு நாள்கள் நடைபெறும் இத்திருவிழா நேற்று தொடங்கியது. ஒரு பன்றி, புறா, வாத்து, சேவல், எலி ஆகியவற்றை கோயில் பூசாரி பலியிட்டு விழாவை தொடங்கிவைத்தார்.

இரண்டு நாள்களில் சுமார் 5 லட்சம் கால்நடைகள் வெட்டப்பட உள்ளன. இதில் எருமைகளின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும் என்று உள்ளூர் மக்கள் தெரிவித்துள்ளனர்.

கதிமாய் கோயில் திருவிழாவுக்கு இந்தியாவில் இருந்து கால்நடைகளை கொண்டு செல்வதற்கு உச்ச நீதிமன்றம் கடந்த மாதம் தடை விதித்தது. ஆனாலும் பிஹாரில் இருந்து ஏராளமான கால்நடைகள் எல்லை தாண்டி கொண்டு செல்லப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அந்த வகையில் கோயிலில் பலியிடப்படும் கால்நடைகளில் 70 சதவீதம் இந்தியாவில் இருந்து கொண்டு செல்லப்படுவதாகக் கூறப்படுகிறது.

கதிமாய் கோயிலுக்கு அருகில் கடந்த 3 மாதங்களாக மிகப்பெரிய கால்நடை சந்தைகள் நடத்தப்பட்டு வருகின்றன. இதில் இதுவரை ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட ஆடுகள் விற்கப்பட்டுள்ளன.

பிராணிகள் நல அமைப்பு எதிர்ப்பு

இதனிடையே கதிமாய் கோயில் திருவிழாவுக்கு பிராணிகள் நல அமைப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்கள் கூறியபோது, சிலரின் வணிக நோக்கத்துக்காக 5 லட்சம் கால்நடைகள் பலியாவது துரதிருஷ்டவசமானது என்று குற்றம்சாட்டினர்.

கோயில் பக்தர்களுக்கும் பிராணிகள் நல அமைப்பினருக்கும் இடையே மோதல் ஏற்படாமல் தடுக்க பரியபூர் கிராமத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x