Last Updated : 12 Nov, 2015 09:11 AM

 

Published : 12 Nov 2015 09:11 AM
Last Updated : 12 Nov 2015 09:11 AM

அடாவடிப் பின்னணி கொண்ட ஆஸ்திரேலியா - 3

பிரிட்டன் ஆஸ்திரேலியாவின் ஒரு பகுதியில் கால் பதித்த தற்கு ஒரு நூற்றாண்டுக்கு முன்னதாகவே நெதர்லாந்துக் காரர்கள் அந்தப் பெரிய நிலப்பகுதியின் மேற்கு மற்றும் தெற்கு கடற்கரைப் பகுதிகளை ஆக்கிரமித்து விட்டிருந்தார்கள். அதாவது ஆஸ்திரேலியாவின் மேற்குப் பகுதி டச்சுக்காரர்களின் வசம் சென்று விட்டிருந்தது. அந்தப் பகுதியை அவர்கள் ‘‘நியூ ஹாலந்து’’ என்று குறிப்பிடத் தொடங்கினர்.

என்றாலும் அதிகாரபூர்வமாக ஆஸ்திரேலியாவின் ஒரு பகுதியை முதலில் தன் வசம் கொண்டு வந்தது பிரிட்டன்தான். தங்கள் கைவசம் வந்த பகுதியை ‘‘நியூ செளத் வேல்ஸ்’’ என்று கேப்டன் ஜேம்ஸ் குக் குறிப்பிட்டார். இது கிட்டத்தட்ட கிழக்கு ஆஸ்திரேலியா முழுவதையுமே கொண்டிருந்தது. இந்தப் பகுதி விரைவிலேயே உலகில் ஒரு முக்கிய இடத்தைப் பெறும் என்று அப்போதே அவர் குறிப்பிட்டார்.

டச்சுக்காரர்கள் தாங்கள் ஆக்ரமித்த பகுதிக்கு எதற்காக நியூ ஹாலந்து என்ற பெயரை வைக்க வேண்டும்? 1644-ல் ஹாலந்தைச் சேர்ந்த கடல்வழி கண்டுபிடிப்பாளரான ஏபெல் டஸ்மான் என்பவர் பல புதிய தீவு களைக் கண்டுபிடித்து அவற்றை ஹாலந்துக்குச் சொந்தமாக்கினார். (ஹாலந்தும், நெதர்லாந்தும் கிட்டத்தட்ட ஒன்றுதான் என்பது உங்களுக்குத் தெரிந்திருக்கும்). இப்போது ஆஸ்திரேலியாவின் ஒரு பகுதியாக விளங்கும் டாஸ் மேனியா என்ற பகுதிக்குக்கூட இவர் பெயர்தான் சூட்டப்பட்டுள்ளது.

தொடக்கத்தில் தன்னால் கண்டுபிடிக்கப்பட்ட தென் பகுதிக்கு டெர்ரா ஆஸ்ட்ரேலிஸ் என்றுதான் இவர் பெயரிட்டிருந்தார். ஆனால் 1788-ல் சிட்னி பகுதியில் கிழக்கு ஆஸ்திரேலியாவை பிரிட்டன் கைப்பற்றியபோது அந்தப் பகுதிக்கு நியூ செளத் வேல்ஸ் என்று பெயரிட்டனர். உடனே அதே ‘நியூ’ வில் தொடங்கும் விதத்தில் ‘நியூ ஹாலந்து’ என்று அவசரமாகப் பெயரிட்டார்கள் டச்சுக்காரர்கள்.

முதன் முதலில் எழுத்துப் பூர்வமாக இந்தப் பெயரை ‘‘நியூ ஹாலந்து’’ என்று குறிப்பிட்டவர் ஆங்கிலேயேக் கேப்டனான வில்லியம் டாம்பியர்!

