Published : 16 Jun 2014 04:51 PM
Last Updated : 16 Jun 2014 04:51 PM

இராக்கின் தல் அஃபார் நகரை கைப்பற்றியது சன்னி முஸ்லிம்கள் படை

இராக் நாட்டில் வடக்கு பிராந்தியத்தில் உள்ள முக்கிய நகரான தல் அஃபாரை இன்று அதிகாலை சன்னி முஸ்லிம்களின் படை கைப்பற்றியது. இத்தகவலை அந்நகரத்தின் மேயர் அப்துல்லா அப்தோல் உறுதிப் படுத்தியுள்ளார்.

அல் தபார் நகரில் 2 லட்சம் மக்கள் வாழ்கின்றனர். இவர்களில் ஷியா பிரிவினரும், சன்னி டர்கோமென் பிரிவினரும் அடங்குவர்.

ஏற்கெனவே முன்னாள் அதிபர் சதாம் உசேனின் சொந்த நகரான தெஹ்ரிக் உள்ளிட்ட பல்வேறு நகரங்களை சன்னி முஸ்லீமகள் கைப்பற்றிய நிலையில், ஷியா முஸ்லிம்களால் நடத்தப்படும் பிரதமர் நூரி அல் மாலிக்கி தலைமையிலான அரசு முடங்கும் நிலை உருவாகியுள்ளது.

நேற்று (ஞாயிற்றுக் கிழமை) முதல் அல் தபார் நகர் மீது சன்னி முஸ்லிம் படைகள் தாக்குதல் நடத்தி வந்த நிலையில் இன்று அதிகாலை நகரை முழுமையாக தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.

பொதுமக்கள் பலர் கூட்டமாக கூட்டமாக குர்திஸ் படைகள் கட்டுப்பாட்டுக்குள் உள்ள இடங்களுக்கு இடம் பெயர்ந்து விட மேலும் பலர் பீதியில் வீடுகளுக்குள்ளேயே முடங்கியுள்ளதாக தெரிகிறது.

இராக் நாட்டில் ஷியா, சன்னி முஸ்லிம்களுக்கு இடையே நீண்ட காலமாக மோதல் நீடித்து வருகிறது. சன்னி பிரிவைச் சேர்ந்த சதாம் உசேன் வீழ்ச்சிக்குப் பின்னர், அமெரிக்க ஆதரவு பெற்ற ஷியா பிரிவு அரசு ஆட்சி செய்து வருகிறது.

இந்த அரசை எதிர்த்து சன்னி முஸ்லிம் பிரிவைச் சேர்ந்த “இஸ்லாமிக் ஸ்டேட் ஆப் இராக் அன்ட் தி லெவன்ட்' (ஐஎஸ்ஐஎல்)” என்ற அமைப்பு போரிட்டு வருகிறது. இந்த அமைப்புக்கு ஆதரவாக சதாம் உசேன் ஆதரவாளர்கள் மற்றும் இதர சன்னி பிரிவினர் களமிறங்கியுள்ளனர். அல்கொய்தாவும் ஆதரவு தெரிவித்துள்ளது.

ஐஎஸ்ஐஎல் படையினர் நாட்டின் 2-வது பெரிய நகரான மொசுல் உள்பட முக்கிய நகரங்களைக் கைப்பற்றியுள்ளனர். மொசுல் நகரில், ஷாரியா சட்டத்தை அமல்படுத்தப் போவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஐஎஸ்ஐஎல் படைகள் தலைநகரான பாக்தாதுக்கு மிக அருகில் வந்துவிட்டன. இதனால், தற்போதுள்ள நிலைமையைச் சமாளிக்க முடியாமல் அங்குள்ள அரசுக்கு மிகப்பெரிய நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

இதற்கிடையில், ஐஎஸ்ஐஎல் அமைப்பின் இணையதளத்தில் ஈராக் படையினர் கொல்லப்பட்டு குவியல் குவியலாக குவிக்கப்பட்டிருப்பது போன்ற புகைப்படங்களை வெளியிடப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x