Published : 01 Oct 2014 08:17 AM
Last Updated : 01 Oct 2014 08:17 AM

வன்முறைச் சம்பங்களை போலீஸார் வேடிக்கை பார்த்தது தமிழகத்துக்கு ஏற்பட்ட தலைகுனிவு: பொன். ராதாகிருஷ்ணன் பேட்டி

ஜெயலலிதா கைதானதைத் தொடர்ந்து நடைபெற்ற சம்பவங்களின்போது போலீஸ் வேடிக்கை பார்த்ததாக எழுந்த குற்றச்சாட்டு, தமிழகத்துக்கு ஏற்பட்ட தலைகுனிவு என்று பொதுத்துறை தொழில்கள் துறை இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

கோவையில் வருங்கால வைப்பு நிதி துறை சார்பாக ஓய்வூதியதாரர் களுக்கான பாராட்டு விழா நேற்று நடை பெற்றது. நிகழ்ச்சியில், அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், ஓய்வூதிய தாரர்களுக்கு மாதம் ரூ. 1000 வழங்கும் ஓய்வூதியச் சான்றினை அளித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:

மோடி அரசு, ஓய்வூதியத்தை மாதம் ரூ. 26-ல் இருந்து ஆயிரமாக உயர்த்திக் கொடுத்து புரட்சிகரமான திட்டத்தை செயல்படுத்தியுள்ளது. இத் திட்டத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இதில் பலன்பெற்ற ஓய்வூதியதாரர்களிடம் கேட்டபோது, ஓய்வுபெற்ற பின்னர் குழந்தைகள் உதவுவது இல்லை என்றனர். தன் குழந்தை உதவாத நிலையில் தொழிலாளர்கள் பெறாத குழந்தையாக மோடி இருக்கிறார்.

ஜெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்கில் ராம்ஜெத்மலானி ஆஜராகிறரே?

வழக்கறிஞர் என்ற முறையில் அவர் தனது முடிவை எடுத்துள்ளார்.

தமிழகத்தில் அறிவிக்கப்படாத பந்த் நிலவுவது போன்று இருக்கிறதே?

புதிய முதல்வராக பொறுப்பேற் றுள்ள ஓ.பன்னீர்செல்வத்துக்கு எனது வாழ்த்துகள். தமிழக மக்களுக்கு பாது காப்பு கொடுப்பது அரசின் கடமை. கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஆளுங்கட்சி யினர் செய்த தவறுகளை எக்காரணம் கொண்டும் மீண்டும் அனுமதிக்கக் கூடாது.

தமிழகத்தில் வர்த்தக பாதிப்பு ஏற்பட் டுள்ளதே?

தமிழக அரசுதான் அதைப் பற்றி கவலை கொள்ள வேண்டும். ஒவ்வொரு அரசியல் கட்சியினருக்கும் அவரது தலைவர் மீது பற்றும் பாசமும் இருக்கலாம். ஆனால், அதனை மக்கள் பாதிக்கும் அளவுக்கு கொண்டு செல்லக்கூடாது.

தமிழகத்தில் பாஜக வளர்ச்சி அடைய இது சாதகமான நிலை எனக் கூறப்படுகிறதே?

வருங்காலம் பாஜக காலம். தமிழகத்தை ஆளும் காலம் நெருங்கி வந்து கொண்டிருக்கிறது என்பதில் மாற்றுக் கருத்தே கிடையாது.

மின்வெட்டால் கோவையில் தொழில் நசிவு ஏற்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு கூறப்படுகிறதே?

தமிழகத்தின் தொழில் நகரமான கோவையில் பாதிப்பு ஏற்பட்டால் அது ஒட்டுமொத்த பாதிப்பை ஏற்படுத்தும். கோவையை தொழில் நிறைந்ததாக மாற்றும் பணியில் மத்திய அரசு கவனம் செலுத்தி வருகிறது

பிரதமரின் அமெரிக்க சுற்றுப் பயணம் குறித்து?

பிரதமரின் அமெரிக்க சுற்றுப் பயணம் மிகப் பெரிய வெற்றியை ஏற்படுத்தியுள்ளது

ஜெயலலிதா கைதின்போது ஏற்பட்ட வன்முறை சம்பவங்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் போலீஸ் வேடிக்கை பார்த்ததாக குற்றச்சாட்டு உள்ளதே?

தமிழகத்துக்கு ஏற்பட்ட மிகப்பெரிய தலைகுனிவு. இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x