Last Updated : 05 Nov, 2014 06:11 PM

 

Published : 05 Nov 2014 06:11 PM
Last Updated : 05 Nov 2014 06:11 PM

அமெரிக்க செனட்டில் ஒபாமாவுக்கு பெரும் பின்னடைவு, இந்திய-அமெரிக்க ஆளுநரான நிக்கி ஹேலேக்கு வெற்றி

அமெரிக்க நாடாளுமன்ற மற்றும் செனட் உறுப்பினர்களுக்கான தேர்தலில், அந்நாட்டின் குடியரசுக் கட்சி வெற்றிபெற்றுள்ளது. இதனால் அதிபர் ஒபாமாவின் ஜனநாயகக் கட்சி ஆட்சிக்கு கடுமையான நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

இந்த தேர்தலில் செனட் உறுப்பினர்களை ஜனநாயகக் கட்சி இழந்ததைத் தொடர்ந்து, அடுத்த இரண்டு ஆண்டு கால ஆட்சியில் அதிபர் ஒபாமா பெரும்பான்மையின்றி ஆட்சி நடத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. அமெரிக்க அதிபர் ஒபாமாவின் அனைத்து திட்டங்களை அமல்படுத்துவதற்கு அவர் இனி எதிர்க்கட்சி செனட் உறுப்பினர்களின் ஒப்புதலைப் பெற வேண்டி இருக்கும். கடந்த 8 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு இந்த தேர்தலில் எதிர்க்கட்சியான குடியரசுக் கட்சி பெரும்பான்மை பலம் பெற்றுள்ளது.

இந்த மாற்றத்துக்கு அதிபர் ஒபாமாவின் அரசியல் மற்றும் வெளியுறவு கொள்கைகளே காரணமாக கருதப்படுகிறது.

அமெரிக்க நாடளுமன்றத்தின் பிரதிநிதிகள் அவை, செனட் அவைக்கு (மூன்றில் ஒரு பகுதி மட்டும்) செவ்வாய்கிழமை தேர்தல் நடைபெற்றது. இத்துடன் 38 மாகாணங்களுக்கான கவர்னர் பதவிகள், 46 மாகாண சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் உள்ளாட்சிமன்ற பிரதிநிதிகளுக்கான தேர்தலும் நடைபெற்றது.

இந்த தேர்தலுக்கான வாக்கு நிலவரம் இன்று (புதன்கிழமை) காலை முதலே வெளியாகி வருகிறது. அதில், தற்போதைய நிலவரப்படி, செனட் அவையில் எதிர்க்கட்சியான குடியரசுக் கட்சியின் 45 உறுப்பினர்கள் என்ற எண்ணிக்கை 52 ஆக உயர்ந்துள்ளது. அதே போல, அதிபர் ஒபாமாவின் ஜனநாயகக் கட்சியின் பலம், இருந்த 53 உறுப்பினர்களிலிருந்து 43 ஆகக் குறைந்து பின்னடைவை சந்தித்து வருகிறது.

இதன் மூலம் அமெரிக்க செனட் அவையில் குடியரசுக் கட்சி பெரும்பான்மை பலம் பெற்றுள்ளது. மேலும், பிரதிநிதிகள் அவையில் குடியரசுக் கட்சியின் பலம் 225 என்ற எண்ணிக்கையிலிருந்து 235 ஆக அதிகரித்துள்ளது. ஒபாமாவின் ஜனநாயக கட்சி 8 இடங்கள் குறையப் பெற்று 157 இடங்களாக உள்ளது.

அமெரிக்க வாழ் இந்திய பெண் வெற்றி

தெற்கு கரோலினா ஆளுநர் நிக்கி ஹாலே தொடர்ந்து இரண்டாவது முறையாக வெற்றி கண்டுள்ளார். இந்திய வம்சாவளி பெண் இரண்டாவது முறையாக வெற்றி கண்டுள்ளது அமெரிக்க வாழ் இந்தியர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது. இதுபோல கலிபோர்னியா அட்டர்னி ஜெனரல் பதவிக்கு கமலா ஹாரிஸ் (50) இரண்டாவது முறையாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x