Published : 02 Sep 2014 12:14 PM
Last Updated : 02 Sep 2014 12:14 PM

விநாயகர் கோயில் கும்பாபிஷேகத்தை முன்னின்று நடத்திய ஆங்கிலோ இந்தியர்

இந்தியாவில் அவ்வப்போது மதக்கலவரம் தலைகாட்டினாலும், வேற்றுமையில் ஒற்றுமை காணும் சிலரின் குணத்தால் நாட்டின் கட்டுக்கோப்பு குலையாமல் உள்ளது.

சிலர் ஒருபடி மேலே போய் மாற்று மதத்தையும், தம் மதம் போலவே கருதி, மதநல்லிணக்கப் பணிகளில் ஆர்வம் காட்டி வருகின்றனர். அதுபோன்றவர்களில் ஒருவர் தான் பேபியன் ஜோசப்(42). ஆங்கிலோ இந்தியரான இவர் வேளாங் கண்ணிக்கு ஆண்டுதோறும் மோட்டார் சைக்கிளில் யாத்திரை யாக சென்றுவரும் தீவிரகிறிஸ்தவர்.

சென்னை கொடுங்கையூர் கே.கே.ஆர். டவுனில் வசித்து வரும் அவரது பெருமுயற்சியால் இக்குடியிருப்புப் பகுதியில் உள்ள ஒரு விநாயகர் கோயிலின் கும்பாபிஷேகம் நடைபெற்றுள்ளது.

கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு உருவாக்கப்பட்ட அந்த நகரில் தற்போது 362 குடும்பங்கள் வசித்து வருகின்றன. அங்குள்ள செல்வ விநாயகர் கோயிலில் பூஜைகள் நடத்தப்பட்டு வந்தாலும் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை செய்ய வேண்டிய கும்பாபிஷேகம் நடைபெறவில்லையே என்ற மனக்குறை பகுதிவாசிகளிடம் இருந்து வந்தது.

இதுபற்றி அப்பகுதி குடியிருப்போர் நலச்சங்கத்தைச் சேர்ந்த ராஜேந்திரன் கூறியதாவது:

கடந்த 10 மாதங்களுக்கு முன்பு எங்கள் சங்கத்தின் பொதுச் செயலாளராக பேபியன் ஜோசப் பொறுப்பேற்றார். இங்குள்ள கோயிலின் கும்பாபிஷேகத்தை நடத்துவது இக்குடியிருப்பு வாசிகளின் நீண்டகால கோரிக்கை. மாற்று மதத்தைச் சேர்ந்தவராக இருப்பினும், குடியிருப்பு வாசிகளின் கோரிக்கையை நிறை வேற்ற உறுதி பூண்டு நடத்திக்காட்டி, அனைவரது நன்மதிப்பையும் பெற்றுள்ளார் என்றார்.

இதுகுறித்து பேபியனிடம் கேட்ட போது, “நான் ரியல்எஸ்டேட் தொழில் செய்து வருகிறேன். ஆங்கிலோ இந்திய பிரிவைச் சேர்ந்திருந்தாலும், செல்வ விநாயகர் கோயில் கும்பாபி ஷேகத்தை நடத்தி முடிப்பதை எனது முதல் பணியாக எடுத்து செய்து முடித்தேன். இங்குள்ள அனைவரின் ஒத்துழைப்போடும் இதை நடத்தி முடித்தோம்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x