Published : 22 Mar 2017 02:57 PM
Last Updated : 22 Mar 2017 02:57 PM

ஹைட்ரோ கார்பன் திட்டம் ஒருபோதும் தமிழகத்தில் அனுமதிக்கப்பட மாட்டாது: அமைச்சர் எம்.சி.சம்பத் திட்டவட்டம்

ஹைட்ரோ கார்பன் திட்டம் ஒருபோதும் தமிழகத்தில் அனுமதிக்கப்பட மாட்டாது என்று தொழில்துறை அமைச்சர் எம்.சி.சம்பத் பேரவையில் திட்டவட்டமாகக் கூறினார்.

சட்டப்பேரவையில் இன்று பட்ஜெட் மீதான 3-ம் நாள் விவாதம் நடைபெற்றது. புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசல் போராட்டம் குறித்து சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானத்தின் மீது தொழில்துறை அமைச்சர் எம்.சி.சம்பத் பேசினார்.

அமைச்சர் எம்.சி.சம்பத் பேரவையில் பேசியதாவது:

''தஞ்சாவூர், திருச்சிராப்பள்ளி மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களை உள்ளடக்கிய 7049.70 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு நிறுவனத்திற்கு அகழ்வு ஆராய்ச்சிப் பணிகள் மேற்கொள்ள அரசு ஆணை எண்.592 தொழில்துறை, நாள் 28.8.1989-ல் உரிமம் வழங்கப்பட்டுள்ளது.

மேற்படி, அகழ்வு ஆராய்ச்சியின் அடிப்படையில் எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு நிறுவனம் புதுக்கோட்டை மாவட்டம்,நெடுவாசல் கிராமத்திலும், அதனைச்சுற்றியுள்ள பகுதிகளிலும் இயற்கை எரிவாயு மற்றும் கச்சா எண்ணெய் இருப்பு உள்ளதை கண்டறிந்து, நெடுவாசல் கிராமத்தில் ஆழ்துளை கிணறு அமைத்துள்ளனர்.

தற்போது நெடுவாசல் கிராமத்தில் உள்ள இயற்கை எரிவாயு மற்றும் கச்சா எண்ணெய் அகழ்ந்தெடுக்க மத்திய அரசு தனியார் நிறுவனமான ஜெம் லேபாரட்டரீஸ்க்கு ஏல முறையில் ஒதுக்கீடு செய்து 15.2.2017 அன்று ஒப்புதல் வழங்கியது.

நெடுவாசல் கிராமத்தில் இயற்கை எரிவாயு மற்றும் கச்சா எண்ணெய் அகழ்ந்தெடுக்க நெடுவாசல் கிராமத்திற்குட்பட்ட 10.1 சதுர கிலோ மீட்டர் பரப்பளவிற்கு 20 ஆண்டுகளுக்கு சுரங்கக் குத்தகை உரிமம் வழங்கக் கோரி எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு நிறுவனம் 30.12.2016 தேதியிட்ட விண்ணப்பத்தினை புதுக்கோட்டை மாவட்ட ஆட்சித்தலைவரிடம் சமர்ப்பித்துள்ளது. அந்த மனு நிலுவையில் இருந்து வருகிறது.

நெடுவாசல் மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமப் பொதுமக்கள் மேற்படி மத்திய அரசின் அறிவிப்பினை ஏற்க மறுத்து 16.2.2017 முதல் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.

தமிழக முதல்வர் அறிவுறுத்தியதன் அடிப்படையில், 25.2.2017 அன்று மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் ஆகியோர் கிராம பொதுமக்களை சந்தித்து அவர்களுடைய கருத்துக்களை கேட்டறிந்து தமிழக முதல்வரைச் சந்திக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், விவசாய பெருமக்களுக்கு தெரிவித்தார்கள்.

அதனடிப்படையில், போராட்டக்குழு பிரதிநிதிகள் 1.3.2017 அன்று தமிழக முதல்வரை தலைமைச் செயலகத்தில் சந்தித்து மேற்படி திட்டத்தினால் அவர்களது கிராமம் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் விவசாய நிலங்கள் பாதிக்கப்பட்டு அவர்களது வாழ்வாதாரம் கேள்விக்குறியாகும் எனவும், மேற்படி கிராமமானது காவிரி கடைமடை பகுதியில் அமைந்துள்ளதாலும், போதிய நீர் வரத்து இல்லாததாலும் அதனால் நிலத்தடி நீர் மட்டம் பெருமளவில் குறைந்துள்ளது என்றும் தெரிவித்து, இத்திட்டத்திற்கு அனுமதி வழங்கக் கூடாது என வலியுறுத்தினர்.

போராட்டக் குழு பிரதிநிதிகளிடம் தமிழக முதல்வர், ஏற்கெனவே கடந்த 27.2.2017 அன்று பாரதப் பிரதமரை நேரில் சந்தித்து நெடுவாசல் போராட்டம் குறித்தும், அத்திட்டத்தினால் மக்கள் அடைந்துள்ள அச்சம் குறித்தும் விரிவாக எடுத்துரைத்ததையும், அப்பகுதி மக்களின் விவசாயத்திற்கோ, அவர்களது வாழ்வாதாரத்திற்கோ பாதிப்பு ஏற்படும் எந்த ஒரு திட்டத்திற்கும் ஜெயலலிதா வழியில் வந்த இந்த அரசு எவ்வித அனுமதியும் வழங்காது என்று உறுதி அளித்தார்.

ஜெயலலிதா வழியில் செயல்படும் தமிழக அரசு, விவசாயிகளுக்கு என்றென்றும் உறுதுணையாக இருக்கும் என்றும், நெடுவாசல் கிராமத்தில் பெட்ரோலியப் பொருட்களை வணிக ரீதியாக உற்பத்தி செய்வதற்கு பெட்ரோலியம் சுரங்க குத்தகை உரிமத்தை மாநில அரசு வழங்கவில்லை எனவும், விவசாயிகள் இத்திட்டத்தால் தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என தெரிவித்துள்ளதால் நெடுவாசல் கிராமத்தில் இத்திட்டத்திற்கு மாநில அரசு அனுமதி வழங்காது என்றும், எனவே நெடுவாசல் மக்களும், விவசாயிகளும் எவ்வித அச்சமும் கொள்ள தேவையில்லை எனவும் தமிழக முதல்வர் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் விவசாயிகள் பாதிப்படையக் கூடிய எந்தத் திட்டமானாலும், அதனை ஜெயலலிதா வழியில் செயல்படும் தமிழக அரசு செயல்படுத்தாது எனவும், மாநில அரசின் இந்த உறுதியை ஏற்று, நெடுவாசலில் நடைபெற்று வரும் போராட்டத்தை கைவிட வேண்டுமென்றும், நெடுவாசல் கிராமப் பிரதிநிதிகளை முதல்வர் கேட்டுக் கொண்டதன் அடிப்படையில், இதனை ஏற்றுக்கொண்ட போராட்டக்குழு பிரதிநிதிகள், தங்களது நெஞ்சார்ந்த நன்றியினை தமிழக முதல்வருக்கு தெரிவித்துக் கொண்டனர்.

அதனைத் தொடர்ந்து 9.3.2017 அன்று நெடுவாசல் கிராம மக்கள் தங்களது போராட்டத்தினை கைவிட்டனர்'' என்று அமைச்சர் எம்.சி.சம்பத் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x