Published : 22 Feb 2017 09:10 PM
Last Updated : 22 Feb 2017 09:10 PM

விவசாயிகளின் வங்கிக் கணக்கில் ரூ.2,247 கோடி வறட்சி நிவாரணம்: அரசாணை வெளியீடு

தமிழகம் முழுவதும் வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு ரூ.2 ஆயிரத்து 247 கோடி வறட்சி நிவாரணம் வழங்குவதற்கான அனுமதி வழங்கி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

வறட்சி நிவாரணம் தொடர்பான அரசாணையில் கூறியிருப்பதாவது:-

''வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு அவர்களது வங்கிக் கணக்கில் இடுபொருள் நிவாரண உதவித் தொகையாக ரூ.2 ஆயிரத்து 247 கோடி வழங்க முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். கடந்தாண்டு வடகிழக்கு பருவமழைக் காலத்தில் மழைப்பொழிவு மிகவும் குறைவாக இருந்ததைக் கருத்தில் கொண்டு அனைத்து மாவட்டங்களையும் (32) வறட்சி பாதித்த மாவட்டங்களாக அரசு அறிவித்தது.

33 சதவீதத்துக்கும் மேல் மகசூல் இழப்பு ஏற்பட்டுள்ள விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்குவது தொடர்பாக வேளாண்மை துறை, தோட்டக்கலைத் துறை, பட்டுவளர்ச்சித் துறை இயக்குனர்கள் சமர்ப்பித்த அறிக்கையை வருவாய் நிர்வாக ஆணையர் அரசுக்கு சமர்ப்பித்தார். அதன்படி, 18 லட்சத்து 73 ஆயிரத்து 337 ஹெக்டேரில் பயிரிடப்பட்டிருந்த நெல், தினைகள், பருப்பு வகைகள், எண்ணைய் வித்துக்கள், பருத்தி, கரும்பு, தென்னை போன்ற நீண்டகாலப் பயிர்கள் ஆகிய பயிர்கள் சேதமடைந்துள்ளன. அதற்கு ரூ.2 ஆயிரத்து 49 கோடி நிவாரணம் வழங்க வேண்டும்.

அதுபோல 1 லட்சத்து 63 ஆயிரத்து 695 ஹெக்டேரில் பயிரிடப்பட்டிருந்த பழங்கள், காய்கறிகள், நறுமணப் பயிர்கள், பூக்கள், மருத்துவ தாவரங்கள் ஆகியன சேதமடைந்துள்ளன. அவற்றுக்கு ரூ.197 கோடி நிவாரணம் வழங்க வேண்டும். ஆயிரத்து 480 ஹெக்டேரில் சாகுபடி செய்யப்பட்ட மல்பெரி செடிகள் சேதமடைந்துள்ளன. அவற்றுக்கு ரூ.1 கோடி நிவாரணம் வழங்க வேண்டும் என்று வருவாய் நிர்வாக ஆணையர் கோரியிருந்தார்.

அதுகுறித்து அரசு தீவிரமாகப் பரிசீலித்து வேளாண்மைத் துறைக்கு ரூ.2 ஆயிரத்து 49 கோடியே 9 லட்சமும், தோட்டக்கலைத் துறைக்கு ரூ.196 கோடியே 89 லட்சமும், பட்டுவளர்ச்சித் துறைக்கு ரூ.1 கோடியே 9 லட்சமும் ஆக மொத்தம் ரூ.2 கோடியே 247 கோடி அனுமதிக்கப்படுகிறது.

மாநில பேரிடர் நிவாரண நெறிமுறைகள் மற்றும் தேசிய பேரிடர் நிவாரண நெறிமுறைகளின்படி 5 ஏக்கருக்கு குறைவான நிலங்கள் வைத்திருக்கும் தகுதியான விவசாயிகளுக்கு அவர்களது வங்கிக் கணக்கில் வறட்சி நிவாரணத் தொகை நேரடியாகச் செலுத்தப்படும்'' என்று அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.





FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x