Published : 26 Mar 2017 01:04 PM
Last Updated : 26 Mar 2017 01:04 PM

விண்வெளி ஆராய்ச்சியில் இந்தியாவின் வளர்ச்சி மகத்தானது: இஸ்ரோ நிகழ்வு இயக்குநர் பேட்டி

உலக நாடுகளுடன் ஒப்பிடும் போது விண்வெளி ஆராய்ச்சியில் இந்தியாவின் வளர்ச்சி மகத்தானது என, இஸ்ரோ நிகழ்வு இயக்குநர் ரங்கநாதன் பேசினார்.

ஈரோடு நந்தா பொறியியல் கல்லூரியில் நடைபெற்ற கருத்தரங்கில் ஸ்ரீஹரிகோட்டா இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிலையத்தின் (இஸ்ரோ) நிகழ்வு இயக்குநர் ரங்கநாதன் பங்கேற்றார். அப்போது அவர் செய்தியாளர்களிடம் கூறிய தாவது:

இஸ்ரோ சார்பில் சந்திரன் கிரகத்திற்கு சந்திராயன், செவ்வாய் கிரகத்திற்கு மங்கள்யான் செயற்கைக் கோள்களை அனுப்பி விட்டோம். தற்போது இவ்விரு செயற்கைக்கோள்களும் குறிப்பிட்ட கிரகங்களை படம் பிடித்து பூமிக்கு அனுப்பி வருகிறது. சந்திராயன் செயற்கைக்கோளின் படங்களை வைத்து சந்திரன் தொடர்பான ஆய்வுகள் நடந்து வருகிறது.

உலக நாடுகளுடன் ஒப்பிடும் போது விண்வெளி ஆராய்ச்சியில் இந்தியாவின் வளர்ச்சி மகத்தானது. அமெரிக்கா, ஐரோப்பா போன்ற நாடுகளுடன் ஒப்பிடும் போது அவர்கள் ஒவ்வொரு ஆராய்ச்சிக்கும் செலவிடும் தொகையை விட நாம் செலவிடும் தொகை குறைவானது.

அதேசமயம் அவர்களை விட வெற்றிகரமான செயற்கைக் கோள்களை விண்வெளிக்கு அனுப்பி சாதித்துள்ளோம். சமீபத்தில் கூட 104 செயற்கைக் கோள்களை ஒரே ராக்கெட்டில் அனுப்பி நாம் சாதனை நிகழ்த்தி இருக்கிறோம்.

புதுப்புது தொழில்நுட்பங்களை உருவாக்கி கண்டுபிடிக்க அதிகமாக செலவிட வேண்டி உள்ளது. தற்போது கூட 3டி தொழில்நுட்பத்தில் டிஜிட்டல் முறையிலான கட்டுமானப் பணிகள் குறித்த ஆய்வுகள் நடந்து வருகிறது. நாட்டின் வளர்ச்சிக்காக மட்டுமே நாம் செயற்கைக்கோள்களை அனுப்புகிறோம்.

தற்போது நாம் எரிபொருளாக பயன்படுத்தி வரும் நிலக்கரி, பெட்ரோலியப் பொருட்கள் போன்றவை இன்னும் 30, 40 ஆண்டுகளுக்கு தான் இருப்பு இருக்கும். எனவே இதற்கு மாற்றாக பிரான்ஸ் நாட்டை போன்று அணுக்களை பயன்படுத்தி மின்உற்பத்தி செய்யும் முறையையும், சூரிய சக்தியிலான மின் சக்தியையும் அதிகளவில் பயன்படுத்த வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்.

சந்திராயன் 1 செயற்கைக்கோள் மூலம் சந்திரனில் தண்ணீர் இருப்பது கண்டறியப்பட்டது. தற்போது சந்திராயன்-1 செயற்கைக் கோளின் ஆய்வுப்பணிகள் முடிவடைந்து விட்டது. இதன் தொடர்ச்சியாக சந்திராயன்-2 செயற்கைக்கோள் இந்த ஆண்டு இறுதியில் அல்லது அடுத்த ஆண்டு தொடக்கத்தில் விண்வெளி ஆய்வுக்காக அனுப்பி வைக்கப்படும். இதேபோல மங்கள்யான்-2 செயற்கைக் கோளுக்கான திட்ட வரைவு பணியும் நடந்து வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x