Last Updated : 10 Sep, 2015 09:59 AM

 

Published : 10 Sep 2015 09:59 AM
Last Updated : 10 Sep 2015 09:59 AM

ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற ‘‘ஸ்பெல்லிங் பீ’’ போட்டியில் தமிழ் வம்சாவளி சிறுவன் வெற்றி

ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற ‘‘ஸ்பெல்லிங் பீ ’’ (ஆங்கில வார்த்தைகளுக்கு சரியான எழுத்துகளை கூறுவது) போட்டியில் இந்திய வம்சாவளி மாணவர் அனிருத் கதிர்வேல் (9) முதலிடம் பிடித்து சாதனை படைத்தார். இவரது பெற்றோர் தமிழகத்தில் இருந்து ஆஸ்திரேலியாவுக்கு குடிபெயர்ந்தவர்கள் ஆவர்.

‘தி கிரேட் ஆஸ்திரேலியன் ஸ்பெல்லிங் பீ ’ என்ற இந்த போட்டியில் ஆஸ்திரேலியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான மாணவ, மாணவியர் பங்கேற்றனர். இதில் தமிழ் மாணவர் ஒருவர் வெற்றி பெற்றது நம் அனைவருக்கும் பெருமை சேர்ப்பதாக அமைகிறது.

இந்த வெற்றி மூலம் அனிருத்துக்கு ரூ.32 லட்சம் கல்வி உதவித் தொகையும் அவரது பள்ளிக்கு 6.4 லட்சம் உதவித் தொகையும் கிடைத்துள்ளது.

அனிருத்தின் பெற்றோர் பிரித்விராஜ் சுஜாதா தம்பதி 16 ஆண்டுகளுக்கு முன்பு ஆஸ்திரேலியாவுக்கு குடிபெயர்ந்தனர். அனிருத், மெல்போர்ன் நகரில் பிறந்தான்.

முதல் வகுப்பு முதலே அனிருத் ‘‘ஸ்பெல்லிங் பீ ’’ போட்டியில் பங்கேற்க தொடங்கிவிட்டான். இப்போது கிடைத்துள்ள வெற்றி குறித்து பேசிய அனிருத், இது கனவுபோல உள்ளது. இந்த நாள் எனது வாழ்வின் மிகச்சிறந்த நாள். 2 வயது முதலே மெதுவாக எழுத்துகளை வாசிக்க தொடங்கிவிட்டேன் என்று எனது அப்பா, அம்மா கூறினார். அதன் பிறகு அவர்கள் எனக்கு அளித்த பயிற்சியும், ஊக்கமும்தான் இப்போதைய வெற்றிக்கு முக்கிய காரணம்.

தினமும் புதிதாக 10 ஆங்கில வார்த்தைகளை கற்றுக் கொள்கிறேன். எதிர்காலத்தில் நரம்பியல் விஞ்ஞானியாக மாறி மனித மூளையில் ஏற்படும் அல்சைமர் போன்ற நோய்கள் குறித்து ஆய்வு மேற்கொண்டு அவற்றை தீர்க்க முயற்சிப்பேன். மனித மூளையின் மீது அளவில்லாத ஆர்வம் உள்ளது. எனக்கு இந்திய சினிமாக்களும் மிகவும் பிடிக்கும் என்று அனிருத் கூறினார்.

அனிருத்துக்கு தாய்மொழியான தமிழையும் அவனது பெற்றோர் சிறப்பாக கற்றுக் கொடுத்துள்ளனர். அவனுக்கு தமிழ் பேச, வாசிக்க, எழுதவும் தெரியும் என்பது குறிப்பிடத்தக்கது.

இதே போட்டியில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சிறுமி ஹர்பிதா (8) முதல் 5 இடத்துக்குள் வந்துள்ளார். ஆஸ்திரேலியா முழுவதும் இருந்தும் 3 ஆயிரம் மாணவ, மாணவியர் இதில் பங்கேற்றனர். இறுதிச் சுற்றுக்கு 50 பேர் தகுதி பெற்றனர். இந்த நிகழ்ச்சி ஆஸ்திரேலிய தொலைக்காட்சியிலும் ஒளிபரப் பானது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x