Last Updated : 10 Nov, 2015 01:18 PM

 

Published : 10 Nov 2015 01:18 PM
Last Updated : 10 Nov 2015 01:18 PM

அடாவடிப் பின்னணி கொண்ட ஆஸ்திரேலியா - 2

கடந்த 1769 அந்த ஆண்டில் அரிதான நிகழ்வு ஒன்று நடக்கவிருந்தது. புதன் கிரகம் சூரியனுக்கு முன்புறமாக அந்த வருடம் கடக்கவிருந்தது. உலகின் தென்பகுதியில்தான் இதைப் பார்க்க முடியும். இதை கவனிப்பதற்காக ஓர் ஆராய்ச்சிக் குழுவை அனுப்பத் தீர்மானித்தது பிரிட்டிஷ் அரசு.

ஆனால் இதில் ரகசியம் ஒன்றும் புதைந்திருந்தது. உலகின் மிகத் தெற்குப் பகுதிகளில் எங்கெல்லாம் பிரிட்டன் கால் பதிக்கலாம் என்பது குறித்து அறிவதுதான் இந்தக் குழுவின் முக்கிய வேலை.

இந்தக் குழுவின் தலைவராக நியமிக்கப் பட்டவர் ஜேம்ஸ் குக் என்பவர். இந்தக் கப்பலில் கூடவே ஒரு வானியல் நிபுணரும் தாவரவியல் நிபுணரும் அனுப்பப்பட்டனர்.

ஏப்ரல் 1769-ல் தஹிதி பகுதியிலிருந்து (தெற்கு பசிபிக் கடலில் அமைந்துள்ளது இது) வானியல் அற்புதத்தைக் கவனிக்க முடிந்ததாக வானியல் நிபுணர்கள் செய்தி அனுப்பினர். ஆனால் அந்தப் பயணம் அதோடு நிறைவு பெறவில்லை, தொடர்ந்தது. நியூசிலாந்தை அடைந்தது. அதைத் தாண்டி மேலும் பயணித்தது. ஆஸ்திரேலியாவின் கிழக்குக் கடற்கரையை அவர்கள் அடைந்தபோது பிரமித்தனர். காரணம் அந்தப் பகுதியை அதுவரை ஐரோப்பியர்கள் கண்டதில்லை.

அவர்கள் சென்ற கப்பலின் பெயர் என்டவர். 1770 ஏப்ரல் 19 அன்று கப்பலில் இருந்தவர்கள் அரைத் தூக்கத்தில் இருந்தபோது, தாவரவியல் நிபுணர் மட்டும் விழித்துக் கொண்டிருந்தார். திடீரென அவர் விழிகள் விரிந்தன. கேப்டன் ஜேம்ஸ் குக்கை விரைவில் தன்னருகே வருமாறு அழைத்தார். அவர் சுட்டிக் காட்டிய திசையில் அழகிய குன்றுகளும், பசுமையான பள்ளத்தாக்குகளும் காணப்பட்டன.

ஆக ஐரோப்பியர்களின் பார்வை முதலில் விழுந்தது ஆஸ்திரேலியாவின் கிழக்கு கடற்கரைதான். அடுத்த இரண்டே வாரங்களில் அவர்கள் ஒரு குறுகிய கடற்கரைப் பகுதிக்குச் சற்று தள்ளி கப்பலை நிறுத்தினர். இறங்கி கடற்கரையை அடைந்தனர்.

அங்கே இரண்டு உள்ளூர்வாசிகள் தயார் நிலையில் இருந்தார்கள். அவர்கள் கைகளில் ஈட்டிகள். தன் கையில் இருந்த துப்பாக்கியின் மூலம் அங்குமிங்குமாகச் சுட்டார் கேப்டன் குக். அபாரிஜின்கள் (உள்ளூர்வாசிகளான மண்ணின் மைந்தர்கள்) சிதறி ஓடினர். வெளியாட்களைப் பற்றிய செய்தியை பரவ விட்டனர். மறைவுகளிலிருந்து அவர்கள் பிரிட்டிஷ்காரர்களை நோட்டமிட, அவர்களோ அந்தப் பகுதியை கண்களால் அளவிட்டுக் கொண்டிருந்தார்கள். உடனடியாக அந்த இடத்துக்கு ‘பாடனி பே’ (தாவர விரிகுடா) என்று பெயரிட்டனர்.

இப்படிப் பெயர் சூட்டும் வைபவத்தை அங்கே நிறையவே நிகழ்த்தினார் ஜேம்ஸ் குக். வேறொரு பகுதிக்கு ஹெர்வி விரிகுடா என்று பெயரிட்டனர். (ஹெர்வி என்பது ஒரு பிரிட்டிஷ் ராணுவ அதிகாரி). ஒரு நதிக்கு என்டவர் நதி என்று பெயரிட்டார்கள் (அது அந்தக் கப்பலின் பெயர் என்றுதான் உங்களுக்குத் தெரியுமே). இன்னொரு பகுதிக்கு பாயின்ட் சொலான்டெர் என்று பெயர் சூட்டினார்). (சொலான்டெர் என்பது அந்தப் பயணத்தில் இடம் பெற்ற ஒரு விஞ்ஞானியின் பெயர்).

ஒரு சின்னக் குன்றின் மீது ஏறிய ஜேம்ஸ் குக் அங்கு யூனியன் ஜாக் கொடியைப் பறக்கவிட்டார். கூட இருந்தவர்கள் வாழ்த்துகளைக் கூறினார்கள். துப்பாக்கிக் குண்டுகள் முழக்கமிட்டன. ஆஸ்திரேலிய கண்டத்தின் கிழக்குப் பாதி இனி மன்னர் மூன்றாம் ஜார்ஜின் ஆளுகைக்கு வரும் என்று பிரகடனப்படுத்தினார் ஜேம்ஸ் குக்.

அங்குள்ள பழங்குடி மக்களை மிகவும் வியப்போடு கவனித்தார் ஜேம்ஸ் குக். அதை வார்த்தைகளிலும் வடித்தார்.

‘’இவர்கள் ஐரோப்பியர்களைவிட மிக மகிழ்ச்சியோடு இருக்கிறார்கள். வாழ்க்கைக்குத் தேவையான எல்லாவற் றையும் பெற்றிருக்கிறார்கள்’’.

தான் கால் வைத்த பகுதி பிரிட்டனுக் கானது என்று ஜேம்ஸ் குக் ஏன் அறிவிக்க வேண்டும்? அபாரிஜின்களுக்கு எதிரான போர்ப் பிரகடனமா அது? அல்ல. பிரான்ஸும் போர்ச்சுக்கல்லும் ஓர் உலகின் புதிய பகுதிகளை வலைவீசித் தேடிக் கொண்டிருந்தன. இந்தப் போட்டியில் பிரிட்டனுக்கு ஒரு முன்னுரிமை கிடைக்கும் விதத்தில்தான் கேப்டன் குக் அப்படிச் செயல்பட்டார். ஆனால் நேரடி பாதிப்பு என்னவோ அபாரிஜின்களுக்குதான் உண்டானது.

(உலகம் உருளும்)

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x