Last Updated : 13 Jun, 2017 11:21 AM

 

Published : 13 Jun 2017 11:21 AM
Last Updated : 13 Jun 2017 11:21 AM

ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்காக தேர்வு செய்யப்பட்ட நிலங்கள் விடுவிக்கப்படுமா?- விவசாயிகள் எதிர்பார்ப்பு

புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்காக தேர்வு செய்யப் பட்ட நிலங்களை விடுவிக்க வேண்டுமென விவசாயிகள் எதிர்பார்த்துள்ளனர்.

புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசலில் நெல், வாழை போன்ற பயிர்கள் சாகுபடி மேற்கொள்ளப் பட்டுவரும் நிலங்களை, ஓஎன்ஜிசி அலுவலர்கள் கடந்த 3 ஆண்டு களுக்கு முன்பு ஆய்வு மேற்கொண் டனர். அப்போது, எரிபொருள் ஆய்வு பணிகள் முடிக்கும் வரை நிலங்களை குத்தகைக்கு தருமாறு விவசாயிகளிடம் ஓஎன்ஜிசி அலு வலர்கள் கேட்டுள்ளனர்.

அதன்படி, நெடுவாசலைச் சேர்ந்த வி.அருணாசலம், கே.பாமா, ஆர்.சுகுமாறன், வி.செந்தில்குமாரி, ஆர்.சந்திரபோஸ், எ.ஆர்.கருப்பையன் ஆகியோரிடம் இருந்து சுமார் 6 ஏக்கர் நிலம் தேர்வு செய்யப்பட்டது. இந்நிலையில் கடந்த பிப்.15-ம் தேதி தமிழகத்தில் நெடுவாசல் உட்பட நாட்டில் 31 இடங்களில் ஹைட்ரோகார்பன் திட்டம் செயல்படுத்தப்படும் என மத்திய அரசு அறிவித்தது. இத்திட்டம் செயல்படுத்தப்பட்டால் தங்கள் பகுதியில் நிலத்தடி நீர் பாதிக்கும், சுற்றுச்சூழல் மாசுபடும் எனக்கூறி இந்த திட்டத்துக்கு மக்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதற்கிடையே, இத்திட்டத்தை செயல்படுத்துவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்திலும் மத்திய அரசு கையெழுத்திட்டது.

இந்நிலையில், ஓஎன்ஜிசி நிறுவனத்துக்கு எழுதிக் கொடுத்த நிலங்களை திருப்பி ஒப்படைக்க வேண்டுமென மாவட்ட ஆட்சிய ரிடம் மார்ச் 28-ம் தேதி விவசாயிகள் கோரிக்கை மனு அளித்தனர். எனினும் இதுவரை கோரிக்கை நிறைவேறவில்லை.

இதற்கிடையில் ஓஎன்ஜிசி நிறுவனத்திடம் உள்ள இந்த நிலங்கள் ஜெம் நிறுவனத்துக்கு மாற்றப்பட உள்ளதாக வெளியான தகவல் விவசாயிகளை அதிர்ச்சிக் குள்ளாக்கி உள்ளது. எனவே, இந்த நிலங்களை தங்களிடமே திரும்ப ஒப்படைக்க வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை விடுத்துள் ளனர்.

இது குறித்து நெடுவாசலைச் சேர்ந்த ஆர்.சுகுமாறன் கூறியது:

‘பக்கத்து கிராமங்களில் மேற்கொண்டதைப்போல, இப்பகுதியிலும் மண்ணெண்ணெய் இருக்கிறதா என சோதனை நடத்த உள்ளோம். இப்பணிகளுக்காக தேவையான நிலங்களை குத்தகைக்கு கொடுங்கள். பணி முடிந்ததும் நிலங்களை உங்களி டமே திருப்பி ஒப்படைக்கிறோம். அதுவரை குத்தகை தொகையை கொடுத்துவிடுகிறோம்’ என்று ஓஎன்ஜிசி அலுவலர்கள் கேட்டனர்.

அதன்படி, 6 பேரிடம் இருந்து சுமார் 6 ஏக்கர் நிலத்தை ஆங்கிலத் தில் எழுதப்பட்டிருந்த மூன்று தாள்களில் மூன்று இடங்களில் கையெழுத்து பெற்றுச் சென்றனர். ஆனாலும் நிலங்கள் எங்கள் வசம்தான் உள்ளன.

இந்நிலையில், தற்போது இந்த இடத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்த உள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இது தீங்கு விளைவிக்கக்கூடியது என்று பலராலும் கூறப்படுவதால் இந்த திட்டத்தை எதிர்க்கிறோம்.

எனவே, நாங்கள் விவரம் தெரியாமல் எழுதிக் கொடுத்துள்ள எங்கள் நிலத்தை ஓஎன்ஜிசி நிறுவனத்திடம் இருந்து விடுவித்து தருமாறு ஆட்சியரிடம் மனு அளித்தோம். அதற்கு இதுவரை எந்த பதிலும் கிடைக்கவில்லை. ஓஎன்ஜிசி நிறுவனத்திடம் உள்ள இந்த குத்தகை நிலங்கள் ஜெம் நிறுவனத்துக்கு மாற்றப்பட உள்ளதாக தகவல் வெளிவந்திருப்பது அதிர்ச்சி அளிக்கிறது.

எனவே, உடனே எங்களது விளைநிலத்தை விடுவித்துதர வேண்டும் என்றார்.

இது குறித்து வருவாய்த் துறை அலுவலர்கள் கூறிய போது, “இவர்களது கோரிக்கை குறித்து தமிழக அரசுக்கு தெரிவிக்கப் பட்டுள்ளது. சம்பந்தப்பட்டோர் எழுதிக் கொடுத்துள்ள நிலங்களின் ஆவணங்களில் எந்த திருத்தமும் மேற்கொள்ளவில்லை. விரைவில் தமிழக அரசு உரிய பதிலை அளிக்கும்” என்றனர்.

- சுகுமாறன்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x