Published : 14 Aug 2014 05:47 PM
Last Updated : 14 Aug 2014 05:47 PM

உடல் எதிர்ப்புச் சக்தியை எபோலா வைரஸ் எப்படி செயலிழக்கச் செய்கிறது? - ஆய்வில் கண்டுபிடிப்பு

உலகை அச்சுறுத்தி வரும் எபோலா என்ற உயிர்க்கொல்லி வைரஸ் மனித உடலின் எதிர்ப்புச் சக்தியை எப்படிச் செயலிழக்கச் செய்கிறது என்பது ஆய்வில் தெரியவந்துள்ளது.

இதனால் அதன் செயல்பாடுகளைத் தடுக்கும் மருந்தைக் கண்டுபிடிக்க முடியும் என்று இந்த ஆய்வுக்குழுவினர் தீவிரமாக நம்புகின்றனர்.

மேற்கு ஆப்பிரிக்க நாடுகளை பதட்டத்திற்கு உள்ளாக்கிய இந்த எபோலா, முதன்முதலாக 40 ஆண்டுகளுக்கு முன்னர் கண்டுபிடிக்கப்பட்டது.

இந்த ஆய்வை மேற்கொண்டவர்களில் வாஷிங்டன் பல்கலைக் கழகத்தின் மருத்துவப் பள்ளியைச் சேர்ந்த அமரசிங்கே மற்றும் பலர் குறிப்பிடத்தகுந்தவர்கள்.

எபோலா புரோட்டீன் விபி24 என்ற ஒன்று செல்லின் எதிர்ப்புச் சக்தியை கடுமையாக பாதிப்படையச் செய்கிறது.

“எபோலா வைரஸ் முக்கிய எதிர்ப்புச் சக்தி திரவமான இண்டெர்ஃபெரான் என்பதை கடுமையாகச் செயலிழக்கச் செய்கிறது என்பது நீண்ட காலத்திற்கு முன்னரே தெரிந்த விஷயம், இப்போது எபோலா எப்படி இந்தக் காரியத்தைச் செய்கிறது என்பது தெரியவந்துள்ளது. இதனால் இந்த கொடிய நோய்க்கு புதிய சிகிச்சை முறைகளை வளர்த்தெடுக்க அனுகூலமான நிலை தோன்றியுள்ளது” என்று டாக்டர் அமரசிங்கே தெரிவித்துள்ளார்.

இண்டெர்ஃபெரான் என்ற அந்த திரவத்தின் எபோலா வைரஸ் எதிர்ப்புச் செய்தி அல்லது சமிக்ஞையான ஸ்டாட் 1 என்பதை எபோலா வைரஸ் தொற்று தொந்தரவு செய்கிறது. அதாவது செல் மையத்திற்கு அந்தச் சமிக்ஞை சென்றடைந்தால்தான் உடலின் இயல்பான எதிர்ப்புச் சக்தி எபோலாவை எதிர்த்துப் போராடும். ஆனால் அந்த சமிக்ஞையை எபோலா திறமையாகத் தடுத்து விடுகிறது.

சாதாரணமாக இண்டெர்ஃபெரான் என்பது ஸ்டாட் 1 என்ற அந்தச் செய்தியை செல் மையத்திற்கு அனுப்பிவிடும். அங்கு அது மரபணுக்களையும் நூற்றுக் கணக்கான எதிர்-வைரஸ் புரதங்களையும் செயல்பட முடுக்கி விடுகிறது.

ஆனால் விபி24 என்ற என்ற புரோட்டீன் ஸ்டாட் 1-உடன் சேரும்போது அது செல்மையத்திற்குச் செல்வதிலிருந்து தடுக்கப்படுகிறது. இதனால் உடலின் இயல்பான வைரஸ் எதிர்ப்புச் சக்திகள் எபோலாவினால் செயலிழந்து விடுகிறது.

எபோலா விபி24 எவ்வாறு இந்த இடையூறைச் செய்கிறது என்பதைக் கண்டுபிடித்து விட்டால் எபோலாவை வீழ்த்தலாம் என்று இந்த ஆய்வாளர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x