Last Updated : 16 Nov, 2016 10:28 AM

 

Published : 16 Nov 2016 10:28 AM
Last Updated : 16 Nov 2016 10:28 AM

யாழ்ப்பாண வன்முறை சம்பவத்தில் ராணுவத்துக்கு தொடர்பா?- இலங்கை அரசு விசாரணை

யாழ்ப்பாணத்தில் தமிழர்கள் அதிகம் வசிக்கும் பகுதியில் நிகழ்ந்த வன்முறை சம்பவத்தில் ராணுவத்துக்கு தொடர்பு உள்ளதா? என்பது குறித்து இலங்கை அரசு விசாரணை நடத்தி வருகிறது.

இது குறித்து இலங்கையின் ராணுவ துணை அமைச்சர் ரூவன் விஜெவர்தனா நாடாளுமன்றத்தில் கூறும்போது, ‘‘யாழ்ப்பாணத்தில் அண்மையில் நிகழ்ந்த வன்முறை சம்பவம் தொடர்பாக ஒரு ராணுவ வீரர் உட்பட பலரை போலீஸார் கைது செய்துள்ளனர். வன்முறை கும்பலுடன் வேறு சில உயரதிகாரிகளுக்கும் தொடர்பு இருக்கிறதா என்ற கோணத்திலும் விசாரணை முடுக்கிவிடப்பட்டுள்ளது’’ என்றார்.

சட்டம் ஒழுங்கு துறை அமைச்சர் சகாலா ரத்னாயகா கூறும்போது, ‘‘வன்முறை தொடர்பாக ஒரு ராணுவ வீரர் உட்பட இதுவரை 38 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் 8 பேரை போலீஸார் தேடி வருகின்றனர்’’ என்றார். எனினும் அவர்களது பெயர்களை அவர் வெளியிடவில்லை.

தமிழ் குழுவுக்கு ஆதரவு

யாழ்ப்பாணத்தில் தீவிரவாதச் செயல்களில் ஈடுபட்டு வந்த தமிழ் குழு ஒன்றுக்கு ராணுவம் ஆதரவு அளித்து வந்ததாக அரசு குற்றம்சாட்டியிருந்தது. இதைத் தொடர்ந்து இரு வாரங்களுக்கு முன் தனது உளவுப் பிரிவு தலைவரை ராணுவம் மாற்றியது.

இலங்கை அமைச்சரவை செய்திதொடர்பாளர் ரஜிதா சேனரத்னே கூறும்போது, ‘‘இலங் கையில் உச்சகட்டப் போர் நடந்து கொண்டிருந்தபோது, விடுதலைப் புலிகளை ஒடுக்குவற்காக முந்தைய அரசு ஆவா என்ற குழுவை உருவாக்கியது’’ என்றார். இந்த குழு தான் அண்மையில் நடந்த யாழ்ப்பாண வன்முறையில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

இந்த குழுவுக்கு ராணுவம் நேரடியாக ஆதரவு அளித்து வரவில்லை என்றபோதிலும், சில தீய செயல்கள் நடந்திருப்பதற்கான வாய்ப்புகளையும் மறுக்க முடியாது என இலங்கை அரசு தெரிவித்துள்ளது.

யாழ்ப்பாணத்தில் மக்கள் இயல்பு வாழ்க்கை நடத்தும் வகையில் அங்கு குவிக்கப்பட்ட ராணுவம் படிப்படியாக வாபஸ் பெறப்படும் என மைத்ரிபால சிறிசேன அரசு அறிவித்தது. எனினும் ராஜபக்சே நியமித்த அதிகாரிகளே தொடர்ந்து உயர்பதவிகளில் நீடித்து வருவதால் தமிழர்களுக்கு எதிரான அராஜகம் தொடர்கதையாகி வருவதாக குற்றம்சாட்டப்படுகிறது. மேலும் போர் நடந்த பகுதியில் இருந்து ராணுவம் இதுவரை வெளியேறாமல் தமிழர்களைத் தீவிரமாக கண்காணித்து வருவதாகவும் புகார் எழுந்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x