Published : 25 Oct 2016 06:46 PM
Last Updated : 25 Oct 2016 06:46 PM

ராமேசுவரம் மீனவர்களுக்கு காளான் வளர்ப்பு மூலம் புத்துயிர் அளிக்கும் துறவி

ராமேசுவரம் மீனவர்களுக்கு காளான் வளர்ப்பு மூலம் புத்துயிர் அளித்து வருகின்றார் துறவி ஒருவர்.

சுவாமி பிரணவானந்தாவிற்கு ராமேசுவரம் மீனவர்கள் மத்தியில் அறிமுகம் தேவையில்லை. 1983ல் இலங்கையில் உள்நாட்டு யுத்தம் பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் அகதிகளாக தனுஷ்கோடி நோக்கி வந்தபோது அவர்களுக்கு உதவுவதற்காக ராமேசுவரத்தில் விவேகானந்தர் குடிலை நிறுவினார். தொடர்ந்து ராமேசுவரத்தில் கடந்த 33 ஆண்டுகளாக மீனவர்களின் நலனுக்காக தொடர்ந்து குரல் எழுப்பி வருவதுடன் பல்வேறு மீனவப் போராட்டங்களை வழி நடத்தியுள்ளார்.

இலங்கை கடற்படையின் தொடர் தாக்குல், மீனவர்கள் மற்றும் படகுகள் சிறைப்பிடிப்பினால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டிருக்கும் ராமேசுவரம் மீனவப் பெண்களுக்கு காளான் வளர்ப்பு மூலம் புத்துயிர் அளிக்க துவங்கியுள்ளார் சுவாமி பிரணவானந்தா.

இது குறித்து சுவாமி பிரணவானந்தா கூறியதாவது,

இலங்கையில் உள் நாட்டு யுத்தம் துவங்கிய காலத்தில் அகதிகளாக வந்த தமிழர்களுக்கு முதலில் அனைத்து வகையான உதவிகளையும் செய்தது ராமேசுவரம் மீனவர்கள் தான். இதனால் இலங்கை கடற்படையினரின் இலக்குள்ளாகி கடந்த 30 வருடங்களில் 600க்கும் மேற்பட்ட தமிழக மீனவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கடலில் காணாமல் போயுள்ளனர். இதனால் ராமேசுவரம் மீனவர்களின் வாழ்க்கை முற்றிலும் பறிபோய் இன்று வரையிலும் எழ முடியாமல் உள்ளது.

மீனவப் பெண்களுக்கு வேலை வாய்ப்பினை ஏற்படுத்தி தருவது என்பது மிகவும் சவலான ஒன்று. அதிலும் மீனவ சமூதாயத்தில் இளம் விதவைகளும் அதிகம். இதனால் பெண்களுக்கு வேலை வாய்பினை ஏற்படுத்திட விவேகானந்தர் குடில் மூலம் முதல் கட்டமாக மதுரை, வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்திற்கு 10 மீனவப் பெண்களை தேர்வு செய்து பயிற்சி பெற வைத்தேன். பயிற்சி முடித்த மீனவப் பெண்கள் தற்போது விவேகானந்தர் குடிலில் ஒரு செட்டில் மாதத்திற்கு குறைந்தது 150 கிலோ வரையிலும் அறுவடை செய்யத் துவங்கியுள்ளனர்.

இதற்கு நல்ல விலை கிடைப்பதால் காளான் வளர்ப்பு, காளான் ரகங்கள், காளான் குடில் அமைப்பது, காளான் வித்து உருவாக்குவது, காளான் படுக்கை அமைப்பது, அடைவடை செய்து விற்பனை செய்யப்படும் காளாண்களுக்கு விலை நிர்ணயம் செய்வது வரையிலுமான பயிற்சியை விவேகானந்தர் குடில் மீனவர்களுக்கு மாற்றுத் தொழிலாக பயிற்சியை தற்போது துவங்கியுள்ளது.

ஒரு நாள் முழுக்கச் செலவிட்டால் காளான் வளர்ப்பைக் கற்றுக் கொள்ள முடியும். பத்து பேர் சேர்ந்து ரூ. 5 லட்சம் முதலீடு செய்தால், மாதம் ரூ. 50 ஆயிரம் வரை வருமானம் கிடைக்கும். மேலும் காளான் வளர்ப்பிற்கு அரசு மானியம் அளிக்கிறது, என்றார்.



FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x