Published : 06 Jul 2016 11:00 AM
Last Updated : 06 Jul 2016 11:00 AM

ரம்ஜான் பண்டிகையை கொண்டாடும் இந்துக்கள்: அய்யனார் கோயிலுக்கு விரதமிருக்கும் முஸ்லிம்கள்- சமய நல்லிணக்கத்துக்கு எடுத்துக்காட்டாக திகழும் மதுரை கிராமங்கள்

ஒரு கோயில் திருவிழாவை ஒரே சமயத்தினர், சமூகத்தினர் ஒற்றுமையாக கொண்டாடுவதே அபூர்வம். ஆனால், மதுரை மாவட்டம் மேலூர் அருகே நாவினிப்பட்டி, வடக்கு நாவினிப்பட்டி, கூத்தப்பன்பட்டி, சத்தியபுரம், முத்திருளாண்டிபட்டி, பெருமாள்பட்டி, கோவில்பட்டி ஆகிய 7 கிராமங்களைச் சேர்ந்த இந்துக்களும், முஸ்லிம்களும் இணைந்து ரம்ஜான் பண்டிகையையும், அய்யனார் கோயில் திருவிழாவையும் ஒற்றுமையாகக் கொண்டாடி சமய நல்லிணக்கத்துக்கு எடுத்துக்காட்டாகத் திகழ்கின்றனர்.

இதில் அய்யனார் கோயில் திருவிழா 10 ஆண்டுகளுக்கு ஒருமுறைதான் கொண்டாடப்படுகிறது. கடந்த 10 ஆண்டுகளுக்குப் பிறகு, இந்த ஆண்டு அய்யனார் கோயில் திருவிழாவும், ரம்ஜான் பண்டிகையும் ஒரே நேரத்தில் வந்துள்ளதால் நாவினிப்பட்டியின் 7 கிராம மக்களும் இரட்டிப்பு உற்சாகத்தில் உள்ளனர்.

நாவினிப்பட்டியில்தான் அடைக்கலம் காத்த அய்யனார் சுவாமி கோயில் உள்ளது. இந்த கிராமங்களில் முஸ்லிம்களும், பல்வேறு சமூகங்களைச் சேர்ந்த இந்துக்களும் பரவலாக வசிக்கின்றனர். 10 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த ஆண்டு அய்யனார் கோயில் திருவிழா, கடந்த வெள்ளிக்கிழமை சுவாமி ஆட்டத்துடன் தொடங்கியது. ஜூலை 8-ம் தேதி இந்துக்களும், முஸ்லிம்களும் மண் குதிரைகளுக்கு அழகாக வர்ணம் பூசி ஊர் மந்தைக்கு கொண்டு வருவார்கள். விழாவின் முக்கிய நிகழ்வான இந்த நிகழ்ச்சியைக் காண சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருந்து 4 லட்சம் மக்கள் திரளுவார்கள். வரும் 11-ம் தேதி வரை நடைபெறும் இந்த விழாவுக்காக, தற்போது இப்பகுதி இந்துக்களும், முஸ்லிம்களும் விரதம் மேற்கொண்டு வருகின்றனர்.

இதுகுறித்து நாவினிப்பட்டி யைச் சேர்ந்த ஷாகுல் ஹமீது கூறியதாவது:

ஊர் ஒற்றுமைக்காகத்தான் அய்யனார் கோயில் திரு விழாவை தலைமுறை தலை முறையாகக் கொண்டாடுகி றோம். இந்த விழா தொடங்கிய கடந்த வெள்ளிக்கிழமை முதல் 7 கிராமங்களைச் சேர்ந்த இந்துக்கள், முஸ்லிம்கள் யார் வீட்டிலும் அசைவம் சாப்பிடுவது இல்லை. குழம்பை தாளித்து சாப்பிடுவது இல்லை. வீட்டில் எந்த விசேஷங்களும் வைப்பது இல்லை. திருவிழா முடியும் வரை, யாராவது இறந்தால் சொந்தமாக இருந்தாலும் கூட அவர்களது வீட்டுக்குச் செல்லக்கூடாது. அந்த வீட்டுக்காரர்களே எடுத்துச் சென்று உடலை அடக்கம் செய்வார்கள்.

மரங்களை வெட்டக் கூடாது. பெண்கள் பூ, பொட்டு வைக்கக் கூடாது. வெளியூர் பயணம் செல்லக் கூடாது. இந்த கட்டுப்பாடுகளை கடைப்பிடிக்க யாரும் எங்களை கட்டுப்படுத்தவில்லை. இந்த கட்டுப்பாடுகளை இதுவரை யாரும் மீறியதும் கிடையாது என்றார்.

உறவுமுறை பாராட்டும் இந்து, முஸ்லிம்கள்

வேலாயுதம் என்பவர் கூறும்போது, “ஒரு காலத்தில் இந்த 7 கிராமங்களும் ஊராக இல்லாமல் ரோட்டுக்கு ஒரு புறமுள்ள ஊரை வடக்குவளை என்றும், மற்றொருபுறம் இருக்கும் ஊரை தெற்குவளை என்றும் அழைத்து உள்ள னர். கூத்தப்பன் அம்பலம் என்பவர்தான் இந்த 7 கிராமங்களையும் உருவாக்கி உள்ளார். அப்போது ஒருவருக்கொருவர் ஒற்றுமை இல்லை. ஊர் ஒற்றுமைக்காக கூத்தப்பன் அம்பலம் இந்து, முஸ்லிம்களை அழைத்து 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை இந்தத் திருவிழாவைக்கொண்டாடும் வழக்கத்தை ஏற்படுத்தி உள்ளார். அன்று முதல் இன்று வரை 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை எந்தத் தடையும் இல்லாமல் திருவிழா நடைபெறுகிறது.

திருவிழாவில் அனைத்து சமூகங்களையும் சேர்ந்த அம்பலகாரர்களையும் அழைத்து மரியாதை செய்யப்படும். எங்கள் கிராமங்களில் இந்துக்கள், முஸ்லிம்களை மாமன், மச்சான், அண்ணன், தம்பி, தங்கை என்றுதான் உறவுமுறை சொல்லி அழைக்கிறோம். ரம்ஜான் பண்டிகைக்கு நாங்கள் நோன்புக் கஞ்சி தயாரித்து வழங்கி கொண்டாடுகிறோம். அவர்கள், எங்கள் கோயில் திருவிழாவை விரதமிருந்து கொண்டாடுவது பாரம்பரியமாக நடைபெறுகிறது” என்றார்.

படங்கள்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x