Published : 04 Oct 2015 06:29 PM
Last Updated : 04 Oct 2015 06:29 PM

லாரி உரிமையாளர்கள் வேலைநிறுத்தத்தை முடிவுக்கு கொண்டுவர கருணாநிதி, ராமதாஸ் வலியுறுத்தல்

லாரி உரிமையாளர்கள் வேலைநிறுத்தத்தை முடிவுக்கு கொண்டுவர தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என திமுக தலைவர் கருணாநிதி, பாமக நிறுவனர் ராமதாஸ் ஆகியோர் வலியுறுத்தியுள்ளனர்.

இது தொடர்பாக கருணாநிதி இன்று வெளியிட்ட அறிக்கையில், "சுங்கச்சாவடிகளை அகற்றக் கோரி நாடு முழுவதும் லாரி உரிமையாளர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கடந்த 1-ம் தேதி முதல் நடந்து வரும் இந்தப் போராட்டத்தால் மத்திய அரசுக்கு நாள் ஒன்றுக்கு ரூ.2 ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டு வருகிறது. இதனால் அத்தியாவசியப் பொருட்களின் விலை உயரக் கூடும்.

போராட்டத்தால் 20 லட்சம் தொழிலாளர்கள் தற்காலிகமாக வேலை இழந்துள்ளதாக லாரி உரிமையாளர்கள் சம்மேளனத்தின் பொருளாளர் சென்னகேசவன் கூறியுள்ளார். பிரச்சினை பெரிதாகிக் கொண்டிருக்கும் சூழலில், அதுபற்றி மத்திய, மாநில அரசுகள் கவலைப்படுவதாக தெரியவில்லை.

வேலைநிறுத்தம் குறித்து பிரதமருக்கு தமிழக முதல்வர் ஏன் கடிதம் எழுதவில்லை என்று தெரியவில்லை. இப்போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர முயற்சிக்க வேண்டும்" என்று கருணாநிதி கூறியுள்ளார்.

பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்ட அறிக்கையில், "கடந்த 3 நாட்களாக லாரிகள் ஓடாததால் ரூ.35 ஆயிரம் கோடி மதிப்புள்ள பொருட்கள் தேங்கிக் கிடக்கின்றன. வட மாநிலங்களில் இருந்து சேலத்துக்கு கொண்டு வரப்பட்ட பருப்பு வகைகள் வெளியூர்களுக்கு கொண்டு செல்ல முடியாமல், ரயில்களிலேயே தேக்கி வைக்கப்பட்டு கூடுதல் வாடகை செலுத்தப்பட்டு வருகிறது.

அத்தியாவசியப் பொருட்களை ஏற்றிச் செல்லும் லாரி உரிமையாளர்களும் வேலைநிறுத்தத்தில் ஈடுபடப் போவதாக அறிவித்துள்ளதால், நிலைமை இன்னும் மோசமாகும் சூழல் உருவாகியுள்ளது. இந்த வேலைநிறுத்தப் போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர மத்திய அரசுக்கு மாநில அரசு அழுத்தம் ஏதும் கொடுக்கவில்லை" என்று கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x