Last Updated : 29 Nov, 2015 12:51 PM

 

Published : 29 Nov 2015 12:51 PM
Last Updated : 29 Nov 2015 12:51 PM

அடாவடி பின்னணி கொண்ட ஆஸ்திரேலியா - 13

கிளாடியேட்டர் படத்தில் மின்னிய ரஸல் க்ரோ, எலிச பெத் வேடத்தில் திரையில் வாழ்ந்த கேட் ப்ளான்செட், ப்ரேவ்ஹார்ட் படத்தில் நம்மை வரலாற்று காலத்துக்கு அழைத்துச் சென்ற மெல் கிப்ஸன், மெளலின் ரூஜ் படத்தில் திறமை காட்டிய நிகோல் கிட்மேன் - இப்படி உலகின் தலைசிறந்த நடிகர்கள் பட்டியலில் இடம் பெற்ற ஆஸ்திரேலியர்கள் பலர் உண்டு.

இவர்கள் எல்லாம் ஹாலிவுட் சரித்திரத்தில் நீங்காத இடம் பெற்ற வர்கள். ஆனால் ஆஸ்திரேலிய திரைப்பட வரலாறை நோக்கினால் அது மிகவும் மேடு பள்ளம் வாய்ந் ததாக இருக்கிறது. திடீரென்று மிகக் குறைவான திரைப்படங்களே தயாரிக்கப்படும். இன்ன காரணம் என்றே விளங்காமல் எக்கச்சக்கமான திரைப்படங்கள் பார்வைக்கு வரும்.

மெல்போர்னிலுள்ள அதனே யம் அரங்கு (Athanaeum Hall) மிகவும் தொன்மையானது. 1880-களிலிருந்தே இருக் கிறது. தொடக்கத்தில் இது நடன அரங்காகத்தான் இருந்தது. பின்னர் திரைப்படங்களும் இங்கு திரையிடப்பட்டன. தொடக்கத் தில் குறும்படங்கள்தான் இங்கு திரையிடப்பட்டன.

உலகின் மிகத் தொன்மையான திரைப்பட ஸ்டுடியோக்களில் ஒன்று லைம்லைட் டிபார்ட்மென்ட். மெல்போர்னில் இயங்கிய இது 1897-ல் தொடங்கப்பட்டது. 19 வருடங்களில் 300 திரைப்படங்களை (குறும்படங்கள் உட்பட) இது தயாரித்தது. அந்தக் காலத்தில் இது ஒரு பெரும் சாதனை.

உலகின் முதல் முழுநீள திரைப்படம் என்று யுனெஸ் கோவால் அறிவிக்கப்பட்டுள்ள படம் The story of the Kelly Gang. 4000 அடி பிலிம் நீளம் கொண்ட இந்தப் படம் ஒரு மணி நேரத்திற்கும் மேல் ஓடிய மாபெரும் வெற்றிப்படம். விமர்சகர்கள் பலரின் பாராட்டுதலைப் பெற்றாலும் சிலரது கண்டனங்களையும் பெற்றது.

இந்தத் திரைப்படம் வெளியாவதற்கு 26 வருடங்களுக்கு முன் தூக்கிலிடப்பட்டவர் ஆஸ்திரேலியரான நெட் கெல்லி (Ned Kelly). இவரைப் போன்றவர்களை ‘ புஷ் ரேன்ஜர்கள் (Bush rangers) என்று குறிப்பிடுவார்கள்.

ஆஸ்திரேலியாவில் உருவாகிக் கொண்டிருந்த குடியேற்றங்களில் உள்ள சிறைகளில் பிரிட்டிஷ் கைதிகள் அடைக்கப்பட்டனர். இந்தச் சிறைகளிலிருந்து தப்பி ஆஸ்திரேலியாவிலேயே மறைந்து அதிகாரிகளுக்குக் கண்ணாமூச்சி காட்டிக் கொண்டி ருந்தவர்களைத்தான் புஷ் ரேன்ஜர்கள் என்று அழைத்தனர். இவர்களைப் பற்றிய கதைகளும் நாடகங்களும் அப்போது ஆஸ்திரேலிய மக்களிடையே வெகு பிரபலமாக இருந்தன.

அப்படிப்பட்டவர்களில் ஒருவ ரான நெட் கெல்லியின் வாழ்க் கையைக் கதையாகக் கொண்ட இந்தப் படத்தில் பின்னர் நடுநடுவே சில காட்சிகள் ஒட்டப்பட்டு கதையே மாற்றப்பட்டதாகவும் புகார்கள் எழுந்தன. அது தனிக்கதை.

1906 டிசம்பர் 26 அன்று மெல்போர்னில் இந்தத் திரைப்படம் வெளியானபோது தொடர்ந்து ஐந்து வாரங்கள் அரங்கு நிறைந்தவை யாக இருந்தன. படத் தயாரிப்பா ளர்கள் சாமர்த்தியமாகச் செயல் பட்டிருந்தனர். தொடக்கத்தில் (அதாவது அரங்கில் திரையிடு வதற்கு முன்) இலவசமாகவே சில திடல்களில் இந்தப்படத்தை திரையிட்டார்கள். வரவேற்பு நன் றாக இருந்தது. பின்னர் திரையரங் கில் காட்டியபோது இசை அமைப்பையும் சேர்த்துக் காட்டினார்கள். துப்பாக்கி ஒலி, தேங்காய் ஓடு குண்டுகளின் சப்தம் போன்றவை படத்துக்குத் தனி அந்தஸ்தை கொடுக்க, ஒலியுடன் பார்த்து ரசிப்பதற்காக மீண்டும் மக்கள் திரையரங்குகளை நோக்கி அலைமோதினார்கள்.

திரையிடப்பட்ட இரு வாரங் களுக்குப் பிறகு திரையில் நடப்பதை விவரிக்க வர்ணனை யாளர் ஒருவரும் நியமிக்கப்பட, ‘முழு அர்த்தத்தோடு படத்தை ரசிக்க’ ரிபீட் ரசிகர்கள் வந்தனர்.

ஒரு கிரிமினலை கதாநாயக னாகக் காட்டுவதா? ஆஸ்திரேலியா வில் சில பகுதிகளில் இந்தப் படம் தடை செய்யப்பட்டது. விக்டோரியா மாநில அரசு ‘புஷ் ரேன்ஜர்கள்’ பற்றிய படங்களுக்கெல்லாம் தடை விதிப்போம்’ என்றது.

இத்தனையும் மீறி தொடர்ந்து 20 வருடங்களுக்கு ஆஸ்திரேலியாவில் மாறி மாறி திரையிடப்பட்டது இந்தப் படம். ஆனால் காலப் போக்கில் இதன் பிலிம்ரோல்கள் சிதிலமடைந்து, உரிய பிரதிகளும் இல்லாமல் போகவே இப்போது பதினேழு நிமிடங்கள் மட்டுமே ஓடக்கூடிய பாகங்கள்தான் கிடைத்துள்ளன. ‘நல்லவேளையாக உச்சக்காட்சி இன்னமும் இருக்கிறது’ என்று சந்தோஷப்படுகிறார்கள் சில ரசிகர்கள்.

(உலகம் உருளும்)

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x