Published : 26 Apr 2017 07:08 AM
Last Updated : 26 Apr 2017 07:08 AM

விவசாயிகளுக்காக முழு அடைப்புப் போராட்டம் - சாலை மறியல்: தமிழகம் முழுவதும் ஸ்டாலின் உட்பட 61 ஆயிரம் பேர் கைது

கடைகள் அடைப்பால் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

விவசாயிகள் பிரச்சினைகளுக்கு தீர்வு காண வலியுறுத்தி தமிழகம் முழுவதும் நேற்று நடைபெற்ற முழு அடைப்புப் போராட்டத்துக்கு ஆதரவாக சாலை மறியலில் ஈடுபட்ட திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் உட்பட 61 ஆயிரம் பேர் கைது செய்யப்பட்டனர்.

விவசாயக் கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும், காவிரி மேலாண்மை வாரியம், காவிரிநீர் பங்கீட்டு குழு அமைக்க வேண்டும், தமிழகத்தை பேரிடர் பாதித்த மாநிலமாக அறிவிக்க வேண்டும், மீத்தேன் - ஹைட்ரோகார்பன் திட்டத்தை கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் நேற்று முழு அடைப்புப் போராட்டம் நடை பெற்றது.

திமுக, காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், விடுதலைச் சிறுத்தைகள், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மனிதநேய மக்கள் கட்சி உள்ளிட்ட கட்சிகள் இந்த முழு அடைப்புப் போராட்டத் துக்கு அழைப்பு விடுத்திருந்தன. ஏ.எம்.விக்கிரமராஜா தலைமை யிலான தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு, த.வெள் ளையன் தலைமையிலான தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை ஆகியவை முழு அடைப் புக்கு ஆதரவு தெரிவித்திருந்தன. இதனால் தமிழகம் முழுவதும் ஹோட்டல்கள், மளிகை, காய்கறிக் கடைகள் உட்பட 95 சதவீத கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. அத்தியாவசிய தேவையான மருந்துக் கடைகளும் ஒரு சில இடங்களில் பெட்டிக் கடைகளும் மட்டுமே திறந்திருந்தன.

சிஐடியூ, ஏஐடியூசி, தொமுச பேரவை உள்ளிட்ட தொழிற்சங்கங்கள் முழு அடைப்பில் பங்கேற்றதால் 80 சதவீத ஆட்டோக்கள் ஓடவில்லை. தொழிலாளர்கள் பணிக்கு செல்லாததால் பெரும்பாலான தொழிற்சாலைகள், வர்த்தக நிறுவனங்கள் இயங்கவில்லை. அரசு ஊழியர் சங்கங்களும் முழு அடைப்பில் பங்கேற்றன. சுமார் 2 லட்சத்து 50 ஆயிரம் அரசு ஊழியர்கள் பணிக்கு செல்லாததால் அரசு அலுவலகங்கள் வெறிச்சோடி காணப்பட்டன.

சென்னை உட்பட தமிழகம் முழுவதும் வழக்கத்தைவிட குறைவான எண்ணிக்கையிலேயே அரசுப் பேருந்துகள் இயங்கின. அவற்றில் பயணிகளின் கூட்டமும் குறைவாகவே இருந்தது. பால் விநியோகம் வழக்கம்போல இருந்தது.

விவசாயிகளுக்கான முழு அடைப்புப் போராட்டத்துக்கு திரை யுலகினரும் ஆதரவு தெரிவித்தி ருந்தனர். இதனால், தியேட்டர்களில் நேற்று பகல் காட்சிகள் ரத்து செய்யப்பட்டன. சினிமா படப்பிடிப்புகளும் நடக்கவில்லை.

திருவாரூரில் ஸ்டாலின் கைது

முழு அடைப்புப் போராட்டத் துக்கு ஆதரவாக தமிழகம் முழுவதும் திமுக உள்ளிட்ட கட்சியினர் மறியல், ஆர்ப்பாட்டம் போன்றவற்றை நடத்தினர். திருவாரூர் பேருந்து நிலையம் அருகே ஆயிரக்கணக்கான தொண்டர்களுடன் சாலை மறியலில் ஈடுபட்ட திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், முன்னாள் மத்திய அமைச்சர் டி.ஆர்.பாலு, இந்திய கம்யூனிஸ்ட் முன்னாள் எம்எல்ஏ ஜி.பழனிச்சாமி உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர். திருவாரூர் மாவட்டத்தில் 4,189, நாகையில் 2,967, தஞ்சையில் 2,830 என டெல்டா மாவட்டத்தில் மொத்தம் 9,897 பேர் கைது செய்யப்பட்டனர்.

