Last Updated : 23 Apr, 2014 12:00 AM

 

Published : 23 Apr 2014 12:00 AM
Last Updated : 23 Apr 2014 12:00 AM

விழுப்புரம் (தனி) தொகுதியில் வெற்றி கனி யாருக்கு?

16-வது மக்களவைத் தேர்தலில் விழுப்புரம் (தனி) தொகுதியில் திமுக சார்பில் முத்தையன், அதிமுக சார்பில் ராஜேந்திரன், தேமுதிக சார்பில் உமாசங்கர், காங்கிரஸ் சார்பில் ராணி, சிபிஎம் சார்பில் ஆனந்தன் ஆகியோர் முக்கிய வேட்பாளர்களாகக் களத்தில் உள்ளனர்.

விழுப்புரம் (தனி) மக்களவைத் தொகுதி திண்டிவனம்(தனி), வானூர்(தனி), விழுப்புரம், விக்கிரவாண்டி, திருக்கோவிலூர், உளுந்தூர்பேட்டை ஆகிய சட்டசபைத் தொகுதிகளை உள்ளடக்கியது. இத்தொகுதியில் 13லட்சத்து 68 ஆயிரத்து 335வாக்காளர்கள் உள்ளனர். இவர்களில் 6 லட்சத்து 85 ஆயிரத்து, 753 ஆண்களும், 6 லட்சத்து 82 ஆயிரத்து 461 பெண்களும், 121 இதர வாக்காளர்களும் உள்ளனர்.

2009 தேர்தலுக்கு முன்பு திண்டிவணம் மக்களவைப் பொதுத் தொகுதியாக இருந்த இத்தொகுதி, 2009 தேர்தலில் தொகுதி மறுசீரமைப்பில் விழுப்புரம் (தனி) தொகுதியாகவும் அறிவிக்கப்பட்டது.

கடந்த 2009 தேர்தலில் அதிமுக வேட்பாளர் ஆனந்தன் 3,06,826 வாக்குகள் பெற்று எதிர்த்து திமுக கூட்டணியில் போட்டியிட்ட சாமிதுரையை 2,797 வாக்கு வித்தியாசத்தில் தோற்கடித்தார். வரலாற்றுச் சிறப்பு வன்னியர்களுக்கு என்று தனிக் கட்சியாக தமிழ்நாடு உழைப்பாளர் கட்சியைத் தொடங்கிய ராமசாமி படையாச்சி இந்தத் தொகுதியில் இருமுறை வெற்றிபெற்றுள்ளார். 1951-ல் இவரது கட்சியின் ஆதரவால்தான் ராஜாஜி முதல்வராக ஆக முடிந்தது. இவர் காமராஜர் அமைச்சரவையில் உள்ளாட்சித் துறை அமைச்சராகவும் இருந்துள்ளார். தமிழகத்தின் முதல் முதல்வர் ஓமந்தூர் ராமசாமி ரெட்டியாரின் சொந்த ஊரான ஓமந்தூர் இத் தொகுதியில்தான் உள்ளது.

தொகுதியில் உள்ள பிரச்சினைகள்

தமிழகத்திலேயே அதிக குடிசைகள் நிறைந்த மாவட்டம் என பெயர் பெற்றிருக்கிறது விழுப்புரம். இங்குள்ள வீடுகளில் பெரும்பாலும் கழிப்பிட வசதி கிடையாது. தென்மாவட்டங்களுக்குச் செல்லும் அனைவரும் திண்டிவனத்தைக் கடந்தே ஆகவேண்டும். அந்த திண்டிவனத்தில் பஸ் நிலையம் தீராத பிரச்சினை. இரவு 8 மணிக்கு மேல் அப்பகுதிக்குச் செல்லவே மக்கள் பயப்படுவார்கள். தேசிய நெடுஞ்சாலையில் ஒரு இடம் தேர்வு செய்து பஸ் நிலையத்தை அங்கு மாற்றவேண்டும் என்பது திண்டிவனம் மக்களின் நீண்ட நாள் கோரிக்கை.

