Published : 02 Sep 2014 12:19 PM
Last Updated : 02 Sep 2014 12:19 PM

ரூ.2 கோடி மதிப்புள்ள மருந்துகளுடன் வாகனம் கடத்தல்: ஆயுதப் படை போலீஸ் உட்பட 4 பேர் கைது

ஸ்ரீ பெரும்புதூரை அடுத்த மலை பட்டு கிராமம் அருகே, சூடோ பெட்ரின் என்ற மருந்து பொருளுடன் சென்றுகொண்டிருந்த எய்ச்சர் வாகனத்தைக் கடத்திய சம்பவம் தொடர்பாக, சென்னை ஆயுதப்படை போலீஸ் உட்பட 4 பேரை, தனிப்படை போலீஸார் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர்.

ராணிப்பேட்டையில் உள்ளது மல்லாடி மெடிசன் மருந்து தொழிற்சாலை. இத்தொழிற் சாலையில் இருந்து, ஆஸ்துமா நோய்க்கான மருந்து தயாரிக்கப் பயன்படும் மூலப்பொருளான சூடோப்பெட்ரின் என்ற மருந்தை சுவிட்சார்லாந்துக்கு ஏற்றுமதி செய்வதற்காக 3 எய்ச்சர் வாகனங்களில் ஏற்றிகொண்டு, சென்னை விமான நிலையத்துக்கு கடந்த புதன்கிழமை சென்றனர்.

அந்த வாகனங்கள் மணிமங் கலத்தை அடுத்த மலைபட்டு கிராமம் அருகே வந்தபோது, சாலையோரம் காரில் நின்றுகொண்டிருந்த சிலர் 3-வதாக வந்த எய்ச்சர் வாகனத்தை மட்டும் தடுத்து நிறுத்தியுள்ளனர். தங்களை போலீஸ் எனக் கூறிக்கொண்ட அவர்கள், வாகனத்தின் ஆவணங் களை சோதனை செய்வதாக சொல்லிக்கொண்டே ஓட்டுநர் தினேஷின் மீது மயக்க மருந்தைத் தெளித்துள்ளனர்.

இதனை பார்த்த அந்த வாகனத்தில் இருந்த செக்யூரிட்டி கண்ணபிரான் அவர்களை தாக்கியுள்ளார். ஆனால், அந்த நபர்கள் அவரின் முகத்திலும் மயக்க மருந்தை தெளித்துள்ளனர். அதனால், தினேஷும் கண்ணபிரானும் மயங்கி விழுந்துள்ளனர். பின்னர், அந்த மர்ம நபர்கள் ரூ. 2 கோடி மதிப்புள்ள மருந்து பொருட்களுடன் அந்த வாகனத்தைக் கடத்தி சென்றுள் ளனர்.

இதுகுறித்து, தகவல் அறிந்த பாலுசெட்டிசத்திரம் போலீஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து செக்யூரிட்டி கண்ணபிரானையும் ஓட்டுநர் தினேஷையும் மீட்டு காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

இந்தக் கடத்தலில் ஈடுபட்ட மர்ம நபர்களை தனிப்படை அமைத்து பிடிக்க மாவட்ட எஸ்பி விஜயகுமார் உத்தரவிட்டார். இதைத் தொடர்ந்து தனிப்படை போலீஸாரின் விசாரணையில், மருந்து பொருட்களை ஏற்றி சென்ற வாகனத்தை கடத்திய சம்பவத்தில் சென்னை ஆயுதப்படைப் பிரிவைச் சேர்ந்த கார்த்திகேயன் உட்பட ஜார்ஜ், பாலாஜி, கார்த்திக் ஆகிய 4 பேரை போலீஸார் ஞாயிற்றுகிழமை கைது செய்தனர்.

மேலும், அவர்களிடம் இருந்து கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட 3 கார்கள் மற்றும் 475 கிலோ சூடோப்பெட்ரின் மருந்து பொருட் களும் மீட்கப்பட்டன. இச்சம்பவம் தொடர்பாக மேலும் 8 நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x