சென்னை எழும்பூர் ரயில் நிலையம் அருகே சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட தமிழக காங்கிரஸ் தலைவர் சு.திருநாவுக்கரசர், திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, காங்கிரஸ் மூத்த தலைவர் குமரிஅனந்தன் உள்ளிட்டோர் கைதாகினர். டெல்லியில் கடந்த 40 நாட்களாக போராட்டம் நடத்திய தென்னிந்திய நதிகள் இணைப்பு சங்கத்தின் தலைவர் அய்யாக்கண்ணு உள்ளிட்ட விவசாயிகளும் இந்த மறியலில் பங்கேற்று கைதாகினர்.

சைதாப்பேட்டை பனகல் மாளிகை அருகே பேரணியாக வந்து சாலை மறியலில் ஈடுபட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டு அருகில் உள்ள மண்டபங்களில் தங்க வைக்கப்பட்டனர். சென்னை மாநகர், புறநகர் பகுதிகளில் மாநிலங்களவை உறுப்பினர் ஆர்.எஸ்.பாரதி, 13 எம்எல்ஏக்கள் உட்பட 8,300 பேர் கைது செய்யப்பட்டதாக போலீஸார் தெரிவித்தனர்.

வேலூரில் திமுக முதன்மைச் செயலாளர் துரைமுருகன் தலை மையிலும் திருவண்ணாமலையில் முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு தலைமையிலும் மறியலில் ஈடுபட்ட சுமார் 2,900 பேர் கைது செய்யப் பட்டனர். ராணிப்பேட்டை, ஆலங் காயம் பகுதிகளில் தனியார் பேருந் துகளின் கண்ணாடியை உடைத்த தாக திமுக நிர்வாகிகள் 2 பேரை போலீஸார் பிடித்தனர்.

சேலம், நாமக்கல், ஈரோடு, தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் முழு அடைப்புப் போராட்டத்தால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது. இந்த 5 மாவட்டங்களிலும் 5,792 பேர் கைதாகினர்.

கடலூர் மாவட்டத்தில் அரசுப் பேருந்துகள் மட்டுமே இயங்கின. கடலூர், விழுப்புரம் மாவட்டங்களில் மறியலில் ஈடுபட்ட 4,565 பேர் கைது செய்யப்பட்டனர். சில இடங்களில் ரயில் மறியல் போராட்டமும் நடைபெற்றது. திருச்சி, புதுக்கோட்டை, கரூர், பெரம்பலூர் மாவட்டங்களில் சாலை, ரயில் மறியலில் ஈடுபட்ட 9,897 பேரும் மதுரை, சிவகங்கை, தேனி, விருதுநகர், திண்டுக்கல், ராமநாதபுரம் மாவட்டங்களில் 9,313 பேரும் கைது செய்யப்பட்டனர்.

கோவை மண்டலத்தில் லட்சக்கணக்கான தொழிலாளர்கள் வேலைக்கு செல்லவில்லை. கேரளா உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்ல வேண்டிய காய்கறிகள் சந்தையிலேயே தேங்கிக் கிடந்தன. கோவை, திருப்பூர், நீலகிரி மாவட்டங்களில் 4,369 பேர் கைது செய்யப்பட்டனர்.

லாரிகள் ஓடாததால் தூத்துக்குடி துறைமுகத்தில் 70 சதவீத ஏற்றுமதி, இறக்குமதி பணிகள் பாதிக்கப்பட்டன. திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் சாலை மறியலில் ஈடுபட்ட 3,108 பேர் கைது செய்யப்பட்டனர். தமிழகத்தின் 32 மாவட்டங்களிலும் சாலை, ரயில் மறியல் போராட்டங் களில் ஈடுபட்ட சுமார் 61 ஆயிரத்துக் கும் அதிகமானோர் கைது செய்யப் பட்டனர். இவர்கள் அனைவரும் மாலையில் விடுவிக்கப்பட்டனர்.

புதுச்சேரியில் 300 பேர் கைது

புதுச்சேரியில் கடைகள் முழு வதும் அடைக்கப்பட்டிருந்தன. பேருந்து, ஆட்டோக்கள் இயங்க வில்லை. தமிழகத்தில் இருந்து வந்த ஒரு சில அரசுப் பேருந்துகள் புதுச்சேரியில் போலீஸ் பாதுகாப்புடன் ஓடின. புதுச்சேரி பேருந்து நிலையம் எதிரில் சாலை மறியலில் ஈடுபட்ட திமுக அமைப்பாளர்கள் சிவா, எஸ்.பி. சிவக்குமார் உட்பட சுமார் 300 பேர் கைது செய்யப்பட்டனர். 4 தமிழக அரசுப் பேருந்துகள் கல்வீச்சில் சேதமடைந்தன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x