வக்ஃபு போர்டுக்கு சொந்தமான இடத்தில் அமைக்க வேண்டும் என்று ஒரு தரப்பினரும் காவேரிப்பாக்கம் ஏரியில் அமைக்க வேண்டும் என்று இன்னொரு தரப்பினரும் முட்டி மோதிக்​கொண்டிருப்பதால், பஸ் நிலையம் வருவது இழுபறியாகவே உள்ளது. வானூர் தொகுதியில் ஏராளமான கல் குவாரிகள் உள்ளன. அங்கிருந்து வெளியாகும் மண் துகள்களால் அங்கு வசிக்கும் மக்களுக்கு சுவாசம் தொடர்பான பிரச்சினைகள் ஏற்படுகின்றன. மேலும் குவாரியால் விபத்துகளும் உயிரிழப்புகளும் அடிக்கடி நடக்கின்றன.

வாக்காளர்களின் எதிர்பார்ப்பு

விழுப்புரம் மாவட்ட மக்களின் நீண்ட கால, நிறைவேறாத கனவு. நந்தன் கால்வாய் திட்டம். பாலாறு, செய்யாறு இரண்டையும் இணைத்து 36 ஏரிகளுக்கு நீர் வரும் பாதையை சரிசெய்வதுதான் நந்தன் கால்வாய் திட்டம். இதன் மூலம் விக்கிரவாண்டி, திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பெண்ணாத்தூர், செஞ்சி ஆகிய தொகுதிகள் பாசன வசதி பெறும். எம்.ஜி.ஆர். ஆட்சிக் காலத்தில் இருந்து சொல்லப்பட்டு வரும் திட்டம் இது. இதற்காக மத்திய அரசின் மூலம் ரூ.250 கோடி நிதி ஒதுக்கப்பட்டு, சுற்றுச்சூழல் துறையின் அனுமதிக்காகக் காத்திருக்கிறது.

இதற்கிடையில் கால்வாய்களின் புனரமைப்புக்காக மாநில அரசு ரூ.14.5 கோடி ஒதுக்கியிருக்கிறது. ஆனால் இத்திட்டம் முழுவீச்சில் செயல்பட மத்திய அரசிடம் போராடவே இல்லை என்பது விவசாயிகளின் குமுறல்.

வேலூரிலிருந்து திருச்சி, மதுரை உள்ளிட்ட தென் மாவட்டங்களுக்குச் செல்ல திருக்கோவிலூர் வழியாகத்​தான் செல்ல வேண்டும். ஆனால், இங்குள்ள பஸ் நிலையம் மிகச் சிறியது. புதிய இடத்தில் பெரிய அளவில் பஸ் நிலையம் அமைக்க வேண்டும் என்பது திருக்கோவிலூர் மக்களின் கோரிக்கை. திருக்கோவிலூரில் ரயில்வே முன்பதிவு மையம் இல்லை. அதற்கான எந்த முயற்சியும் எடுக்கப்படவில்லை என்கிறார்கள் இப்பகுதியினர்.

தேவையில்லாத பணிகள்

பல கிராமங்களில் நாடக மேடை கட்ட நிதி ஒதுக்கினார் அதிமுக எம்பி ஆனந்தன். அந்த நிதியில் கூடுதல் பள்ளி கட்டிடங்களுக்கு நிதி ஒதுக்கி இருக்கலாம் என பலர் விமர்சிக்கின்றனர். பல அரசு அலுவலகங்கள் இன்னமும் தனியார் கட்டிடங்களில் இயங்குகின்றன. அரசு சார்பில் அதற்கு சொந்த கட்டிடம் கட்ட நிதி ஒதுக்கீடு செய்திருக்கலாம்.

மேலும் திருச்சி சாலையில் அமைக்கப்பட்ட பயணிகள் நிழற்குடையை, மார்கெட் கமிட்டி எதிரில் கட்டி இருக்கலாம். இப்போது கட்டியுள்ள இடத்தில் பஸ்களும் நிற்பதில்லை. பயணிகளும் காத்திருப்பதில்லை. இதனால், அது இரவில் மது அருந்த பாராகப் பயன்படுகிறது என்கிறார்கள்.

முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனை அருகே ரூ.50 லட்சம் செலவில் நோயாளிகள் வசதிக்காக, காத்திருக்கும் அறை கட்ட நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. விழுப்புரத்தில் இருந்து புதுச்சேரி செல்லும் வழியில் கண்டமங்கலம் ரயில்வே கேட்டில் மேம்பாலம் அமைக்க நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. எம்பி கோரிக்கையின் பேரில் விழுப்புரத்தில் இருந்து திருப்பதிக்கு திருக்கோவிலூர் வழியாக ரயில் விடப்பட்டது. பல கிராமங்களில் பகுதி நேர நியாய விலைக் கடைகள் திறக்கப்பட்டுள்ளன.

தொழிலாளர் குறை தீர்க்கும் அலுவலகம் சென்னையில் மட்டும் இருந்தது. அதன் உதவி கமிஷனர் அலுவலகம் புதுச்சேரி அல்லது விழுப்புரத்தில் அமைக்க வேண்டும் என்று மக்களவையில் எம்பி கோரிக்கை வைத்ததன் பேரில் இப்போது புதுச்சேரிக்கு அந்த அலுவலகம் வந்துவிட்டது. மரக்காணம் கடலோரப் பகுதியான சின்ன முதலியார் குப்பம், பொம்மையார் குப்பம், சோதனைக் குப்பம் ஆகிய பகுதிகளில், கடல் அரிப்பால் மக்கள் மிகவும் சிரப்பட்டு வந்தனர். அவர்​களுக்கு மத்திய மற்றும் மாநில அரசுகளின் நிதி உதவி மூலம் ரூ.35 கோடி செலவில் தூண்டில் வளைவு அமைக்க ஆனந்தன் முயற்சி எடுத்துள்ளார்.

வாக்களர்களின் வாக்கு யாருக்கு?

விழுப்புரம் தொகுதியில் கடந்த தேர்தலில் திமுக கூட்டணியில் இருந்த விடுதலைச் சிறுத்தைகள் மிகக் குறைந்த வாக்குகளில் அதிமுகவிடம் தோற்றதால் இம்முறை திமுகவே நேரடியாக களத்தில் குதித்துள்ளது. அதனால் இத்தேர்தலில் எப்படியாவது வென்றே ஆக வேண்டும் என்று திமுகவினர் முழுமூச்சாக இறங்கியுள்ளனர். ஆனால் கூட்டணியில் உள்ள விடுதலைச் சிறுத்தைகள் முழுமையான ஒத்துழைப்பு தருவதில்லை என்பதை திமுகவினரே ஒப்புக்கொ ள்கின்றனர். தொகுதியில் உள்ள வலுவான முஸ்லீம் அமைப்புகள் திமுகவை ஆதரிக்கின்றன.

அதிமுகவில் எம்பி லட்சுமணன், எம்.எல்.ஏ சிவி சண்முகம் தனித்தனி கோஷ்டியாக இருந்தாலும் இத்தேர்தலில் இணைந்து செயல்படுகின்றனர். ஏற்கனவே குறைந்த வாக்கு வித்தியாசத்தில் வென்றதை கவுரவக் குறைவாக நினைக்கும் அதிமுக தாழ்த்தப்பட்ட மக்களைக் குறிவைத்து பிரச்சாரம் செய்தது.

காங்கிரஸ் வேட்பாளர் ராணி கிராமம் தோறும் சென்று “ 100 நாள் வேலை திட்டம் தொடர வேண்டும் என்றால் காங்கிரஸுக்கு வாக்களியுங்கள்” என்றே வாக்கு கேட்கிறார். தேமுதிக வேட்பாளர் உமாசங்கர் பாமகவின் ஓட்டு வங்கியை பலமாக நம்பியுள்ளார். பாமக நிர்வாகிகளிடம் அன்புமணியே போனில் அழைத்து பேசியதால் பாமகவினர் கடந்த கால கசப்புகளை மறந்து வேலை செய்தனர்.

சிபிஎம் வேட்பாளர் ஆனந்தன் தன் கட்சி பலத்தை மட்டுமே நம்பி களத்தில் உள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x