Published : 24 Jul 2016 08:52 AM
Last Updated : 24 Jul 2016 08:52 AM

விமானத்தை தேடும் பணி 2-வது நாளாக தீவிரம்: கடலில் கிடந்தது விமான உதிரிபாகமா? - பாதுகாப்பு துறை அமைச்சர் பார்வையிட்டார்

சென்னையில் இருந்து அந்தமான் செல்லும் வழியில் 29 வீரர்களுடன் மாயமான விமானப்படை விமானத்தை தேடும் பணி 2-வது நாளாக நேற்றும் தீவிரமாக நடந்தது. விமானம் மாயமான பகுதியில் கடலில் கிடைத்துள்ள மர்ம பொருள், விமானத்தின் உதிரிபாகமா என்று தீவிர ஆய்வு நடந்து வருகிறது.

சென்னை தாம்பரத்தில் உள்ள இந்திய விமானப்படை தளத்தில் இருந்து ஏஎன்-32 வகை விமானம் நேற்று முன்தினம் காலை 8.30 மணிக்கு அந்தமான் தலைநகர் போர்ட்பிளேருக்கு புறப்பட்டது. விமானத்தில் 6 விமானிகள் இருந்தனர். புஷ்பேந்திர பத்சரா, பங்கஜ்குமார் நந்தா ஆகிய 2 பேர் விமானத்தை இயக்கினர். அவர்களுக்கு வழிகாட்டியாக விமானி குணால் பர்பேட்டா, பொறியாளர் ராஜன் மற்றும் 2 ஊழியர்கள் உடன் இருந்தனர். இவர்கள் தவிர, 11 விமானப்படை வீரர்கள், 9 கடற்படை வீரர்கள், 2 ராணுவ வீரர்கள், கடலோரக் காவல்படை வீரர் ஒருவர் என மொத்தம் 29 பேர் இருந்தனர்.

போர்ட்பிளேர் கடற் படை தளத்தில் நிறுத்தப் பட்டுள்ள ‘ஐஎன்எஸ் பட்டிமால்வ்’ என்ற போர்க் கப்பலில் சிஆர்என்-91 என்ற பீரங்கியில் பழுது ஏற்பட்டுள்ளது. அதை சரி செய்வதற்காக இவர்கள் புறப்பட்டுச் சென்றனர். இவர்கள் 15 நாட்கள் போர்ட் பிளேரில் தங்கி பணிபுரிய உத்தரவிடப்பட்டிருந்தது.

காலை 8.46 மணிக்கு சென்னையில் இருந்து 151 நாட்டிகல் மைல் தொலைவில் 23 ஆயிரம் அடி உயரத்தில் பறந்தபோது, திடீரென விமானத்தின் தொலைத்தொடர்பு துண்டானது. ரேடார் கருவியின் கண்காணிப்பில் இருந்து விமானம் மாயமானது. கடல் பகுதியில் விமானம் விழுந்திருக்கலாம் என சந்தேகிக்கப்பட்டு, வங்கக்கடலின் அனைத்து பகுதிகளிலும் தேடுதல் நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டது.

வங்கக்கடலில் கடந்த 2 நாட்களாக மோசமான வானிலை நிலவுவதால், தேடுதல் பணியை மேற்கொள்வது சற்று சிரமமாக உள்ளது. ஆனாலும், 2-வது நாளாக நேற்றும் முழு வீச்சில் தேடுதல் பணிகள் நடந்தன. இந்திய விமானப்படை சார்பில் இரு ஏஎன்-32 விமானங்கள், ஒரு சி130 ரக விமானம், கடற்படை சார்பில் பி8ஐ விமானம் ஆகியவை தேடுதல் பணியில் ஈடுபட்டுள்ளன. சென்னையில் இருந்து ஐசிஜிஎஸ் சாகர், சமுத்ரா பெஹ்ரேதார் ஆகிய கப்பல்கள், போர்ட்பிளேரில் இருந்து ஐசிஜிஎஸ் ராஜ், ஐசிஜிஎஸ் ராஜ்வீர், ஐசிஜிஎஸ் விஷ்வஸ்த் மற்றும் கிழக்கு படைப்பிரிவின் 17 போர்க் கப்பல்கள், 2 டார்னியர் விமானங்கள், ஒரு நீர்மூழ்கிக் கப்பல் ஆகியவை தேடுதல் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. போர்ட்பிளேரில் இருந்து சென்னைக்கு வந்த ஹர் ஷவர்தன் என்ற சரக்குக் கப்பலும் தேடுதல் பணியில் ஈடுபடுத்தப் பட்டுள்ளது.

இந்நிலையில், சென்னையில் இருந்து சுமார் 150 நாட்டிகல் மைல் தொலைவில் நேற்று மர்ம பொருள் ஒன்று கண்டெடுக்கப் பட்டதாகக் கூறப்படு கிறது. அது மாயமான விமானத்தின் உதிரி பாகமா என அதிகாரிகள் ஆய்வு செய்கின்றனர்.

கடலுக்கு அடியில் இருந்து வரும் சத்தத்தை மிக துல்லியமாக பதிவு செய்யும் வசதி, ‘சிந்து கோஷ்’ என்ற நீர்மூழ்கிக் கப்பலில் உள்ளது. மாய மான விமானத்தின் கருப்புப் பெட்டியில் இருந்து ஏதாவது சிக்னல் வருகிறதா என்பதை அந்த நீர்மூழ்கிக் கப்பல் ஆய்வு செய்து வருகிறது. சிக்னல் கிடைக்கும் பட்சத்தில், கடலில் விமானம் எந்த இடத்தில் விழுந்து மூழ்கியுள்ளது என்பதை துல்லிய மாக கண்டுபிடித்துவிட முடியும்.

பாதுகாப்பு அமைச்சர் ஆய்வு

இதற்கிடையே, தேடுதல் பணியை பார்வையிடுவதற்காக மத்திய பாது காப்புத் துறை அமைச்சர் மனோகர் பாரிக்கர் நேற்று டெல்லியில் இருந்து சிறப்பு விமானம் மூலம் அரக்கோணம் ஐஎன்எஸ் ராஜாளி கடற்படை விமான தளத்துக்கு வந்தார். விமானம் மாய மானது மற்றும் தேடுதல் நடவடிக் கைகள் குறித்து கிழக்குப் பிராந்திய கடற்படை அதிகாரி அரூப் ராஹா அவரிடம் விவரித்தார். பின்னர் பி8ஐ விமானத்தில் சென்ற பாரிக்கர், வங்கக் கடல் பகுதியில் நடந்துவரும் தேடுதல் பணியைப் பார்வையிட்டார். பின்னர் அவர் டெல்லி புறப்பட்டுச் சென்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x