Published : 24 Nov 2014 10:01 AM
Last Updated : 24 Nov 2014 10:01 AM

வேப்பேரி கொலையில் திருப்பம்: மனைவியை கணவனே கொலை செய்தது அம்பலம் - சொல்பேச்சை கேட்காததால் கொன்றதாக வாக்குமூலம்

வேப்பேரியில் மனைவியை கணவனே கொலை செய்துவிட்டு நாடகமாடியதை போலீஸார் கண்டுபிடித்து, அவரை கைது செய்துள்ளனர்.

சென்னை வேப்பேரி காளத்தி யப்பன் தெருவில் ஹேமந்த்ராஜ் ஜெயின் (50) என்பவரின் மனைவி மஞ்சு (48) கடந்த 21-ம் தேதி வீட்டில் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் இறந்து கிடந்தார். வீட்டுக்கு வந்த கொள்ளையர்கள் மஞ்சுவை கொலை செய்துவிட்டு, 1 கிலோ நகைகளையும் கொள்ளையடித்து சென்றுவிட்டதாக போலீஸிடம் ஹேமந்த்ராஜ் கூறினார்.

இந்த கொலை வழக்கு குறித்து கீழ்ப்பாக்கம் போலீஸார் விசாரணை நடத்தினர். அப்போது ஹேமந்த்ராஜ் வீட்டின் எதிரே உள்ள பள்ளியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை போட்டுப் பார்த்து போலீஸார் விசாரணை நடத்தினர். அப்போது மஞ்சு கொலை செய்யப்பட்ட நேரத்தில் ஒருவர் அவர்களின் வீட்டுக்குள் செல்வதும் 45 நிமிடங்களுக்கு பின்னர் அவர் வெளியே வருவதும் கேமராவில் பதிவாகி இருந்தது. மஞ்சு தனியாக இருக்கும் நேரம் கொலையாளிக்கு நன்றாக தெரிந் திருந்ததால், அவர் மஞ்சுவின் உறவினராக இருக்கலாம் என்ற சந்தேகத்தில், அந்த வீடியோவை ஹேமந்த்ராஜின் உறவினர்களிடம் போட்டு காண்பித்தனர். அதைப் பார்த்தவர்கள் அது மஞ்சுவின் கணவர் ஹேமந்த்ராஜ் போல இருக்கிறது என்று கூற, அவரிடம் போலீஸார் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்த, அவர் மனைவியை கொலை செய்ததை ஒப்புக்கொண்டார்.

அவரே மனைவியை கொலை செய்துவிட்டு நாடகமாடியதும், வீட்டில் இருந்த 15 சவரன் நகையை ஹேமந்த்ராஜே எடுத்து படுக்கை அறையில் மனைவியின் புடவைக்குள் மறைத்து வைத்துவிட்டு, 1 கிலோ நகைகள் கொள்ளைபோனதாக கூறியதும் தெரிந்தது.

மனைவியை கொன்றது குறித்து ஹேமந்த்ராஜ் போலீஸில் அளித்துள்ள வாக்குமூலத்தில், “மஞ்சு எனது பேச்சை எப்போதுமே கேட்பதில்லை. அனைத்து விஷயங்களிலுமே எனது எண்ணங்களுக்கு எதிராகவே செயல்படுவார். இது பல நேரங்களில் எனக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தும். எனது மகனுக்கு ஒரு இடத்தில் பெண் பார்த்து திருமணமும் நிச்சயிக்கப்பட்டுவிட்டது. பெண் வீட்டாருடன் சேர்ந்து கொல்கத்தாவுக்கு சென்று திருமணத்துக்கு தேவையான ஆடைகள் மற்றும் பொருட்கள் வாங்க முடிவு செய்திருந்தேன். ஆனால் எனது மனைவி கொல்கத்தாவுக்கு செல்லக் கூடாது என்பதில் மிகவும் பிடிவாதமாக இருந்தார். இது தொடர்பாக கடந்த சில நாட்களாகவே எங்களுக்குள் வாக்குவாதமும் ஏற்பட்டது. கடந்த 21-ம் தேதி காலையிலும் கொல்கத்தாவுக்கு போகக் கூடாது என்று என்னிடம் தகராறு செய்தார். இதனால் மிகுந்த மன உளைச்சலுடன் காலையில் கடைக்கு சென்றேன்.

பின்னர் மாலையில் கொல்கத்தா செல்வது சம்பந்தமாக அவரிடம் பேசுவதற்காக கடையில் இருந்து வீட்டுக்கு சென்றேன். அப்போது எனக்கும் மனைவிக்கும் கடுமையான மோதல் ஏற்பட்டது. இதனால் ஆத்திரம் அடைந்த நான் வீட்டில் இருந்த கத்தியை எடுத்து மஞ்சுவின் கழுத்தை அறுத்து கொலை செய்தேன். பின்னர் எதுவும் தெரியாதது போல கதவை பூட்டிவிட்டு கடைக்கு சென்றுவிட்டேன். எனது மகன் ஆசிஷ் எனக்கு போன் செய்து, ‘அம்மாவை யாரோ கொலை செய்துவிட்டார்கள்’ என்று கூறினான். நான் எதுவும் தெரியாததுபோல அலறியடித்துக் கொண்டு வீட்டுக்கு ஓடினேன். அங்கு மஞ்சுவின் உடலை பார்த்து கதறி அழுதேன். போலீஸாருக்கு என் மீது சந்தேகம் ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காக காலையில் பூச்சி மருந்து அடிப்பதற்கு 2 பேர் வந்ததாகவும் அவர்கள்தான் இந்த கொலையை செய்திருக்க வேண்டும் என்றும் கூறினேன். ஆனால் போலீஸார் என்னை கண்டுபிடித்துவிட்டனர்” என்று கூறியிருக்கிறார்.

மனைவியே போனபிறகு வழக்கு எதற்கு?

கொலை குறித்து போலீஸார் முதலில் விசாரித்தபோது, 'எனது மனைவியே இறந்துவிட்டாள் இனிமேல் வழக்கு எதற்கு? எதுவும் வேண்டாம். விசாரணையும் வேண்டாம்? என்று மீண்டும் மீண்டும் போலீஸிடம் கூறியிருக்கிறார் ஹேமந்த்ராஜ். ஹேமந்த்ராஜ் கொலைக்கு பயன்படுத்திய கத்தியை தனது கடை அருகே ஒரு குப்பை தொட்டியில் போட்டுவிட்டார். அந்த கத்தியை போலீஸார் தேடி வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x