Last Updated : 01 Dec, 2015 09:23 AM

 

Published : 01 Dec 2015 09:23 AM
Last Updated : 01 Dec 2015 09:23 AM

விஜயதாரணி எம்எல்ஏ புகார் விவகாரம்: டெல்லியில் காங்கிரஸ் மேலிட தலைவர்களிடம் இளங்கோவன் நேரில் விளக்கம்

விஜயதாரணி அளித்த புகார் தொடர்பாக காங்கிரஸ் மேலிடத் தலைவர்கள் முகுல் வாஸ்னிக், ஷோபா ஓசா ஆகியோரிடம் தமிழக காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் நேரில் விளக்கம் அளித்துள்ளார்.

தமிழக மகிளா காங்கிரஸ் தலைவர் விஜயதாரணி எம்எல்ஏ, கட்சியின் மாநிலத் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனுக்கு எதிராக போர்க்கொடி தூக்கியுள் ளார். தன்னை தரக்குறைவாகப் பேசிய இளங்கோவனை தமிழக காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என கட்சித் தலைவர் சோனியா காந்தி, துணைத் தலைவர் ராகுல் காந்தி, காங்கிரஸ் அகில இந்தியப் பொதுச்செயலாளரும் தமிழகப் பொறுப்பாளருமான முகுல் வாஸ்னிக், மகளிர் காங்கிரஸ் தேசியத் தலைவர் ஷோபா ஓசா ஆகியோருக்கு விஜயதாரணி கடந்த 28-ம் தேதி கடிதம் எழுதினார். நேற்று முன்தினம் டெல்லியில் ஷோபா ஓசாவை நேரில் சந்தித்தும் புகார் தெரிவித்தார்.

இந்நிலையில், டெல்லி சென்ற இளங்கோவன், அங்கு முகுல் வாஸ்னிக், ஷோபா ஓசா ஆகியோரை நேற்று சந்தித்து விளக்கம் அளித்தார். இது தொடர் பாக ‘தி இந்து’விடம் பேசிய இளங்கோவன், ‘‘கடந்த 27-ம் தேதி சத்தியமூர்த்தி பவனில் என்னிடம் மிரட்டும் தொணியில் மிக மோச மாக விஜயதாரணி பேசினார். பொறுமையாக இருக்குமாறு பலமுறை கேட்டுக் கொண்டும் அவர் கேட்கவில்லை. ஆனால், காங்கிரஸ் கட்சிக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் வகையில் அவரது ஆதரவாளர்களை வைத்து காவல் நிலையத்தில் புகார் செய்துள்ளார். சாதாரண பேனர் வைக்கும் விவகாரத்தை பெரிதுபடுத்தி கட்சியின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தியுள்ளார். சத்தியமூர்த்தி பவனில் நடந்ததை அங்கிருந்த மற்ற பெண் நிர்வாகிகள் அறிவர். இது தொடர்பாக முகுல் வாஸ்னிக், ஷோபா ஓசா ஆகியோரை சந்தித்து நடந்த உண்மைகளை தெரிவித்தேன்’’ என்றார்.

இதுகுறித்து மகளிர் காங்கிரஸ் தேசியப் பொதுச்செயலாளரும், தமிழக மகளிர் காங்கிரஸ் பொறுப்பாளருமான நக்மாவிடம் கேட்டபோது, ‘‘எந்த பிரச்சினை என்றாலும் மாநிலத் தலைவருக்கு எதிராக விஜயதாரணி காவல் துறையில் புகார் அளித்தது தவறு. இது ஒரு சிறிய பிரச்சினை. விரைவில் இதற்கு சுமூக தீர்வு காணப்படும்’’ என்றார்.

காங்கிரஸ் மூத்த நிர்வாகி ஒருவரிடம் கேட்டபோது, ''சோனியா காந்தி தற்போது வெளிநாட்டில் இருக்கிறார். எனவே, இந்த விவகாரம் ராகுல் காந்தியின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. விஜயதாரணி ஆதரவாளர்களின் புகாரை ஏற்று, பெண் கொடுமைச் சட்டத்தின்கீழ் இளங்கோவன் கைது செய்யப்பட்டிருந்தால் நாடு முழுவதும் காங்கிரஸுக்கு நெருக்கடி ஏற்பட்டிருக்கும். எனவே, உள்கட்சி பிரச் சினையை காவல்துறைக்கு கொண்டு சென்ற விஜயதாரணியை முகுல் வாஸ்னிக், ஷோபா ஓசா, நக்மா உள்ளிட்ட தலைவர்கள் கண்டித்துள்ளனர். அதுபோல கட்சி நிர்வாகிகளை அரவணைத்துச் செல்லுமாறு இளங்கோவனுக்கும் அறிவுரை வழங்கியுள்ளனர்'' என்றார்.

‘மேலிட முடிவுக்கு கட்டுப்படுவேன்’

பெரும்பாலான காங்கிரஸ் மாவட்டத் தலைவர்களும், டி.யசோதா உள்ளிட்ட பெண் நிர்வாகிகளும் விஜயதாரணிக்கு எதிராக ஒன்று திரண்டுள்ளனர். இதுதொடர்பாக விஜயதாரணியிடம் கேட்டபோது, ‘‘இளங்கோவன் தூண்டுதலின்பேரில் டி.யசோதா உள்ளிட்ட பெண் நிர்வாகிகள் எனக்கு எதிராகப் பேசியுள்ளனர். ஒரு பெண்ணாக எனக்கு இழைக்கப்பட்ட அநீதியை அவர்கள் புரிந்துகொள்ள வேண்டும். அரசியலில் உள்ள பெண்களுக்கு மரியாதை வேண்டும் என்பதற்காகவே போராடுகிறேன். ஆனாலும் காங்கிரஸ் மேலிடத்தின் முடிவுக்கு கட்டுப்பட்டு நடப்பேன். கட்சிக்கு பாதிப்பு வரும் வகையில் நடந்துகொள்ள மாட்டேன்’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x