Published : 30 Oct 2014 12:16 PM
Last Updated : 30 Oct 2014 12:16 PM

வழக்கு ஆவணங்களை டிஜிட்டல் மயமாக்க வேண்டும்: உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி ஆலோசனை

நீதி வழங்கும் பணியை மேம்படுத்து வதற்காக, அனைத்து வழக்கு ஆவணங்களையும் டிஜிட்டல் மயமாக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல் யோசனை தெரிவித்தார்.

சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் ரூ.33.84 கோடி செலவில் வக்கீல்கள் கூட்டுறவு சங்க உணவகம், ஆவணங்கள் மற்றும் தமிழ் மொழிபெயர்ப்புத் துறை கட்டிடம், கூட்ட அரங்கம் மற்றும் அருங்காட்சியகம், அரசு வக்கீல்களுக்கான கட்டிடம், காவல்துறை கட்டுப்பாட்டு அறை ஆகிய 5 புதிய கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளன. இதன் தொடக்க விழா அருங்காட்சி யகத்தில் உள்ள பிரமாண்டமான கூட்ட அரங்கில் நேற்று நடந்தது.

சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல் இதில் கலந்துகொண்டு புதிய கட்டிடங்களைத் திறந்துவைத்தார். மேலும் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்பான விவரங் களைத் தெரிவிக்கும் நவீன டிஜிட்டல் பலகையை அறிமுகம் செய்துவைத்த அவர் உயர்நீதி மன்றத்தில் பாலினப் பாகுபாடு மற்றும் பாலியல் துன்புறுத்தலைத் தடுப்பதற்கான கொள்கையை வெளியிட்டார். இந்நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:

சென்னை உயர் நீதிமன்றத்தில் உள்கட்டமைப்புகளை மேம்படுத்தும் பணியின் மற்றொரு நடவடிக் கையாக இன்று 5 கட்டிடங்கள் திறக்கப்பட்டுள்ளன. இவை, வழக்கறிஞர்கள், நீதிபதிகளின் நீதிமன்றப் பணிகளுக்கு உதவி கரமாக இருக்கும். வழக்கு தொடுத் தவர்களுக்கான சேவையை மேலும் சிறப்பாகச் செய்ய வழிவகுக்கும்.

வழக்கு தொடுத்தவர்கள் உயர்நீதிமன்றத்துக்கு வரும்போது, வழக்கு தொடர்பாக எங்கு?, யாரை?, எப்படி அணுகுவது?, வழக்கின் தீர்ப்பு நகலை எங்கே பெறுவது? என்பன போன்ற விவரங்களை ஆன்-லைனில் தெரிந்து கொள்ளும் வகையில் சென்னை உயர்நீதிமன்ற இணையதளத்தை மேம்படுத்துங்கள்.

மக்கள் தொகை பெருகப் பெருக, வழக்குகளின் எண்ணிக் கையும் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. இதனால் ஆவணங்களின் எண்ணிக்கை அதிகமாகும் போது, அவற்றைப் பராமரிக்க மேலும் அதிக இடம் தேவைப்படும். எனவே, லட்சக்கணக்கான வழக்கு ஆவணங்களை டிஜிட்டல் மயமாக்க வேண்டும். அதன் ஒருபகுதியாக, வழக்கு தொடர்பான ஆவணக் கட்டுகளில் வரும் திங்கள் கிழமைமுதல் மாற்றம் கொண்டு வரப்படுகிறது. வழக்கு ஆவணக் கட்டு மடித்த நிலையில் இருந்தால், எதிர்காலத்தில் மடிக்கப்பட்ட பகுதியில் உள்ள எழுத்துகள் அழிந்துபோகும். இதைத் தடுப்பதற் காக ஆவணங்களை மடிக்காமல் வைத்துப் பராமரிக்கப்படவுள்ளது.

வேறு எந்த உயர் நீதிமன்றத் திலும் இல்லாத அளவுக்கு, இந்த கூட்ட அரங்கம் பிரமாண்டமாக அமைக்கப்பட்டுள்ளது. இதைச் சிறப்பாக வடிவமைத்து, உருவாக் கிய பொதுப்பணித் துறை அதிகாரிகளைப் பாராட்டுகிறேன். இன்றிருப்பது போலவே இந்த கூட்ட அரங்கை பராமரிக்க வேண்டும் என்று அனைவரையும் கேட்டுக் கொள்கிறேன்.

உயர்நீதிமன்ற வளாகத்தில் உள்கட்டமைப்புகள் தொடர்ந்து மேம்படுத்தப்பட்டு, நீதி வழங்கும் பணி சிறக்க நடவடிக்கைகள் எடுக்கப்படும். நீதித்துறை மீது மக்களுக்கு மரியாதை இருந்தால் போதும். அச்சம் தேவையில்லை. இவ்வாறு தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல் கூறினார்.

முன்னதாக, கட்டிடக் கமிட்டி தலைவரும், உயர் நீதிமன்ற நீதிபதியுமான எஸ்.ராஜேஸ்வரன் வரவேற்புரையாற்றினார். தமிழக பொதுப்பணித் துறை முதன்மை தலைமைப் பொறியாளர் (கட்டிடம்) சம்பத், புதிய கட்டிடங்களின் தொழில்நுட்ப அறிக்கையை சமர்ப்பித்தார். கட்டிட கமிட்டி உறுப்பினரும், உயர்நீதிமன்ற நீதிபதியுமான வி.தனபாலன் சிறப்புரையாற்றினார். நிறைவில், கட்டிட கமிட்டி உறுப்பினரும், உயர் நீதிமன்ற நீதிபதியுமான எம்.சத்தியநாராயணன் நன்றி கூறினார்.

இவ்விழாவில், உயர் நீதிமன்ற நீதிபதிகள், ஓய்வுபெற்ற நீதிபதிகள், மூத்த வக்கீல்கள், உயர்நீதிமன்றப் பணியாளர்கள், அரசு அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x