Published : 24 May 2016 03:59 PM
Last Updated : 24 May 2016 03:59 PM

ஸ்டாலினை முதல் வரிசையிலேயே அமர வைத்திருப்பேன்: முதல்வர் ஜெயலலிதா விளக்கம்

ஸ்டாலினையோ, திமுகவையோ அவமதிக்கும் உள்நோக்கம் இல்லை என தமிழக முதல்வர் ஜெயலலிதா விளக்கமளித்துள்ளார்.

இது தொடர்பாக இன்று (செவ்வாய்க்கிழமை) அவர் வெளியிட்ட அறிக்கையில், '' 23-ம் தேதி நடந்த அமைச்சர்கள் பதவியேற்பு விழாவில் மு.க. ஸ்டாலின் பங்கேற்றார் என்பதை அறிந்து மகிழ்ந்தேன். விழாவில் பங்கேற்றதற்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

எம்எல்ஏக்களுக்காக ஒதுக்கப்பட்ட பகுதியில் மு.க. ஸ்டாலின் அமரவைக்கப்பட்டதை நான் அறிந்தேன். பதவியேற்பு விழாவில் மரபு அடிப்படையில் இருக்கைகள் ஒதுக்கப்பட வேண்டும் என்பதை பொதுத்துறை அதிகாரிகளுக்கு அறிவுறுத்தி இருந்தேன்.

எனவே, இருக்கை ஒதுக்கீட்டை பொறுத்தவரை, ஸ்டாலினையோ, திமுகவையோ அவமதிக்கும் நோக்கம் எங்களுக்கு இல்லை என்பதை உறுதியாக கூறுகிறேன்.

இந்த நிகழ்ச்சியில் மு.க. ஸ்டாலின் பங்கேற்கிறார் என்பதை அதிகாரிகள் என் கவனத்துக்கு கொண்டு வந்திருந்தால், மரபுப்படியான விதிகளை தளர்த்தி அவருக்கு முன்வரிசையில் இடம் ஒதுக்கும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டிருப்பேன்.

அவருக்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதுடன், மாநிலத்தின் நன்மைக்காக அவரது கட்சியுடன் இணைந்து பணியாற்ற காத்திருக்கிறேன்.'' என்று முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார்.

முன்னதாக, தமிழக முதல்வராக ஜெயலலிதா திங்கட்கிழமை பதவியேற்றுக் கொண்டார். முதல்வர் பதவியேற்பு நிகழ்ச்சியில் திமுக பொருளாளரும், கொளத்தூர் தொகுதி எம்.எல்.ஏ.வுமான மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டார். ஆனால், அவர் பின்வரிசையில் உள்ள இருக்கையில் அமர்ந்திருந்தார்.

இது குறித்து பல்வேறு சர்ச்சைகள் எழுந்தன. திமுக தலைவர் கருணாநிதி, ''முதல்வர் பதவியேற்பு விழாவில், தேர்தலில் தோற்றுப் போன சரத்குமாருக்கு முதல் வரிசையில் இடம் போட்டு - அமர வைத்து, பிரதான எதிர்க் கட்சி வரிசையிலே அமரும் தகுதியைப் பெற்ற ஸ்டாலினுக்கு கூட்டத்தோடு கூட்டமாக இடம் போடப்பட்டது.

வேண்டுமென்றே திமுகவை திட்டமிட்டு அவமானப்படுத்திய ஜெயலலிதாவைப் பார்க்கும்போது இன்னும் அவர் திருந்தவில்லை, திருந்தப் போவதுமில்லை என்று தான் தெளிவாகப் புரிகிறது'' என்று தன் கருத்தை தெரிவித்தார்.

ஆனால், ஸ்டாலின் 'இருக்கை' சர்ச்சை குறித்து எந்த கருத்தையும் தெரிவிக்கவில்லை. மாறாக, ''தமிழக முதல்வரின் பதவியேற்பு விழாவில் பங்கேற்றேன். ஜெயலலிதாவுக்கு மீண்டும் ஒரு முறை என் வாழ்த்துக்கள். அவர் அளித்த தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவார் என்றும் தமிழக மக்களுக்காக கடினமாக உழைப்பார் என்றும் நம்புகிறேன். வாழ்த்துக்கள்'' என்று முகநூலில் பதிவை வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x