Published : 31 Jul 2014 09:00 AM
Last Updated : 31 Jul 2014 09:00 AM

இஸ்ரேல் தொடர்ந்து குண்டு மழை: தரைமட்டமாகிறது காஸா: இதுவரை 1,283 பாலஸ்தீனர்கள் பலி

காஸா பகுதி மீது இஸ்ரேல் தொடர்ந்து குண்டுமழை பொழிந்து வருவதால், காஸா நகரம் தரைமட்டமாகி வருகிறது. கடந்த 23 நாட்களாக நடந்து வரும் இஸ்ரேல்-ஹமாஸ் அமைப்பினர் மோதலில் இதுவரை 1,283 பாலஸ்தீனர்கள் உயிரிழந்துள்ளனர். இதில் பெரும் பாலானவர்கள் பொதுமக்கள்.

வடக்கு காஸாவிலுள்ள ஐ.நா. பள்ளி மீது இஸ்ரேல் ராணுவம் புதன்கிழமை நடத்திய தாக்குதலில் 20-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். போர் காரணமாக இடம்பெயர்ந்தவர்கள் ஐ.நா. பள்ளியில் தஞ்சமடைந்துள்ளனர்.ஜபாலியாவில் உள்ள பாலஸ்தீன அகதிகள் முகமையின் பெண்கள் பள்ளியிலும் இஸ்ரேல் வீசிய குண்டுகள் விழுந்தன. தொடர்ந்து அப்பகுதி மீது ராணுவ டாங்கிகள் குண்டுமழை பொழிந்தன.

பாலஸ்தீன பிரதிநிதிகள், எகிப்துக்கு சென்று தற்காலிக போர்நிறுத்தம் குறித்து ஆலோசிக்க ஆயத்தமாகி வந்த நிலையில் இத்தாக்குதல் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இஸ்ரேல்-ஹமாஸ் தற்காலிக போர்நிறுத்த பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு செய்யும் சர்வதேச நாடுகளின் முயற்சி தோல்வியில் முடிவடைந்துள்ளது.

இதனிடையே செவ்வாய்க் கிழமை நடந்த தாக்குதலில் 10 இஸ்ரேல் ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். இதில் 5 பேர், இஸ்ரேல் பகுதிக்குள் ஊடுருவ முயன்ற ஹமாஸ் இயக்கத்தினரால் கொல்லப்பட்டனர். கடந்த 3 வாரங்களாக நடந்து வரும் சண்டையில் உயிரிழந்த இஸ்ரேல் ராணுவ வீரர்களின் எண்ணிக்கை 53 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 3 இஸ்ரேல் குடிமக்களும் இறந்துள்ளனர்.

ஹமாஸ் இயக்கத்தினரின் சுரங்கப்பாதைகளை அழிக்கும் வரை ராணுவம் தன் தாக்குதலை நிறுத்தாது என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதான்யாஹு தெரிவித்தார். ரம்ஜான் பண்டிகையாக இருந்த போதும், இஸ்ரேல் தொடர்ந்து செவ்வாய்க்கிழமையும் தாக்குதலை மேற்கொண்டதால் காஸாவில் நூற்றுக்கும் அதிகமானோர் உயிரிழந்தனர்.

முப்படை

வான்வழி, தரை வழி, கடல் வழி என அனைத்து வழியிலும் இஸ்ரேல் ராணுவம் கடந்த 8-ம் தேதி முதல் மேற் கொண்டுள்ள தாக்குதலில் இதுவரை 1,283 பாலஸ்தீனர்கள் உயிரிழந்துள்ளனர். 7,000க்கும் அதிகமானவர்கள் காயமடைந் துள்ளனர். இந்தப் போர் காரண மாக, 2.15 லட்சம் காஸா மக்கள் வீடுகளை விட்டு வெளியேறியுள் ளனர் என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

ஒரு மணி நேரத்தில் தரைமட்டம்

இஸ்ரேல் ராணுவம் காஸா மீது சரமாரியாக குண்டுகளை வீசி வருவதால், காஸாவிலுள்ள கட்டிடங்கள் முழுமையாக அழிக்கப்பட்டு வருகின்றன. ஹமாஸ் இயக்கத்தினர் இஸ்ரேலுக்குள் நுழைவதற்காகத் தோண்டியுள்ள சுரங்கப் பாதைகளை அழிப்பதற்காகவே ராக்கெட் வீசி தாக்குவதாக இஸ்ரேல் ராணுவம் காரணம் கூறுகிறது.

வடக்கு காஸா பகுதி மீது இஸ்ரேல் ராணுவம் ஒரு மணி நேரம் மிகத்தீவிரமான தாக்குதலைத் தொடுத்தது. மாலை 4 மணிக்குத் தொடங்கிய இத்தாக்குதல் 5 மணி வரை நீடித்தது. அந்த ஒரு மணி நேரத்தில் கட்டிடங்கள் நிறைந்திருந்த அப்பகுதி முழுமையாக தரைமட்டமாகி விட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x