இதில் ஒரு விசேஷம் என்னவென்றால் தான் கால்பதித்த ஆஸ்திரேலியப் பகுதிக்குச் சொந்தம் கொண்டாடியது பிரிட்டன். ஆனால் நெதர்லாந்தைப் பொறுத்தவரை தான் கைப்பற்றிய பகுதிக்கு ‘நியூ ஹாலந்து’ என்று பெயர் வைத்ததே தவிர மற்றபடி டச்சுக்காரர்கள் அந்தப் பகுதிக்குச் சொந்தம் கொண்டாடவில்லை, நிரந்தரக் குடியேற்றமும் செய்ய வில்லை.

அந்தப் பகுதியில் மண் வளம் சிறப்பாக இல்லாததும், குடிநீர் தட்டுப்பாடு இருந்ததும் நிரந்தரக் குடியேற்றம் செய்வதை தடுத்திருக்க வாய்ப்பு உண்டு.

பிரிட்டன் சுறுசுறுப்பாக செயல்பட்டது. தனது ஆஸ்திரேலிய எல்லையை வரையறுத்துக் கொண்டது. ஆளுநராக பிலிப்ஸ் என்பவரை நியமித்தது.

ஆனால் நியூ ஹாலந்து என்ற பகுதி கொஞ்சம் தோராயமாகத் தான் இருந்தது. அதாவது பிரிட்டன் நியூ செளத் வேல்ஸ் பகுதியை வரையறுத்துக் கொள்ள மீதிப் பகுதி (அதாவது அந்த கண்டத்தின் மேற்குப் பகுதி) ‘நியூ ஹாலந்து’ என்று ஆனது.

மொத்த கண்டத்திற்கு ‘டெர்ரா ஆஸ்ட்ரேலிஸ்’ அல்லது ஆஸ்திரே லியா என்று பெயர் சூட்டப்பட்டது 1804-ல்தான். காலப்போக்கில் இந்தப் பெயர் நிரந்தரமானது.

ஜேம்ஸ் குக்கின் வரவுக்குப் பின்னால் ஆங்கிலேயர்களில் ஒரு பகுதியினர் அங்கு நிரந்தரக் குடியேற்றம் செய்வதற்கு அனுப்பப் பட்டனர். கூடவே 11 பிரம்மாண்ட கப்பல்களும் அனுப்பப்பட்டன. இவற்றில் உணவுப் பொருட்க ளோடு ஆயுதங்களும் இருந்தன. 250 ராணுவ வீரர்களும், அதிகாரிகளும் இருந்தது பெரிய விஷயமல்ல. 750 சிறைக் கைதிகளும் அனுப்பப்பட்டதுதான் வியப்பு. இத்தனைக்கும் அந்தமான் போல ஆஸ்திரேலியாவில் ஒன்றும் சிறைகள் கிடையாது. பிறகு ஏன்?

புதிய இடத்தில் நிலங்களைப் பண்படுத்த வேண்டியிருந்தன. எதிரிகளை (பழங்குடியினர்!) கையாள வேண்டியிருந்தது. இதற்கெல்லாம் கைதிகளின் உதவி தேவைப்பட்டது.

ஆனால் அவர்கள் இறங்கிய ஆஸ்திரேலியப் பகுதி சேறும், சகதியுமாக இருந்தது. சுத்தமான குடிநீர் குறைந்த அளவிலேயே கிடைத்தது. எனவே கேப்டன் பிலிப் வேறு பகுதியைத் தேர்ந்தெடுக்க நினைத்தார். கப்பல் நகர்ந்தது. அங்கு அற்புதமான ஒரு பகுதியைக் கண்டார் பிலிப். அந்தப் பகுதிக்கு பிரிட்டிஷ் உள்துறை அமைச்சரின் பெயரை வைத்தார். அவர் பெயர் சிட்னி பிரபு. அந்த இடம்தான் இன்றைய சிட்னி என்பதை சொல்லத் தேவையில்லை அல்லவா?

(உலகம் உருளும்)

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x